About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அகாசுரன் வதம்|

காட்டுக்குள் சென்று தன் நண்பர்களுடன் வன போஜனம் செய்ய வேண்டுமென்று ஒரு நாள் கிருஷ்ணன் ஆசைப்பட்டான். அதனால் அவன் காலையில் சீக்கிரமே எழுந்து கொம்பை பலமாக ஊதி, தன் நண்பர்களை எழுப்பினான். அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தும், வன போஜனத்தைப் பற்றிய தன் யோசனையைச் சொன்னான். இதைக் கேட்டுச் சிறுவர்கள் சந்தோஷப் பட்டார்கள். கன்றுகள் முன்னே செல்ல, அவர்கள் எல்லாரும் மிக்க குதாகலத்துடன் பின்னால் சென்றார்கள். அவர்கள் தங்களுடன் சித்திரான்னம், தயிர் கூடைகள், கவண்கள், பிரம்புகள், கொம்பு வாத்தியங்கள், புல்லாங்குழல் முதலியவற்றை எடுத்துக் கொண்டு சென்றார்கள். கிருஷ்ணனைத் தங்கள் தலைவனாகக் கொண்டு அவர்கள் பல விளையாட்டுகளை விளையாடினார்கள்.


அப்போது பூதனைக்கும் பகாசுரனுக்கும் தம்பியான அகாசுரன் என்பவன் அங்கே வந்து சேர்ந்தான். சிறுவர்கள் உற்சாகமாக விளையாடுவதைப் பார்க்க அவனுக்கு பொறுக்கவில்லை. "அதோ சிறுவர்களுக்கு நடுவில் புல்லாங்குழலுடன் காணப்படுகிறானே அவன் தான் என் தமக்கையும் என் தமையனையும் கொன்றவன். அவனைக் கொன்று என் பழியைத் தீர்ந்துக் கொள்கிறேன்" என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். இப்படி நினைத்துக் கொண்டே அந்தக் கொடிய அசுரன் ஒரு பெரிய மலைப் பாம்பு போல் உருவம் எடுத்தான். அது எட்டு மைல் நீளம் இருந்ததோடு குறுக்கில் ஒரு பெரிய மலையைப் போல இருந்தது. இந்தப் பூதகரமான வடிவத்தை எடுத்துக் கொண்டு வாயைத் திறந்து கொண்டு வழியில் படுத்து விட்டான். அதன் வாய் ஒரு பெரிய குகையைப் போல இருந்தது. கிருஷ்ணனும் அவனுடைய நண்பர்களும் அதனுடைய வாயைக் குகை என்று நினைத்துக் கொண்டு, உள்ளே நுழைவார்கள் என்று காத்திருந்தான். அவனுடைய கீழ் உதடு பூமியையும் மேல் உதடு வானத்தையும் தொட்டன. வாய் ஒரே இருட்டாக இருந்ததனால் அதன் நாக்கு ஓர் அகன்ற வீதி போல தோற்றமளித்தது. அவனுடைய மூச்சு பெரும் காற்றைப் போல அடிக்க அவனுடைய கண்கள் நெருப்பைப் போல பிரகாசித்தன. 


சிறுவர்கள் தூரத்திலிருந்து அதைப் பார்த்தார்கள். அது ஓர் உயிருள்ள மலைப் பாம்பு என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மலைப்பாம்பு உருவம் கொண்ட ஓர் அழகிய குகை என்று தான் அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் தங்களுக்குள் தர்க்கம் செய்தார்கள். அது என்ன தான் என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு அந்தக் குகை வாயிலுக்குள் நுழைய அவர்கள் விரும்பினார்கள். அது மலை பாம்பகாகவே இருந்தாலும் கூட தங்கள் பிரியமான கிருஷ்ணன் அதைக் கொன்று தங்களைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. கிருஷ்ணனின் வசீகரமான முகத்தை அவர்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டே பலமாகச் சிரித்துக் கொண்டும் கைகளைக் தட்டிக் கொண்டும் குகை வாயில் போல இருந்த அந்த மலைப் பாம்பின் வாயில் அவர்கள் நுழைந்தார்கள். 

அது உயிருள்ள மலைப் பாம்பு என்பதும் அதற்குள் நுழைந்தால் நிச்சியம் மரணம் தான் என்பதும் கிருஷ்ணனுக்கு தெரியும். அதனால் தன் நண்பர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களை தடுக்கப் பார்த்தான். ஆனால் அதற்குள் கிருஷ்ணனைத் தவிர மற்ற எல்லோரும் உள்ளே நுழைந்து விட்டார்கள். மலைப் பாம்பு தன் வாயை இன்னும் மூடவில்லை. கிருஷ்ணனும் உள்ளே நுழைவதற்காக அது காத்துக் கொண்டிருந்தது.


உலகைக் காப்பவனான கிருஷ்ணன் ஓர் கணம் யோசனை செய்தான். ஒரே நேரத்தில் அரக்கனையும் கொல்ல வேண்டும், தன் நண்பர்களையும் காப்பாற்ற வேண்டும். அதை எப்படி செய்யலாம்? அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தான். நேரே அவன் வாய்க்குள் புகுந்து, தன் உடலைப் பெரிதாக்கிக் கொண்டான். அரக்கன் மூச்சுவிட முடியாமல் தவித்தான். கண்கள் பிதுங்க அரக்கன் இப்படியும் அப்படியும் உருண்டான். கடைசியில் செத்து ஒழிந்தான். கிருஷ்ணன் தன் நண்பர்களைப் பார்த்தான். பாம்பின் உடலுக்குள்ளிருந்த விஷ வாயுவினால் அவர்கள் மயக்கமுற்றுக் கிடந்தார்கள். ஆனால் கிருஷ்ணனுடைய பார்வை அவர்கள் மீது விழுந்ததும் அவர்கள் எல்லோரும் மயக்கம் நீங்கி அந்த செத்த பாம்பின் உடலிலிருந்து வெளியே வந்தார்கள்.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment