||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
067 அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே|
இராமயணத்தில், மால்யவான், இலங்கையை ஆண்ட ராவணனின் தாய்வழி தாத்தா சுமாலியின் மூத்த சகோதரர் ஆவார். இலங்கையின் மன்னனாகவும் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அரசியல் மற்றும் ஆட்சி குறித்த அரசவை தலைமை ஆலோசகராகவும், தாத்தாவாக, சிறந்த அறிவுரைகளையும் வழங்கி, மால்யவான், ராவணனுக்கு உறுதுணையாக இருந்தார். வயதானவர், அறிவாளி, அனுபவம் நிறைந்தவர்
ஆலோசகர் என்ற முறையில் மால்யவான் அறிவுறுத்தினாலும் ராவணன் செவி சாய்க்கவில்லை. தாத்தா என்ற முறையில், மால்யவான் - "ராவணா! ராமனுடன், அவனது வலு தெரியாது சண்டைக்குப்போகாதே! மனிதர்களும், குரங்குகளும் ராமனைக் காக்க உள்ளனர். நீ சிவபெருமானிடம் இருந்து வாங்கிய வரத்தில், உனக்கு மனிதர்களிடம் இருந்தோ குரங்குகளிடம் இருந்தோ ஆபத்து நேரக்கூடாது என்று இல்லை. அவர்கள் உனக்கு எதிரிகள். ஆனால், இன்றோ, இரண்டும் ஒன்று சேர்ந்து உன்னை எதிர்த்து நிற்க, நீயோ அவர்களை போருக்கு அழைக்கிறாய். அதனால் இது நீ யோசிக்க வேண்டிய விஷயம். மேலும், ராமன், ஒரு சாதாரண மனிதனாய் தெரியவில்லை. அவன் விஷ்ணுவின் அவதாரம். உன் செயல், உன் அழிவிற்கு மட்டுமல்ல, நம் இனம் அழியவும் வழி வகுக்கிறது! ஆகவே சீதையை ராமனிடம் ஒப்படைத்து, சரணடைந்து, சமாதானமாய்ப் போய்விடு.", என்று அறிவுரை கூறினார்.
மால்யவானின் இந்த அறிவுரைகளுக்கு ராவணன் செவி சாய்க்கவில்லை. இறுதியில், போரில் ஸ்ரீ ராமர் வெல்ல, ராவணன் மடிந்தான். ராவணனின் மறைவுக்குப் பின், விபீஷணன் இலங்கையின் மன்னனாக முடிசூடினான். விபீஷணனின் அரசியல் மற்றும் தலைமை ஆலோசகராக மால்யவான் இருந்தார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "மால்யவானைப் போல எம்பெருமான் பற்றி அனுகூலம் சொன்னேனோ? எம்பெருமானிடம் சரணாகதி அடையுமாறு நல்வழி கூறினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment