||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 26 - தவழும் முழந்தாள்கள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
உழந்தாள் நறு நெய்*
ஒரோர் தடா உண்ண*
இழந்தாள் எரிவினால்*
ஈர்த்தெழில் மத்தின்*
பழம் தாம்பாலோச்ச*
பயத்தால் தவழ்ந்தான்*
முழந்தாள் இருந்தவா காணீரே*
முகிழ் முலையீர்! வந்து காணீரே|
- உழந்தாள் - சிரமப்பட்டு பானையில் சேர்த்து வைத்த
- நறு நெய் - மணம் மிக்க நெய்யை
- ஒரோர் தடா - ஒவ்வொரு பானையாக அனைத்தையும்
- உண்ண - கண்ணன் அமுது செய்ததினால்
- இழந்தாள் - பிள்ளையைத் தான் இழந்து விடுவோமோ என அச்சமுற்ற தாய் யசோதை
- எரிவினால் - எரிச்சலுடன்
- ஈர்த்து - கையைப் பிடித்து இழுத்து
- எழில் மத்தின் - அழகிய மத்தினுடைய
- பழம் தாம்பால் – பழைய கயிறால்
- ஒச்ச - அடிப்பதற்காக கையிலெடுக்க
- பயத்தால் - அச்சத்தாலே
- தவழ்ந்தான் - அதிலிருந்து தப்பிப்பதற்காக தவழ்ந்து சென்ற கண்ணனுடைய
- முழந்தான் இருந்தவா காணீரே - முழங்கால்களின் அழகை வந்து பாருங்கள்
- முகிழ் முலையீர் - முகிழ்த்த அழகை உடைய பெண்களே!
- வந்து காணீரே - வந்து பாருங்கள்
அரும்பாடுபட்டு பாலை கறந்து, காய்ச்சி, தயிராகத் தோய்த்து, கடைந்து வெண்ணையாக்கி பிறகு அதை நெய்யாக்கி தடாக்களில் (பானை) கொட்டி வைத்திருந்தாள் யசோதை. குழந்தை கண்ணனோ, வெண்ணெயோடு, மணம் மிகுந்த நெய்யையும் சேர்த்து, ஒரு தடாவைக் கூட விட்டு வைக்காமல், ஒவ்வோர் பானையாக சாப்பிட்டு விட, யசோதை பல நாட்களாய் முயன்று சேர்த்து வைத்த வெண்ணெயையும், நெய்யையும் உண்டுத் தீர்த்ததனாலும், அளவுக்கு மீறி சாப்பிட்டால் குழந்தைக்கு ஜீரணமாகாது போய் விடும் என்று அஞ்சியும், அக்கறையுடன் கூடிய செல்லக் கோபத்தினால், நெய் திருடி உண்டு, அன்னைக்கு அஞ்சி தூண் மறைவில் மறைவாய் நின்று எட்டி பார்த்த கண்ணனைத் தன்னருகே இழுத்து, அருகிலிருந்த தயிரினைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதற்கு வைத்திருந்த அழகிய மத்தினுடைய கயிற்றை எடுத்து கையை ஓங்கிக் கொண்டே யசோதை, கண்ணனைத் துரத்த, அவனும் அன்னை அடித்து விடுவாளோ என்று பயந்து போய், அந்த இடத்திலே நிற்காமல், அங்கும் இங்கும் ஆட்டம் ஆடி, பின் யசோதை அருகில் வந்தவுடன், சட்டென்று கீழே முழங்காலிட்டு, தவழ்ந்து கொண்டே யசோதையிடமிருந்து தப்பிச் சென்று விட்டான். இவ்வாறு என்னிடம் இருந்து, தவழ்ந்து கொண்டே தப்பிச் சென்ற மாயவனின் முழந்தால் எத்தனை அழகாய் இருக்கின்றது என்பதை, சிறுமிகளே, முகிழ்த்த அழகை உடைய இளம் பெண்களே அனைவரும் வந்து பாருங்கள். அவன் முழங்கால் அழகையும், அதைக் கொண்டு அவன் தப்பிக்கும் அழகையும் வந்து பாருங்கள் என்று யசோதை அழைக்கிறாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment