||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
045 வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே|
"ஆயிரம் ராமர்கள் உனக்கு இணையாவார்களோ?" - என்று குகன் பரதனைப் பார்த்து கூறினான். பரதனுடைய பண்பு அத்தகையது. அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். கைகேயியின் ஓரே புதல்வன். இவர் இராமனுக்கு இளையவர் ஆவார்.
ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்பும் முன் கைகேயி பரதனை தன் தந்தையின் நாடான கேகேயத்திற்கு அனுப்புகிறாள். பரதனுக்குத்தான் அரசுரிமை, ராமன் காடு செல்ல வேண்டும் என்று கைகேயி மன்னனிடம் கேட்க, இராமனும் அதை தாய் தனக்கிட்ட ஆணையாக மனதிலேற்று, சீதா தேவியுடனும் இலட்சுமணனுடனும் கானகம் செல்கிறார். தன் தாய்மாமனைக் காண சென்ற பரதனுக்கு அயோத்தியில் நடந்தது எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இராமன் வனம் சென்ற சில நாளிலேயே தசரதன் இறந்து போக, பரதனுக்கு செய்தி அனுப்பபப்படுகிறது. அயோத்தி வந்தடைந்த பரதன் நடந்தவற்றை அறிந்து தந்தை இறப்பிற்கும் அண்ணன் கானகம் சென்றதுக்கும் தன் தாய் தான் காரணம் என்பதை அறிந்து அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். இப்படிப் பட்ட வரம் கேட்டது தெரிந்த பின்னும் நானும் இறக்காமல் இருக்கிறேன். இது நான் இந்த அரசை ஆசையோடு ஏற்றுக் கொண்டதற்கு ஒப்பாகும் என்கிறான். ஒரு மாவீரனைப் போல, தாய் செய்த தவறுக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான்! இருந்தாலும், தாயாரை மன்னிக்காமல், இராமனின் வனவாசம் முடியும் வரை தன் தாயிடம் பேசாமல் வாழ்ந்து வந்தான் பரதன்.
மகரிஷி வசிஷ்டர் பரதனை முடிசூட்டிக் கொள்ளுமாறு வேண்ட, பரதனோ, “நானும் இந்நாடும் அண்ணனின் உடைமை. என்னால் எப்படி ஆட்சி செய்ய முடியும்? நேரே சென்று அண்ணனை அழைத்து வருகிறேன். அண்ணன் அரியணையில் அமர, நான் கானகம் சென்று வாழ்கிறேன்.”, என்று கூறி, மரவுரி தரித்து வனம் செல்கிறான். உடன் தாயார்களும், மந்திரிகளும், மகரிஷிகளும், அயோத்தி மக்களும் வர, பரதன் கங்கை கரையை அடைந்தான். சித்திரக் கூடம் செல்லும் பரதனை, காட்டிலும் விடாது ராமனைத் துரத்துவதாக எண்ணிய லட்சுமணன், போர்க்கோலம் பூணுகிறான். ராமனோ. லட்சுமணனை சமாதானம் செய்கிறார்.
பரதன் மூலம் தந்தை மறைந்த செய்தியைக் கேள்விப் பட்டு நிர்க்கடன் செலுத்துகிரார் ராமன். அடுத்து, பரதனின் தவக்கோலத்திற்கான காரணத்தைக் கேட்கிறார். அயோத்தியில் நடந்தவற்றை கூறி, இராமனின் பாதங்களில் விழுந்த பரதன் அண்ணனிடம் நீங்கள் வந்து முடிசூட்டி ஆட்சிபுரிய வேண்டும் என்று மன்றாடி கேட்கிறான். இராமனோ தந்தை சொல்லை தன்னால் மீற முடியாது, பதினான்கு ஆண்டு வனவாசம் புரிய வேண்டும் என்ற ஆணையை தான் கைவிடக்கூடாது என்கிறார். வனவாசம் முடித்து விட்டு வந்து அரசாட்சியை எடுத்துக் கொள்கிறேன் நீ அயோத்திக்குப் போய் கடமையைச் செய் என்கிறார். பரதன் பிடிவாதமாக இருக்கிறான். வேறு வழியில்லாத ராமன், பரதனை நோக்கி, "இது என் ஆணை. பதினாங்கு ஆண்டுகள் நீ அரசாள்வாய்” என்று கூறியதும், பரதன் மறு பேச்சு பேசாது சம்மதிக்கிறான்.
பரதன், “திரும்பி வர பதினான்கு ஆண்டுகளுக்கு மேல் ஒரு நொடி அதிகமானாலும் நெருப்பில் விழுந்து உயிர் தியாகம் செய்வேன். மேலும், அரியணை தங்களுக்கு உரியது. அதில் நான் அமர மாட்டேன்.” – என்று கூறி, ராமனின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு, “உமது பாதுகைகளே அரியணையை அலங்கரிக்கும். நான் உன் பிரதிநிதி. அரியணை அமரவும் மாட்டேன். மணிமுடி சூடிக்கொள்ளவும் மாட்டேன்.”, என்று கூறி, பலமுறை இராமபிரானைத் தொழுது, அப்பாதுகைகளை தன் தலையில் வைத்துக்கொண்டு அழுது புறப்படுகிறான் பரதன்.
பரதன் அயோத்தி செல்லவில்லை. கோசல நாட்டின் தென் திசையில் உள்ள நந்திக் கிராமத்தில் மணி மண்டபம் அமைத்து, சிம்மாசனத்தில் இராமனுடைய பாதுகைகளை வைத்து, அப்பாதுகைகளுக்கு முடிசூட்டி வழிபட ஆரம்பிகிறான் பரதன். தென் திசையையன்றி வேறு திசையை நோக்காமல், இராமனைப் போல் உப்பில்லாத கஞ்சியைப் பருகி, தானும் குடிலில் தரையில் படுத்து, நல்லாட்சியும் புரிந்தான்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " பரதன் போல் இராமன் ஒன்றே பிராதானம் என்று நினைத்து, இறைவன் எதைத் தந்தாலும் அது நல்லதுக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் கொண்டுள்ளேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment