About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 6 August 2023

ஸ்ரீமத் பாகவதம் – அறிமுகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

வேதம் முழுவதையும் கிரகித்த வியாஸ பகவான், கலியுகத்தில் இருக்கும் மனிதர்களைக் கருத்தில் கொண்டு முழு வேதத்தையும் ஒருவர் ஒரு வாழ்நாளுக்குள் கற்றுக் கொள்வது கடினம் என்று உணர்ந்து அதை நான்காகப் பிரித்தார். பின்னர்

  • 1. ரிக் வேதத்தை பைலர் என்ற ரிஷியிடமும்,
  • 2. யஜுர் வேதத்தை வைசம்பாயனர் என்ற ரிஷியிடமும்,
  • 3. ஸாம வேதத்தை ஜைமினியிடமும்,
  • 4. அதர்வண வேதத்தை சுமந்து என்ற ரிஷியிடமும் கொடுத்தார்.
  • 5. பதினேழு புராணங்களை ரோம ஹர்ஷணர் என்ற பௌராணிகரிடம் கொடுத்தார். கடைசியாக 
  • 6. பதினெட்டாவதாக எழுதிய ஸ்ரீமத் பாகவத புராணத்தைக் கொடுக்க தகுந்த ஒருவரை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு தந்தை சொத்தைப் பிரித்துக் கொடுப்பது போல கொடுத்து விட்டு, தனக்குப் பிரியமான சொத்தை சரியாக நிர்வகிக்கத் தகுந்த ஆளை எதிர்பார்ப்பது போல் அவர் காத்திருந்தார். ஸ்ரீ வியாஸ பகவான் ஒரு சமயம் யாகம் செய்யும் போது, யாக குண்டத்தில் இருந்து தோன்றியவர் ஸ்ரீ சுகாசார்யார். இவரிடம் தான் பாகவதத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உடனே வியாசருக்குத் தெரிந்தது. தோன்றும் போதே பதினாறு வயது நிரம்பிய இளம் பாலகனாக, அழகு சொட்டும் உருவத்தோடு விளங்கினார் சுகாசார்யார். ஞான ஸ்வரூபமான சுகர், யாக குண்டத்தில் இருந்து வெளி வந்ததும், எதையும் கவனிக்காமல் கிடுகிடுவென்று ஓடத் துவங்கினார். எங்கும் நிரம்பி இருக்கும் ஆத்மாவில் ஆழ்ந்திருப்பவர் என்பதால் ஆடைகளின்றி, திக்குகளையே ஆடையாகக் கொண்டு திகம்பரராக சங்கல்பமின்றி சஞ்சரித்தார். தான் இவ்வளவு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த புத்திரன் கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்து போன வியாஸரோ, சுகரைத் துரத்திக் கொண்டு ஓடினார். மகனே மகனே, என்று குத்திக் கொண்டு தந்தை துரத்திக் கொண்டு ஓட, சுகர் தன்னைத் தான் அழைக்கிறார் என்று நினைக்கவில்லை. ஏனெனில் ப்ரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கும் ஆத்மாவே தானென்று உணர்ந்திருந்தார். ஆனால், வழியிலிருந்த மரம் செடி கொடிகளெல்லாம் ஏன் ஏன் என்று வியாஸருக்கு பதில் கூறின. இதிலிருந்து அவருடைய ப்ரும்மானுபவம் எத்தகையது என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஓடிக் கொண்டிருந்த சுகர் ஒரு குளத்தின் வழிச் செல்ல, அங்கு ஆடையின்றி குளித்துக் கொண்டிருந்த பெண்கள் அவரைப் பார்த்து விட்டு எந்த சஞ்சலமும் இல்லாமல் குளியலைத் தொடர்ந்தனர். சற்று நேரத்தில் பின்னாலேயே துரத்தக் கொண்டு வந்த வியாஸரைப் பார்த்ததும் ஓடிச் சென்று ஆடைகளை அணிய முற்பட்டனர். இதைக் கண்ட வியாஸர், அந்தப் பெண்களைப் பார்த்து பதினாறு வயதுடைய என் மகன் ஆடையின்றி செல்கிறான். அவனைப் பார்த்து நீங்கள் வெட்கமடையாமல் கிழவனும், ரிஷியுமான என்னைக் கண்டதும் வெட்கப் படுகிறீர்களே இது நியாயமா என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்கள், மன்னித்து விடுங்கள் மஹரிஷி. தங்கள் மகன் இளவயது உடையவராய் இருந்த போதும், அவரைக் கண்டதும் வெட்கம் ஏற்படவில்லை, காரணம் அவர் தன்னை ஆணா, பெண்ணா என்று கூட உணராமல் ப்ரும்ம வஸ்துவாகவே இருக்கிறார். அவரைக் கண்டதும் எங்கள் மனத்தில் எந்த விகாரமும் ஏற்படவில்லை. ஆனால், நீங்கள் வயதானவர் என்றாலும் நீங்கள் ஆண், நாங்கள் பெண்ணினம் என்ற பேதம் தெரிவதால் வெட்கம் வந்து ஆடைகளை அணிந்தோம் என்றனர். இந்த நிகழ்வு வியாஸரைக் குறைத்துச் சொல்லப் பட்டதல்ல. தந்தையான அவர் தன்னைக் குறைத்துக் கொண்டு தனயனின் பெருமையை உணர்த்துகிறார். மேலும், இதயத்தில் துளியும் காம வாசனையற்ற, ப்ரும்ம ஸ்வரூபமான ஸ்ரீ சுகர் தான் பாகவதத்தின் தசம (10) ஸ்கந்தத்தில் ராஸ லீலையை வர்ணிக்கிறார் என்றால் ரஸம் எவ்வளவு உயர்ந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment