||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 20 - பெயர் சூட்டு விழா
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
பத்து நாளும் கடந்த* இரண்டாம் நாள்*
எத் திசையும்* சயமரம் கோடித்து*
மத்த மா மலை* தாங்கிய மைந்தனை*
உத்தானம் செய்து* உகந்தனர் ஆயரே|
- பத்து நாளும் கடந்த - பத்து நாளும் கழிந்த
- இரண்டாம் நாள் - பன்னிரண்டாம் நாளான நாம கரண தினத்திலே
- எத்திசையும் - எல்லாத் திக்குக்களிலும்
- சயம் மரம் - ஜய தோரண ஸ்தம்பங்களை
- கோடித்து - நாட்டி அலங்கரித்து
- மத்தம் மா - மதம் பிடிக்குந் தன்மையுள்ள மிருகமாகிய யானைகள் தங்கியிருக்கிற
- மலை - கோவர்த்தன பர்வதத்தை
- தாங்கிய - குடையாக ஏந்தி நின்ற
- மைந்தனை - குழந்தையாகிய கண்ணனை
- உத்தானம் செய்து - கைத்தலத்திலே வைத்துக் கொண்டு
- உகந்தனர் - ஸந்தோஷித்தார்கள்
- ஆயர் - இடையரானவர்கள்
குழந்தை கண்ணன் பிறந்த பன்னிரண்டாம் நாளன்று, ஆயர்ப்பாடி முழுவதும் நன்மைக்கும், மங்கலத்திற்கும் அறிகுறியான வெற்றித் தூண்கள் நடப்பட்டு, எங்கும் வண்ண வண்ண ஜெய தோரணங்கள் கட்டி, சுயம்வரம் நிகழும் இடத்தினைப் போல் அலங்கரித்திருந்தனர். சிசுவிற்கு ஸ்ரீ கிருஷ்ணன் என்ற நாமகரணம் சூட்டி மகிழ்ந்தார்கள் ஆயர்பாடியர். ஆயர்கள் அனைவரும் குழந்தையான ஸ்ரீ கிருஷ்ணனைத் தங்கள் கைகளில் எடுத்து ஏந்திக் கொண்டு புனித நீராட்டல் செய்ததும், ஆனந்தித்தார்கள். மதம் கொண்ட யானைகள் நிறைந்த கோவர்த்தன மலையை தன் சிறு கையாலேயே தூக்கிப் பிடித்து ஆயர்களையும், ஆநிரைகளையும் இந்திரனுடைய கொடுமையிலிருந்து காப்பாற்றிய வீரமகன் கண்ணபிரானின் பராக்ரமத்தை நினைவு கூருகிறார் ஆழ்வார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment