About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பத்தி நான்காவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

034 இடை கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே|

முதலாழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்கள் - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். இவர்கள் மூவரும் சமகாலத்தவர்கள் மட்டுமல்லாமல், ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். தனித்தனியே பரம்பொருளான ஸ்ரீ நாராயணனுக்கு அடிமை பூண்டு, அவன் புகழ் பாடித் திரிந்த அவர்களை ஓரிடத்தில் சந்திக்க வைக்கும் லீலையை, அற்புதத்தை, தனது ஆசையை ஸ்ரீமன் நாராயணன் நிகழ்த்தினார்!!


மூவரும், தனித்தனியே திருக்கோவலூர் க்ஷேத்திரத்தில் அரசாலும் உலகளந்த பெருமாளை தரிசிக்க வந்தனர். தரிசனம் முடிந்து, இரவுப் பொழுது, பலத்த மழை பெய்ய, மழைக்கு ஒதுங்க எண்ணினார். ஒரு ஆசிரமம் கண்ணில் பட்டது. ஆசிரமத்தின் கதவைத் தட்டினார். அதிலிருந்து 
மிருகண்டு முனிவர் வந்தார்.

"மழை நிற்கும் வரை இங்கு தங்க இடம் உண்டா?" என்றார் பொய்கையாழ்வார்.

இந்த இடைக்கழிதான் உண்டு என்றபடியே ஒரு ரேழியைக் காட்டிவிட்டு போனார்.

சின்ன ரேழி. வெளிச்சமும் இல்லை. ஒருவர் மட்டுமே படுக்க முடியும். சரி, அங்கேயே தங்கிவிட்டு, காலையில் பெருமாளை சேவிக்கலாம் என எண்ணினார். உறங்கிக் கொண்டிருந்த நேரம், யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு விழித்தார்! மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை. பொய்கையாழ்வார் போய்க் கதவைத் திறந்தார். வாசலில் பூதத்தாழ்வார் நின்றிருந்தார். "மழைக்கு தங்க இடம் கிடைக்குமா"? என்று கேட்டார். 


பொய்கையாழ்வார், அதற்கு, “இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம்! உள்ளே வாருங்கள்!” என்று கூறி இடமளித்தார். பூதத்தாழ்வார் உள்ளே போனார். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இயலாமல் இருட்டு. இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி உரையாட ஆரம்பித்தார்கள். கடலை மட்டுமே சேர விரும்பும் இரு மழை துளிகள் போல் அவர்கள் இருவரும் பரமாத்மாவை மட்டும் எண்ணி, அவன் புகழ் பாடி வாழ்பவர்கள் என்பதை அறிந்து, நேரம் போவது அறியா வண்ணம், இருவரும் பகவானின் லீலைகளைப் பற்றி தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்த நேரம், மீண்டும் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு மீண்டும் இவ்வுலகிற்கு வந்தனர்.


கதவை திறந்து பார்த்த பொழுது, வாசலில் நின்ற பேயாழ்வார், தான் தங்க இடம் கேட்க, “இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்!! உள்ளே வாருங்கள்!” என்று கூறி அவ்விருவரும் பேயாழ்வாரை வரவேற்றனர். நெருக்கி நின்று கொண்டு மூவரும், தாங்கள் மூவரும் பரமாத்மாவை மட்டும் எண்ணி, அவன் புகழ் பாடி வாழ்பவர்கள் என்பதை அறிந்து, பேரானந்தத்துடன் இறைவனின் பெருமையை சொல்லியும், பாடியும், கேட்டும் மகிழ்ந்தனர். 


இந்த சந்தோஷ சூழ்நிலையில், அவர்களது பாசுரங்களைக் கேட்க, மூன்று ஆழ்வார்களின் மத்தியில் இருக்க விரும்பி எம்பெருமானும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் புலன்களுக்கு அகப்படாமல் இடைக்கழியில் வந்து நெருங்கி நின்றார் (இதனாலேயே, இங்கு பெருமாளுக்கு நெருக்கி நின்ற பெருமாள் என்று பெயர்) அவரைத் தொடர்ந்து, பிராட்டியார் இருவரும் அங்கு வந்தனர். அவர்கள் மூவரும் இல்லா இடத்தில் தங்களுக்கு என்ன வேலை என்பது போல், மூவரையும் தொடர்ந்து, ஆதிசேஷனும் கருடாழ்வாரும் அங்கு வந்தனர்! அந்த சிறிய இடத்தில் அனைவரும் வந்து நெருக்க, யார் தங்களை நெருக்குவது என்ற கேள்வி ஆழ்வார்கள் மனத்தில் எழுந்தது. 


நெருக்கத்தின் காரணத்தை அறிய, பொய்கையாழ்வார்: “வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச்  செய்ய, சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர் ஆழி நீங்குகவே என்று” என்ற பாசுரத்தை பாடினார். “இவ்வுலகை அகழியாக கொண்டு, கடலை நெய்யாகக் கொண்டு, அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவது போல் காட்சியளிக்கும் கதிரவனை திரியாகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன். இந்த இருள் நீங்கட்டும்!” என்றார்

அவரைத் தொடர்ந்து, பூதத்தாழ்வார்: அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு ஞானச் தமிழ் புரிந்த நான், என்ற பாசுரத்தை பாடினார். “அன்பை அகழியாகக் கொண்டு, இறைவனையும் அவன் குணங்களையும் அறியும் ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு, அறிவை திரியாகக் கொண்டு திருமாலுக்கு விளக்கேற்றினேன்.” என்றார்

இவர்கள் ஏற்றிய விளக்கின் ஒளியில், இருள் அகல, உலகளந்த பெருமாள்! திருவிக்கிரமன், பரமாத்மாவை கண்ட பேயாழ்வார்: திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன், செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று, என்ற பாசுரத்தின் வழியாக, “பரிந்துரை கூறி நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் பிராட்டியைக் கண்டேன். தாயாருடைய சேர்க்கையின் மூலம் நிறம் பெற்ற திருமாலின் திருமேனியைக் கண்டேன். சூரியன் போன்ற அழகிய நிறத்தையும் கண்டேன். போரில் சீறும் திருச்சக்கரத்தையும், மற்றொரு திருக்கையில் உள்ள திருச்சங்கினையும் சேவிக்கப் பெற்றேன்” என்றார்.

முதலாழ்வார்கள் மூவரும், நெருக்கத்தின் காரணம், திருமாலே என்று உணர்தனர். இறைவனை கண்ட காட்சியில், உள்ளம் உருகி அவனுள்ளமும் கனியும் வண்ணம் பாசுரங்களை பாடினார்கள்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “முதலாழ்வார்கள் போல், அவனருளால் அறியாமை எனும் இருள் நீங்கி அவனைக் காணும் பாக்கியத்தைப் பெற்றேனா?” அப்படிப்படட் எம்பெருமானை இடைக்கழியில் இருட்டில் கண்ட பெருமை எனக்கு இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment