||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 33 - சகடாசுரனை அழித்த திருத்தோள்கள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்
நாள்களோர் நாலைந்து*
திங்கள் அளவிலே*
தாளை நிமிர்த்துச்*
சகடத்தைச் சாடிப் போய்*
வாள் கொள் வளை எயிற்று*
ஆருயிர் வவ்வினான்*
தோள்கள் இருந்தவா காணீரே*
சுரி குழலீர்! வந்து காணீரே|
- நாள்கள் - கண்ணன் பிறந்த பின்பு சென்ற நாட்கள்
- ஓர் நாலு ஐந்து திங்கள் அளவிலே - ஒரு நாலைந்து மாதத்தளவிலே
- தாளை நிமிர்ந்து - தன் மலர் போன்ற மென்மையான பிஞ்சு பாதங்களை தூக்கி
- சகடத்தை - வண்டிச் சக்கரத்தை
- சாடிப்போய் - உதைத்து விட்டு சக்கர வடிவில் வந்த சகடாசுரன் என்னும் அசுரனை வதம் புரிந்தான்
- வாள் கொள் - ஒளி கொண்டதாய்
- வளை – வளைந்த கூர்வாள் கொண்டு
- எயிறு - கோரப் பற்களை உடைய பூதனையினது
- ஆர் உயிர் - அரிய உயிரை
- வவ்வினான் - முடித்த கண்ணனுடைய
- தோள்கள் இருந்த ஆ காணீர்! - தோள்களுடைய வலிமையையும், வனப்பையும் வந்து பாருங்கள்
- சுரி குழலீர் வந்து காணீரே - சுருண்ட கேசத்தை உடைய பெண்களே! வந்து பாருங்கள்
கண்ணன் பிறந்து நாலைந்து மாதங்களுக்குள்ளாகவே தன் வயதிற்கு அப்பாற்பட்ட வேலைகளை செய்யத் தொடங்கினான். ஒரு சமயம் யசோதை குழந்தையை ஒரு வண்டியின் கீழ், தொட்டிலில் தனியாக விட்டு விட்டு யமுனைக்கு செல்கிறாள். அப்பொழுது கம்சனால் ஏவப்பட்ட சகடாசுரன் என்ற அசுரன் அந்த வண்டியில் ஆவேசித்து கண்ணன் மேல் விழுந்து கண்ணனைக் கொல்லப் பார்த்தான். கண்ணனோ தன் சிறிய திருவடிகளைத் தூக்கி வண்டியை ஒரு உதை விட்டதில் அந்த வண்டியும் நொருங்கியது. அசுரனும் அழிந்தான். மற்றொரு சமயம் ஒளிகொண்ட உருவமாய், நிமிர்ந்த சரீரத்துடனும், கோரப்பற்களுடனும் வந்த பூதனையின் உயிரை மாய்த்தான். அதோடு நில்லாது, கொலைதொழில் புரியும் கூர்வாள் ஏந்திய, ஒளி உடைய வளைந்த பற்களைக் கொண்ட அசுரர்கள் பல பேரைக் கொன்று முக்தி அளத்தவனான, கண்ணனின் தோள்கள் எத்தனை வலிமையானதாகவும், அழகுடையதாகவும் இருக்கின்றன என்பதை வந்து காணுமாறு அங்கிருந்த சுருண்ட கேசமுடைய பெண்களை அழைக்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment