About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பத்தி மூன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

033 இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவானைப் போலே|

ஸ்ரீநாராயணர் முன்னிலையில் சாதி பேதம் கூடாது என உரைத்தது வைஷ்ணவம். ஸ்ரீராமாநுஜர் அதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.

இனி நம்பாடுவான் கதை.


108 திவ்ய தேசங்களில் திருக்குறுங்குடியும் ஒன்று. மகேந்திர மலை என்ற மலையை அடுத்து அமைந்துள்ள இவ்விடத்தில் எம்பெருமான், நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி என ஐந்து விதமாக எழுந்தருளியுள்ளார். வராக அவதாரம் எடுத்த பெருமாள் தன் உடலைக் குறுக்கிக் கொண்டதால் இத்தலத்திற்கு இப்பெயர்.

நம்பாடுவான் ஒரு வைணவ பக்தர். முனிக்கிராமம் என்ற ஊரைச் சேர்ந்த நம்பாடுவான், பாணர் குலத்தில் பிறந்தவர். தினந்தோறும் திருக்குறுங்குடிக்குச் சென்று, அங்குள்ள நம்பி என்ற பெருமாளை யாழிசைத்துப் பாடிய பின் தான் தனது தினசரிச் செயல்களைத் தொடங்குவார். சூரியன் உதிக்கும் முன் காடு கடந்து திருக்குறுங்குடி சென்று, பெருமாளைப் பற்றிப் பாடிவிட்டு, மக்கள் எழும் முன் ஊர் திரும்பி விடுவார். தன்னுடைய குலத்தின் காரணமாக கோயிலின் வாயிலில் நின்று பாடிவிட்டு செல்வது அவரது வழக்கம். அவரது பண்ணில் மயங்கிய திருக்குறுங்குடிப் பெருமாள், யாழிசையுடன் போற்றிப் பாடிய பாணரை, ‘நம்பாடுவான்’ (என் பாடகர்) என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தார். அன்று முதல் அப்பாணர் அவ்வாறு அழைக்கப்பட்டார். அதுவே நிரந்தரமானது.


கார்த்திகை மாத சுக்லபக்க்ஷ ஏகாதசி நாளில் நம்பாடுவான், இரவு முழுதும் விழித்திருந்து பெருமாள் புகழைப் பாடி, விரதமிருந்து, விடியும் முன் பண்ணிசைக்க கோவிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். காட்டில் இருந்த பிரம்ம ராக்ஷஸன், பாணரை வழிமறித்தான். 'உன்னை உணவாக உண்ணப் போகிறேன்" என்றான்.

பாணரோ, “என்னை உண்டு உன் பசியைப் போக்கிக் கொள்கிறாய் என்றால் எனக்கும் சந்தோஷம் தான். எனக்கு இவ்வுடலின் மீது எந்த ஒரு விருப்பமும் இல்லை. இது என் உடைமையும் இல்லை. ஆனால், இன்று ஏகாதசி. திருக்குறுங்குடிக்குச் சென்று, எம்பெருமானின் முன் பாடிவிட்டு, நான் மேற்கொண்டுள்ள ஏகாதசி விரதத்தை நிறைவு செய்துவிட்டுத் திரும்பி வந்த பின் என்னை உண்டு உன் பசியாறுவாயாக! அதுவரை பொறுத்திரு”, என்று கூறினார். 


முதலில் பாணரை அவன் நம்பவில்லை. ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் திருமாலடியார் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள் என்பதைக் கூறி, அதை மீறினால், மீண்டும் மீண்டும் பிறந்து, இறைவனை அடைய முடியா வண்ணம் ஆன்மா பிறவிக்கடலில் அகப்பட்டுக் கொள்ளும். எனவே, நான் வாக்குறுதி வழங்குகிறேன். நான் வருவேன்.” என்று கூறி விளக்கியவுடன் அவரைக் குறுங்குடிக்குச் சென்று வர அனுமதித்தான்.

சந்நிதி அடைந்து, வழக்கம் போல, சந்நிதியிலிருந்து விலகிப் பாடினார் நம்பாடுவான். ஆனால், எம்பெருமான், கொடி மரம், கருடன் ஆகியவற்றை விலகி இருக்கச் சொல்லி அங்கிருந்த வண்ணமே சேவை சாதித்தார்.

பின்னர், கொடுத்த வாக்கைக் காக்க ராட்சசனிடம் சென்றார். வழியில் ஒரு முதியவர், "நீ போகாதே! தன் உயிரைக் காத்துக் கொள்ள வாக்குத் தவறினால் தவறில்லை" என்றார். ஆனால், கொடுத்த வாக்கைக் காப்பது தான் ஸ்ரீவைஷ்ணவின் தருமம்" என நம்பாடுவான் மறுத்து விட்டார்.

பிரம்மராக்ஷஸனிடம் உறுதியளித்தபடி வந்து நின்றார். பிரம்மராக்ஷஸன், ‘‘அடியவரே! சிறந்த திருமாலடியார் நீங்கள். தங்களைப் புசித்து மேலும் என் பாவத்தைப் பெருக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை! தாங்கள் இனிதே இல்லம் திரும்புங்கள்!’’ என்று கூறினான்.

நம்பாடுவான், தான் உறுதி அளித்தபடி, பிரம்மராக்ஷஸனின் பசியைப் போக்காமல் அவ்விடத்தை விட்டு அகல விரும்பவில்லை. ஆனால், அவனோ அவரைப் புசிக்க விரும்பவில்லை. தன்னை இப்பாவத்தில் இருந்து விடுவிக்கும் சக்தி, நம்பாடுவானுக்கே உள்ளது என்பதை அறிந்த பிரம்மராக்ஷஸன், “ஏகாதசி விரதத்தைத் தொடர்ந்து அனுஷ்டித்து வந்ததால் பெரும்புண்ணியம் கிடைக்கும் அல்லவா? அந்தப் புண்ணியத்தில் எட்டில் ஒரு பங்கை என்னிடம் கொடுங்கள்”, என்றார்.

நம்பாடுவான், அதற்கு, “நான் பலனை எதிர்ப்பார்த்து விரதம் இருக்க வில்லை. அவரின் புகழ் பாடுவதால், பெருமாளின் மனமும் என் மனமும் குளிரும். எதையும் எதிர்ப்பார்த்து நான் செய்யவில்லை”, என்றார். “சரி, என்றால், நீங்கள் பாடும் ஒரு பாடலின் பலனை எனக்கு வழங்குவதாக கூறிவிடுங்கள்.”, என்றான் பிரம்மராக்ஷஸன்.

பிரம்மராக்ஷஸனின் நிலைமையை கண்ட நம்பாடுவான், மனம் வருந்தி ராட்சஸனிடம் அவன் கேட்டதைக் கொடுத்து விட்டார். உடனே, பிரம்மராக்ஷஸ வடிவம் நீங்கி, அந்தணப் பிரம்மச்சாரியாக நிற்கக் கண்டார். தான் வேள்வி செய்த பொழுது செய்த தவறுகளின் காரணமாகத் தனக்கு இந்த அசுர உருவம் ஏற்பட்டதாகக் கூறிய பிரம்மச்சாரி நம்பாடுவானுக்கு நன்றி கூறிச் சென்றார்.

பிரம்மராக்ஷஸன் உணவு கிடைக்காமல் பசியும் தாகமும் வாட்டிய நிலையில் இருந்தான். அந்த இளைப்பு, விடாய் இரண்டையும் நம்பாடுவார் தீர்த்தார். அத்துடன் சாபம் நீங்கவும் உதவினார். இன்றும் கைசிக ஏகாதசி (கார்த்திகை மாதம்) அக்கோயில் விழா கொண்டாடுகிறது.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அறநெறி பிறழாது நம்பாடுவான், ராட்சசன் இளைப்பின் தாகத்தை தீர்த்தார். நம்பாடுவான் போல் பிறருக்கு உதவி புரிந்தேனா?!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment