About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

108 திவ்ய தேசங்கள் - 005 - திரு அன்பில் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

005. திரு அன்பில் (திருச்சி)
ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ சுந்தரராஜன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ அழகியவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ வடிவழகிய நம்பி பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: வடிவழகிய நம்பி

  • பெருமாள் உற்சவர்: சுந்தரராஜன்
  • தாயார் மூலவர்: அழகியவல்லி
  • தாயார் உற்சவர்: ஸௌந்தர்யவல்லி
  • திருமுக மண்டலம் திசை: தெற்கு
  • திருக்கோலம்: புஜங்க சயனம்
  • புஷ்கரிணி: மண்டூகம்
  • தீர்த்தம்: கொள்ளிடம்
  • விமானம்: தாரக
  • ஸ்தல விருக்ஷம்: தாழம்பூ
  • ப்ரத்யக்ஷம்: ப்ரஹ்மா, வால்மீகி
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 1

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

சுதபா எனும் மகரிஷி ஒருவர் தன் தவ வலிமையால் நீரிலும், நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டவராக இருந்தார். மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டு இருந்த அவர் ஒரு நாள் தண்ணீருக்கு அடியில் தவம் செய்து கொண்டு இருந்த போது, அவரைப் பார்க்க துர்வாச முனிவர் வந்தார். சுதபா தவத்தில் இருந்ததால், துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை. நீண்ட நேரம் வெளியில் காத்திருந்ததால் கோபம் கொண்ட துர்வாசர் அவரை தண்ணீரில் வாழும் தவளையாக மாறும் படி சபித்து விட்டார். இதனால் சுதபா மகரிஷிக்கு மண்டுகர் (மண்டுகம் - தவளை) என்ற பெயர் ஏற்பட்டது. துர்வாசரின் சாபத்திற்கு ஆளான மண்டுகர் அவரிடமே தனது சாபத்திற்கு விமோசனம் கேட்டார். துர்வாசர் அவரிடம், "உனக்கு கிடைத்த இந்த சாபம் முற்பிறவியில் செய்த கர்மத்தால் கிடைத்ததாகும். தகுந்த காலத்தில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்கப் பெற்று சாப விமோசனம் பெறுவாய்,' என்றார். அதன்படி மண்டுக மகரிஷி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (மண்டுக தீர்த்தம்) ஸ்வாமியை எண்ணி தவம் செய்து வந்தார். மகாவிஷ்ணு அவருக்கு சுந்தர ராஜராக காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார். ஸ்வாமி கருவறையில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மாவுடன் இருக்கிறார். உத்தமர் கோயிலில் தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற சிவன், இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசனம் செய்து விட்டுச் சென்றார். 

முன் மண்டபத்தில் ஆண்டாள் தனிச் சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நின்ற கோலத்தில் இருக்க உற்சவர் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். ஒரே சமயத்தில் ஆண்டாளின் இரு கோலங்களையும் தரிசனம் செய்வது அபூர்வம். திருமண தோஷம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. தேவலோக கன்னியான ஊர்வசி தன் அழகு மீது கர்வம் வந்து விடாமல் இருப்பதற்காக இவரை வணங்கிச் சென்றுள்ளாள்.

ஒரு சமயம் பிரம்மாவுக்கு உலகில் உயிர்களை நாமே பிறக்க வைக்கிறோம். ஒவ்வொரு உயிரும் அழகுடன் இருப்பதற்கும் நாம் தான் காரணமாக இருக்கிறோம். அந்த அழகிய உயிர்களுக்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் நாம் தான் அனைவரிலும் அழகானவர் என்ற ஆணவம் உண்டானது. மேலும், அனைவரையும் படைக்கும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது. பிரம்மாவின் எண்ணத்தை அறிந்த மகாவிஷ்ணு, அவரது ஆணவத்தை விட்டு விடும்படி சொல்லிப் பார்த்தார். பிரம்மாவோ கேட்பதாக இல்லை. எனவே, அவரை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்து விட்டார் மகாவிஷ்ணு. பூலோகம் வந்த பிரம்மா ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று ஸ்வாமியை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வேண்டி வந்தார். இத்தலம் வந்த அவர் ஸ்வாமியை எண்ணி தவம் இருந்தார். அப்போது மகாவிஷ்ணு பேரழகு வாய்ந்த மனிதராக அவர் முன்பு வந்தார். அவரைக் கண்ட பிரம்மா, "இவ்வளவு அழகான எவரையும் இதுவரையில் நான் பார்த்ததில்லையே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' எனக் கேட்டார். அவரிடம் அன்பாக பேசிய விஷ்ணு, "அழகு என்பது நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக் கூடியது. இவ்விரண்டு குணங்களையும் கொண்டிருப்பவர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில்லை' என உபதேசம் செய்து, பள்ளிகொண்ட கோலத்தில் அவருக்கு காட்சி தந்தார் மகாவிஷ்ணு. உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மா ஆணவம் ஒழியப் பெற்றார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக, விஷ்ணு இத்தலத்தில் பள்ளிகொண்ட கோலத்திலேயே எழுந்தருளினார். பிற்காலத்தில் சோழ மன்னர் ஒருவர் இங்கு கோயில் கட்டினார். பிரம்மாவின் மீது அன்பு கொண்டு அவருக்காக மகாவிஷ்ணு எழுந்தருளிய தலம் என்பதால் இத்தலம் "அன்பில்' என்ற பெயரும் பெற்றது. 

ஸ்வாமி ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்திலும், எம்பெருமானார் ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலும் அதி அற்புதமாக எம்பெருமானின் வடிவழகை வர்ணித்து உள்ளார்கள்.

  • திருவடி - ஸொலப்யம் - எளிமை
  • அபய ஹஸ்தம் - வாத்ஸல்யம் - கருணை, தயை
  • திரு அமர்ந்துள்ள திருமார்பு - திவ்யம் - தூய்மை
  • திருமுகமும், புன்முறுவலும் - ஸொஸீல்யம் - நீர்மை
  • திருமுடி - ஸ்வாமித்வம் - எல்லாம் உடைமை
  • சங்கு - ஞானம், தீவினையை தொலைக்கும் அறிவு
  • சக்கரம் - பலம், அஞ்ஞானத்தை அழிக்கும் சக்தி

என்று எம்பெருமானின் வடிவும், அழகும், ஆயுதங்களும், அவனுடைய கல்யாண குணங்களும் ஒன்று சேர்ந்து கலந்தே இருக்கின்றன. அவை முற்றும் நிறைந்தவன் நாராயணனே என்கிறார்கள் பூர்வாசாரியர்கள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment