||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
இறையின் ஸ்வரூபம்
ஸ்கந்தம் 02
விராட் புருஷனின் ஒவ்வொரு அங்கத்தையும் விவரித்த ப்ரும்மா மேலும் கூறலானார்.
"நாரதா, நீ, நான், ருத்ரன், உனக்கு முன் தோன்றிய ஸநகாதிகள், தேவர்கள், அசுரர்கள், பறவைகள், விலங்குகள், பாம்புகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், யக்ஷர்கள், அரக்கர்கள், பூத கணங்கள், ஊர்வன, பசுக்கள், பித்ருக்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், மரங்கள், நீர் வாழ்வன, நிலத்தில் வாழ்வன, விண்ணில் வாழ்வன, சூரியன் முதலான கோள்கள், அசுவினி முதலான நக்ஷத்திரங்கள், மின்னல், இடி, தூம கேது முதலான வால் நக்ஷத்ரங்கள், நடந்தது, நடப்பது, இனி நடக்கப் போவதுமான இவ்வுலகம், அத்தனையும் விராட் புருஷனே. இவை அனைத்துமே அவரது திருமேனியில் பத்து அங்குல பரிமாணத்திற்குள் அடங்கி உள்ளன.
இவர் மரண பயம் அளிக்கும் கர்ம வினைகளைத் தாண்டியவர் ஆகையால், பயமற்ற ஆனந்தத்தின் கொள் கலனாகிறார். ப்ரபஞ்ச ரூபமானவர். ஆனாலும் ஆனந்தத்தின் வைப்பிடம். அவரது பெருமை அவரது உருவத்தைப் போன்றே எல்லை அற்றது."
இதன் பின் ஒவ்வொரு லோகத்தின் வசிப்பவர்களின் ஆனந்தத்தின் தன்மையை விளக்குகிறார் ப்ரும்மா.
"இந்த ப்ரும்மாண்டத்தைத் தோற்றுவித்த இறைவனிடமிருந்தே ஐம்பெரும் பூதங்களும், பொறிகளும், ஸத்வம் முதலான தத்வங்களும் தோன்றின. இருப்பினும் அவற்றில் ஒட்டாமல் தனித்துப் பரிணமிக்கிறார். சூரியன் எவ்வாறு ஒளி தந்து உலகை விளங்க வைத்தாலும் தான் அதில் ஒட்டாது தனித்து விளங்குகிறாரோ, அது போல், அந்தர்யாமி அகிய அந்த இறைவனின் தொப்புளில் இருந்து வெளி வந்த தாமரை மலரில் நான் தோன்றிய போது, வேள்வியால் அவரை ஆராதிக்க எப்பொருளும் இருக்கவில்லை.
பின்னர் அவருடைய அவயவங்களில் இருந்தே வேள்விக்கான அனைத்தையும் பெற்றுக் கொண்டேன். அவரிடம் இருந்து பெற்ற பொருள்களைக் கொண்டே அவரை வேள்விகளால் ஆராதனை செய்தேன்.
அதன் பின் தோன்றிய ஒன்பது ப்ரஜாபதிகளும் (மரீசி, அத்ரி, ஆங்கீரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது, ப்ருகு, வசிஷ்டர், தக்ஷன்) அவ்வாறே மனத்தை ஒருமைப்படுத்தி பூஜித்தனர்.
அதன் பின்னர் ஸ்வாயம்புவ மனு முதலான மனுக்களும், ரிஷிகளும், பித்ருக்களும், தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் தோன்றினர். காலம் கிடைத்த போதெல்லாம் வேள்விகள் செய்து இறையை வழிபட்டனர்.
ஸ்ரீமந் நாராயணன் எவ்வொரு குணத்திற்கும் ஆட்படாதவர். நிர்குணர். ஆனால், படைப்பிற்காக கல்யாண குணங்களை மேற்கொள்கிறார். ஸகுணராகிறார். அவரே ப்ரபஞ்சத்தின் ஆதாரமானவர்.
நான் எப்போதும் இறைவனை ஏக்கமும், அன்பும் கொண்ட இதயத்துடன் த்யானித்து வருவதால் என் வாக்கு பொய்ப்பதே இல்லை. தவறான எண்ணங்களும் தோன்றுவதில்லை. புலன்களும் தீய வழியில் செல்வதில்லை. தவமே வடிவு எடுத்ததோ என்று அனைவரும் எண்ணும்படி இறைவனை நினைத்து தவம் செய்துள்ளேன். யோகப் பயிற்சியும் செய்தேன். நானே ப்ரஜாபதிகள் அனைவர்க்கும் தந்தை.
இவ்வளவு இருந்தும் என்னால் இறைவனை முழுமையாக அறிய முடியவில்லை. அவரது திறன் எல்லை அற்றது. இது வரை அவரது ஸ்வரூபத்தை அறிந்தவர் எவரும் இல்லை. இருப்பினும் என்னால் இயன்ற அளவிற்கு அவரது ஸ்வரூப லக்ஷணங்களைக் கூறுகிறேன். இறைவன் அணு அளவும் மாயை அற்றவர். சுத்த ஞான ஸ்வரூபி. அந்தராத்மாவின் வடிவில் அனைத்திலும் நிறைந்து இருப்பவர். மூன்று காலங்களிலும் விளங்கும் உண்மைப் பொருள். அவருக்குத் துவக்கமும் இல்லை. முடிவும் இல்லை. தொன்மையானவர். முக்குணங்களும் அற்றவர். அவரைத் தவிர இரண்டாவதாக வேறு ஒரு பொருள் அற்றவர்.
மனம், பொறிகள், மற்றும் உடலைத் தன்வயப்படுத்திய முனிவர்கள் தியானத்தின் மூலம் இறைவனை அறிகிறார்கள். தீயொழிக்கம் நிரம்பியவர்களுக்கு உள்ளுறையும் உண்மை மாயையினால் மறைக்கப் படுவதால் அது புலப்படுவதில்லை. எவ்வளவு அறிந்தாலும், ஸமுத்திரத்தின் கரையில் நிற்கும் ஒருவன் அதை எவ்வாறு முழுமையாய் உணர மாட்டானோ அது போல் இறைவனையும் முழுமையாக உணர்பவர்கள் எவரும் இல்லை. விராட் புருஷனே இறைவனின் முதல் திருத்தோற்றம் (அவதாரம்)."
அதைத் தொடர்ந்து இறைவனின் பல்வேறு அவதாரங்களை நாரதருக்கு எடுத்துக் கூறுகிறார் ப்ரும்ம தேவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment