About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

108 திவ்ய தேசங்கள் - 006 - திருப்பேர் நகர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

006. திருப்பேர் நகர் 
கோவிலடி – திருச்சி
ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ அப்பக்குடத்தான் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ இந்திராதேவி தாயார் ஸமேத ஸ்ரீ அப்பக்குடத்தான் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: அப்பக்குடத்தான்

  • பெருமாள் உற்சவர்: அப்பால ரங்கநாதர்
  • தாயார் மூலவர்: இந்திராதேவி
  • தாயார் உற்சவர்: கமலவல்லி
  • திருமுக மண்டலம் திசை: மேற்கு
  • திருக்கோலம்: புஜங்க சயனம்
  • புஷ்கரிணி: இந்திர
  • தீர்த்தம்: திருக்காவேரி, கொள்ளிடம்
  • விமானம்: இந்திர
  • ஸ்தல விருக்ஷம்: புரஷ
  • ப்ரத்யக்ஷம்: உபமன்யு, பராசரர்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 4 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள்: 33

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு "அப்பக்குடத்தான்' என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்பெருமாளின் வலது கை ஒரு அப்பக்குடத்தை அணைத்த வண்ணம் உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் போக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம். மிகவும் பழமையான இத்தலம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்றும், அதனால் தான் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆதியாக அடியெடுத்து வைத்த தலம் என்பதால் "கோவிலடி' எனப்பட்டது என்றும் கூறுவர். நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அவர் இப்பெருமாளை பாடி விட்டுத் தான் மோட்சத்திற்கு சென்றார். எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு வைகுண்ட வாசம் நிச்சயம் என்பது ஐதீகம். பெருமாள் மேற்கு பார்த்தும், தாயார் கிழக்கு பார்த்தும் "தம்பதி ஸமேத பெருமாளாக' அருள் பாலிக்கிறார். 

திருமங்கையாழ்வார் இவரை மங்களாசாசனம் செய்து விட்டு திருவெள்ளறை செல்கிறார். அப்பக்குடத்தான் தொடர்ந்து அங்கும் செல்கிறார். இதைக் கண்ட திருமங்கையாழ்வார், திருவெள்ளறையில் வைத்து மீண்டும் இவரை மங்களாசாசனம் செய்கிறார்.

பெருமாளின் "பஞ்சரங்க தலம்' என்று சொல்லக் கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று.

  • 1. ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்)
  • 2. அப்பால ரங்கம் - திருப்பேர்நகர் (கோவிலடி)
  • 3. மத்திய ரங்கம் - ஸ்ரீரங்கம்
  • 4. சதுர்த்த ரங்கம் - கும்பகோணம்
  • 5. பஞ்ச ரங்கம் - இந்தளூர் (மயிலாடுதுறை)

இந்த பஞ்ச ரங்க வரிசையில் பார்த்தால் கோவிலடி ஸ்ரீரங்கத்திற்கும் முற்பட்டது என விளங்கும்.

உபமன்யு என்ற மன்னன் கோபக்கார துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தர வேண்டி துர்வாசரிடம் மன்றாடினான். அதற்கு துர்வாச முனிவர், 'மன்னா! பலசவனம் எனப்படும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்', என்றார். இதன்படி மன்னன் கோயிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்து வந்தான். இந்த அன்னதானம் நீண்ட நாள் நடந்தது. ஒரு நாள் வைகுண்ட நாதனான ஸ்ரீமன் நாராயணன், வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க, அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. மன்னனை சோதனை செய்ய நினைத்தார் பெருமாள். அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட உணவு அனைத்தையும் உண்டு தீர்த்தார். இதனால் ஆச்சரியப்பட்ட மன்னன், 'ஐயா! தங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்,' என கேட்டான். அதற்கு அவர், 'எனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும்,'என்றார். அதன்படி அப்பம் செய்து கொண்டு வரப்பட்டது. அந்த அப்பக்குடத்தை பெருமாள் வாங்கியவுடன் உபமன்யுவின் சாபம் தீர்ந்தது என தல வரலாறு கூறுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment