About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 17 September 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பத்தி ஆறாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

046 வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே|

அயோத்தியின் அரசர் தசரதனுக்கு நான்கு மகன்கள் – மூத்தவர் இராமர், இலக்குவன், பரதன், சத்துருகனன். நால்வரும் வசிட்டரிடம் சீடர்களாக சேர்ந்து பல்வேறு கலைகளை கற்றனர். இலக்குவன், இராமரிடம் தனி அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார். விசுவாமித்திர முனிவர், அயோத்தியை அடைந்து தசரதரிடம் தன் யாகங்களுக்கு ராட்சகர்களால் இடையூறு ஏற்படுவதால் அவர்களை அழிக்க இராமனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும் பிறகு இராமனையும், லட்சுமணனனையும் அவருடன் அனுப்பி வைத்தார்.


இராமனுக்கு முடிசூட்ட தசரதர் எண்ணிய பொழுது, கைகேயி தனது மகனான பரதன் அரசனாக வேண்டும், இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும் என்னும் இரண்டு வரங்களைக் கேட்க, தாய் சொல்லை மறுக்காமல், இராமரும் உடனடியாகவே காட்டுக்கு கிளம்பினார். அவர் தடுத்தும் கேளாமல் சீதையும், இலட்சுமணனும் இராமனுடன் காட்டுக்கு கிளம்பினர்.

தனித்து வனவாசம் செல்ல எண்ணிய ராமரிடம், இலட்சுமணன் “நீரின்றி மீனால் வாழ முடியாது. அது போல் தான் தாங்கள் எனக்கும், சீதாதேவிக்கும். எங்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்.”, என்றார்.


இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரையும் சீதாதேவியையும் பாதுகாத்து வந்தார் இலட்சுமணன். இராமனுக்கு, ஒரு கூட்டம் செய்ய வேண்டிய காரியங்களை ஒற்றையாளாய் லட்சுமணன் செய்கிறானாம். ராமனுக்கு, அவனைப் போல குறிப்பறிந்து பணியாற்றிட யாரும் இல்லையாம். இராமனுக்கும் சீதாதேவிக்கும் தேவையான பணிவிடைகளை இலட்சுமணன் செய்தார். பஞ்சவடியில் இராமரும் சீதாதேவியும் தங்குவதற்கு பர்ணசாலை (குடில்) அமைத்துக் கொடுத்தார். பின், ராமனைக் கூப்பிட்டுக் காட்டுகிறான்

அதில் யாகம் நடத்த ஒரு இடம், கடவுள் அறை, சமையல் செய்ய் ஒரு அறை என ஒவ்வொன்றாய்க் காட்டுகிறான். ஒரு அறையைக் காட்டி. "அது." என ராமன் கேட்டானாம். அந்த அறை தாங்களும், சீதா பிராட்டியும் தங்க என்கிறான் லட்சுமணன்

ராமனின் சிந்தையறிந்து செயல்படும் லட்சுமணனைத் தழுவிக் கொண்ட ராமன் "ஒரு தண்ணீர்ப் பந்தலைப் போல அல்லவா நம் தந்தை உன்னை எனக்குத் தந்துவிட்டு சென்றுள்ளார்" என அகமகிழ்ந்தான்.

சீதாதேவியை இராவணன் கடத்திச் சென்ற போது, இராமருக்கு பக்க பலமாய் நின்று இராவணனை வென்று சீதையை மீட்க உதவினார். அயோத்தி திரும்பிய பின், மன்னராக முடி சூடிக்கொண்ட இராமர், இலட்சுமணனை பட்டத்து இளவரசராக முடி சூடிக் கொள்ள கூறிய போது, அதை பணிவுடன் மறுத்து, “என்னை விட பரதனே அப்பதவிக்கு தகுதியானவன். அடியேன் தங்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்.”, என்றார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " இலட்சுமணன் போல் சரணாகதி அடைந்து, இராமர் செல்லும் இடமெல்லாம் அவருடன் சென்று அவருக்கு பணிவிடைகள் செய்தேனா?” லட்சுமணன் அவதாரம் செய்ததே ராமனுக்கு கைங்கர்யம் செய்ய.. அப்படிப்பட்ட லட்சுமணனைப் போல நான் எதுவும் செய்யவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment