||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 21 - கண்ணனின் துடுக்குத்தனம்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கிடக்கில் தொட்டில்* கிழிய உதைத்திடும்*
எடுத்துக் கொள்ளில்* மருங்கை இறுத்திடும்*
ஒடுக்கிப் புல்கில்* உதரத்தே பாய்ந்திடும்*
மிடுக்கிலாமையால்* நான் மெலிந்தேன் நங்காய்|
- கிடக்கில் - இப்பிள்ளையானவன் தொட்டிலில் கிடந்தானாகில்
- தொட்டில் - தொட்டிலானது
- கிழிய - சிதிலமாகும்படி
- உதைத்திடும் - கால்களினால் உதைக்கிறான்
- எடுத்துக் கொள்ளில் - இவனை இடுப்பில் எடுத்துக் கொண்டால்
- மருங்கை - இடுப்பை
- இறுத்திடும் - முறிக்கிறான்
- ஒடுக்கி - இவனுடைய கை கால்களை ஒடுக்கி
- புல்கில் - மார்வில் அணைத்துக் கொண்டால்
- உதரத்து - வயிற்றிலே
- பாய்ந்திடும் - பாய்கிறான்
- மிடுக்கு - இச்சேஷ்டைகளைப் பொறுக்கவல்ல சக்தி
- இலாமையால் - இப்பிள்ளைக்கு இல்லாமையால்
- நான் - தாயாகிய நான்
- மெலிந்தேன் - மிகவும் இளைத்தேன்
- நங்காய் - பூர்ணகளான ஸ்த்ரீகளே
கண்ணன் ஒரு சிறு குழந்தை போல் தோன்றினாலும் அவன் செய்யும் சேஷ்டிதங்களோ அவன் ஒரு அசாதாராணமானவன் என்று யசோதைக்கும் மற்றும் அங்குள்ள பெண்டிதர்களுக்கும் புரிய ஆரம்பிக்கிறது. குழந்தையை தொட்டிலில் விட்டால், தொட்டில் உடைய தன் இளம் கால்களால் உதைக்கிறான். சரி, தொட்டில் வேண்டாம் என்று இடுப்பில் வைத்து கொள்ளும் போது இடுப்பை வளைத்து நெருக்குகிறான், கை கால்களை ஒடுக்கி மார்பில் அணைத்தாலோ வயிற்றில் வேகமாக பாய்கிறான். இந்த விநோதமான விளையாட்டுக்களை தாங்க முடியாமல் தன் உடம்பே இளைத்து விட்டது என்று யசோதை சக தோழிகளிடம் கூறுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது. இதற்கு மற்றொரு அர்த்தமாக, இச்சேட்டிதங்களால் குழந்தையான கண்ணனுக்கு ஸ்ரமமேற்பட்டு அவன் இளைத்து விட்டான் என்று யசோதை கவலைப் படுகிறாள் என்பதாக சில விமர்சகர்களின் கருத்து.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment