||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
சிசுபாலனின் வதம்|
ஆனால் கிருஷ்ணர் இப்படி வணங்கப்படுவதை அவையிலுள்ள ஒருவனால் சகிக்க முடியவில்லை. அவன் தான் தமகோஷரின் புத்திரனான சிசுபாலன். அவன் எழுந்து நின்று உரத்த குரலில், "போதும் உங்கள் அசட்டுத்தனம்!" என்று கத்திவிட்டு, மிகுந்த கோபத்துடன் கிருஷ்ணரை இழிவாகப் பேச ஆரம்பித்தான்.
"பெரியவர்களுடைய மூளை எல்லாம் ஏன் இப்படிக் குழம்பிப் போயிற்று என்பது எனக்கு விளங்கவில்லை. பெரியவர்களாகிய உங்களுக்கு விஷயம் தெரிய வேண்டியிருக்க, சிறுவன் சகாதேவன் சொன்னதை எல்லோரும் கேட்டுவிட்டீர்கள். இந்தக் கௌரவத்தை அடையக் கிருஷ்ணருக்கு என்ன தகுதி இருக்கிறது? அவன் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். அவன் அரசனன்று, ஆட்டிடையன். சிறையில் பிறந்து, இடையனாக வளர்ந்தவன்; எப்படி அவன் அரசர்களோடு சரி சமமாக வீற்று இருக்க முடியும்? இங்கு எத்தனையோ பெரியவர்கள் இருக்கிறார்கள். தவத்தினாலும் படிப்பினாலும் ஆசாரத்தினாலும் உயர்ந்த எத்தனையோ தவ சிரேஷ்டர்கள் இந்த அவையில் உள்ளனர்.
அவர்களுக்கு ஏன் இந்தக் கௌரவம் அளிக்கப்படவில்லை?"
இந்த முறையில் சிசுபாலன் கிருஷ்ணரை அவதூறாகப் பேசிக் கொண்டே போனான். கடைசியில் அவையில் ஒரு நிமிடம் மௌனம் நிலவியது. கிருஷ்ணர் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் ஒரு மாறுதலும் தோன்றவில்லை. நரியின் ஊளையைச் சிங்கம் பொருட்படுத்தாமல் இருப்பது போல அவர் பேசாமல் இருந்தார்.
ஆனால் கிருஷ்ணரிடம் மரியாதை வைத்திருந்த பல பெரியோர், சிசுபாலனின் வசவுகளைக் கேட்கப் பொறுக்காமல், காதுகளை மூடிக் கொண்டு, சிசுபாலனைச் சபித்து விட்டு வெளியே சென்றனர். ஆனால், பாண்டவர்களால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்தனர். சிசுபாலனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தனர்.
அவர்களோடு இன்னும் பல அரசர்களும் சேர்ந்து கொண்டனர். ஆனால் அவர்களைப் பொறுத்துக் கொள்ளும்படி கிருஷ்ணர் சைகை காட்டினார். ஆனால் சிசுபாலனோ, சண்டை போடக் கத்தியையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். ஆனால் கிருஷ்ணரோ, நொடிப் பொழுதில் தம்முடைய சக்கர ஆயுதத்தினால் அவன் தலையை அறுத்து விட்டார்.
சிசுபாலன் செத்துக் கீழே விழுந்ததும் பெரிய ஆரவாரம் ஏற்பட்டது. எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். யுதிஷ்டிரர் யாகத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தார். கிருஷ்ணருக்கு அக்கிர பூஜையும் செய்து முடிக்கப்பட்டது. யாகம் முடிந்த பிறகு எல்லா அரசர்களும் அவரவர்கள் இருப்பிடம் திரும்பினர். யாக காரியங்கள் முழுவதாக முடியும்வரை கிருஷ்ணர் அங்கே இந்திரப் பிரஸ்தத்தில் இருந்துவிட்டு, பிறகு துவாரகை திரும்பினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment