||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
வால்மீகி ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்? காதுகள் என்கிற மடல்களில், வால்மீகி முனிவரின் முகம் என்கிற தாமரையில் இருந்து வெளிப்பட்ட ராமாயணம் என்னும் தேனை அடிக்கடி வாங்கி, விருப்பத்தோடு குடிப்பவர்கள், உபத்ரவம் மிகுந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு சாஸ்வதமான விஷ்ணு பகவானின் பதத்தை அடைவார்கள்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்
வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசரதாத்மஜே |
வேத ப்ரசேதஸா தாசீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா ||
பகவான்னு ஒருத்தர் இருக்கார்! என்று வேதம் நமக்கு காட்டிக் கொடுத்திருக்கு. அந்த வேதம் கூறிய பரம் பொருளானது, பூமியிலே ஸ்ரீ தசரத குமாரனாய், ஸ்ரீராமராக அவதாரம் செய்தவுடனே, அந்த வேதம் பார்த்தது. “இந்த பகவானே ஸ்ரீராமராய் அவதாரம் செய்து விட்டார். இனி நாம் என்ன செய்ய வெண்டும்?”, என்று எண்ணி வேதமானது ஸ்ரீ வால்மீகி முனிவரின் வாயிலாக ஸ்ரீமத் ராமாயணமாக வெளிப்பட்டு விட்டது. இது தான் இந்த ஸ்லோகத்துக்கு பொருள்.
வேதம் தான் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்! அதை வெளிப்படுத்தின முனிவர், மகரிஷி வால்மீகி பகவான். அந்த வால்மீகி முனிவரின் பூர்வ சரித்திரம் என்ன?
முன்னொரு காலத்தில், ரத்னாகரன் என்ற ஒருவன் குடும்பத்தோடு காட்டில் வாழ்ந்து வந்தான். குடும்ப வறுமை காரணமாக கொள்ளை அடிக்கும் தொழிலை மேற்கொண்டான்.யாராவது, அந்த காட்டின் வழியே போனால் அவர்களுடைய பொருட்களை அபகரித்து, அதில் வாழ்ந்து வந்தான்.
ஒரு முறை அவனுடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தினால், சப்த ரிஷிகள் அந்த வழியே வந்தார்கள். எப்போதுமே கத்தியை எடுத்துக் கொண்டு போகும் அவன், அவர்களைப் பார்ததுமே மனதில் சிறிது சாந்தம் ஏற்பட, ஆனாலும் அவர்களிடம் போய், “யார் நீங்கள்? எங்கு வந்தீர்கள்? இருப்பதெல்லாம் கீழே வையுங்கள். வைத்து விட்டு, பேசாமல் ஓடிப் போங்கள்!”, என்றான்.
அதற்கு அவர்கள், “எங்கக் கிட்ட ஒண்ணுமே இல்லயே, அப்பா!” என்றார்கள்.
“ஒண்ணுமே இல்லையா? அப்போ என்ன செய்வீர்கள்?”
“நாங்க பகவானை ஸ்மரித்துக் கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு எதுவும் தேவை இல்லை. சதா பகவத் த்யானத்திலே இருக்கோம். அதனால் ஆனந்தமாக இருக்கிறோம்.”
“ஆமா! பார்த்தாலே தெரிகிறது நீங்கள் சாந்தமாக, ஆனந்தமாக இருக்கிரீர்கள். ஆனால், உங்களிடம் ஒன்றும் இல்லை! எங்கிட்ட எவ்வளவு இருக்கு தெரியுமா? நிறைய இருக்கு. கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறேன்.”
“ஆனால், நீ இப்படி சேர்த்து வைத்த பணமெல்லாம், பண மூட்டை இல்லை! இதெல்லாம் பாவ மூட்டை! இதற்காக நரகத்தில் கஷ்டப்படுவாயே” என்று கருணையினால் பதில் கூறினார்கள்.
“ஏன்? என்னக் கஷ்டம்?”
“இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு சுவர்க்கம், நரகம் என்று உள்ளது. இங்கே நல்ல வாழ்க்கை வாழ்ந்தால், அதாவது புண்ணிய காரியங்கள் செய்தால், சுவர்க்கம் செல்வார்கள். பாவச் செயல்கள் செய்தால் நரகத்திற்கு செல்வார்கள். நரகத்தில், பலவிதமான தண்டனைகளை பெற்று அவதிப் பட வேண்டி இருக்கும்.”
“அப்படியா? இதெல்லாம் நான் என் மனைவி குழந்தைகளுக்காகத் தானே செய்கிறேன். அவர்கள் எல்லோரும் அதை பகிர்ந்துக் கொள்வார்கள்”.
அப்போது அந்த முனிவர், 'எதற்காகத் திருடுகிறாய்?’ உன் குடும்பத்தை வாழ வைக்க தானே? என்று கேட்டார். 'ஆமாம்’ என்றார் வால்மீகி. 'அப்படியானால் இந்த பாவங்களுக்கு உனது குடும்பத்தினரும் பங்கு ஏற்றுக் கொள்வார்கள் தானே?’ என்று கேட்டார் முனிவர். 'ஆமாம்’ என்றார் வால்மீகி. 'இதை உன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்கிறார்களா என்று கேட்டு வா’ என்றார் முனிவர்.
உடனே முனிவரைக் கட்டிப் போட்டுவிட்டு தனது வீட்டுக்கு வால்மீகி போனார். குடும்பத்தினரிடம் இந்தக் கேள்வியை கேட்டார்.
உடனே ரத்னாகரன் வீட்டுக்கு வந்து தன் மனைவி, அப்பா, அம்மா, குழந்தைகளிடம், “நான் நிறைய பாவம் செய்துவிட்டதாக சொல்கிறார்கள். அதையெல்லாம் நீங்கள் வாங்கிக் கொள்வீர்களா? பகிர்ந்துக் கொள்ளுகிறீர்களா?”என்று கேட்டான். அதற்கு அவர்கள் “அதை எதுக்கு நாங்க பகிர்ந்து கொள்ளணும்? எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். நீங்கள் நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியது தானே? நீங்கள் பாவ வழியில் சம்பாதித்தால், அதற்காக நாங்கள் அந்த பாவத்தை வாங்கிக் கொள்ள மாட்டோம்! பெற்றவர்களை காப்பாத்த வேண்டியது உங்கள் கடமை. மனைவி குழந்தைகளை காப்பாத்த வேண்டியது உங்கள் கடமை. அதற்கு நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியது உங்கள்கடமை. அதை விட்டு விட்டு தப்பு வழியில் சம்பாதித்தது உங்கள் தவறு.”
இதைக் கேட்டவுடன், இரத்னாகரனுக்கு அகக்கண் திறந்து விட்டது. அவர் உடனே திரும்பி வந்து, ரிஷிகளையெல்லாம் நமஸ்காரம் செய்து, “அறியாமல் இது போன்ற தப்பு வழிகளில் இவ்வளவு நாள் இருந்து விட்டேன். மிகவும் கடுமையான பாவங்களை எல்லாம் செய்திருக்கிறேன். எனக்கு ஏதாவது கதி இருக்கிறதா? வழி இருக்கிறதா? நீங்கள் கூற வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான்.
“நீ, ‘ராம! ராம! ராம!’ என்று ராம நாமத்தை நாமத்தை சொல்லுப்பா. ராம நாமம் ஜபம் எல்லாப் பாவத்தையும் போக்கும்!” என்று அவர்கள் பதில் உரைத்தனர்.
ஆனால், இவருக்கோ, ‘ராம’ என்று கூட சொல்ல வரவில்லை. உடன் அருகில் இருந்த மரா மரத்தை காட்டி, “இது என்ன?” என்றனர்.
“இது, மரா மரம்.” “மரா, மரா என்று சொல்!”
“மரா!” “ஹ்ம்ம்.. இதையே நீ திருப்பிப் திருப்பி சொல்லிக் கொண்டிரு!” என்று கூறி அவர்கள் சென்று விட்டனர்.
இப்படி ‘மரா மரா மரா’ என்று கூறினால் ‘ராம ராம ராம’ என்று வரும். இரத்னாகரனாய் இருந்த அவரும் இப்படியாக ‘ராம ராம ராம’ என்று சொல்லி, அவருக்கு ‘ராம’ நாமத்தில் ருசி வந்து விட்டது. ஜென்ம ஜென்மாவாக புண்ணியம் செய்திருந்தால் தான் ‘ராம’ நாமத்தில் ருசி வரும்.
வேடனாய் இருந்த அவருக்கு, ரிஷிகளின் போதனையால், ‘ராம’ நாம ருசி வந்து விட்டது. அவர் ராப்பகலாய் பசி தாகத்தை மறந்து, ‘ராம ராம ராம’ என்று சமாதி எனும் நிஷ்டையில் இருந்தார்.
அசையாமல் அப்படி அவர் இருந்ததால், அவர் மேல் எறும்புகள் எல்லாம் புற்றுக் கட்டி விட்டது. ஆனால், அவருக்கு அது கூட தெரியவில்லை. இப்படி அவரிடம் இருந்த எல்லா பாவங்களும் நீங்கி, பரம புண்ணிய பாவனனாய், ஒரு மகரிஷியாக ஆகி விட்டார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment