About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 6 August 2023

ஸ்ரீமத் பாகவதம் – அறிமுகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

"ஸ்ரீமத் பாகவதம்", பகவானது குணானுபவங்களை வெளியெடுத்துச் சொல்லும் நூலாம். அப்பரம்பொருள் அளவிட முடியாத ஐஸ்வர்யம், வீர்யம், கீர்த்தி, அழகு ஞானம், வைராக்கியம் ஆகிய ஆறு குணங்களின் நிலமாய் இருப்பதால் அவருக்குப் பகவான் என்று பெயர். அவரது ஸ்வரூபத்தின் மென்மையும், அவர் செய்த அவதாரங்களின் சரித்திரத்தையும் சொல்லுவதால், இதற்குப் பாகவதம் என்ற பெயர் வந்தது. இது ஸ்ரீ வேத வியாசரால் அவர் செய்த புராணாதிகளின் இறுதியில் பதினெட்டாவது புராணமாகச் செய்யப்பட்டது. இது கங்கைக் கரையில் பிராயோபவேசம் {அன்ன ஆகாரம் இன்றிப் பட்டினிக் கிடத்தல்} செய்து கொண்டு ஏழாம் நாள் தனக்கு வரப்போகிற மரணத்தை எதிர்பார்த்திருந்த அர்ச்சுனனது பேரனாகிய பரீட்சித்துக்கு வியாசருடைய பிள்ளையும், முற்றுந்துறந்த முழு ஞானியுமான சுகப்ரஹ்மத்தால் சொல்லப்பட்டது. இந்த புராணத்தில் 12 ஸ்கந்தங்களும், 18,000 ஸ்லோகங்களும் உள்ளன. 


ஸ்ரீமத் என்றால் மிக அழகானது, அல்லது மிகச் சிறந்தது, அல்லது புகழ் வாய்ந்தது என்று பொருள். பாகவதம் என்றால் பகவானிடம் இருந்து வருவது அல்லது பகவானுடன் தொடர்புடையது என்று பொருள். எனவே, ஸ்ரீமத் பாகவதம் என்பது “பகவானைப் பற்றிய அழகான புத்தகம்” என்று பொருள்படும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது பல்வேறு அவதாரங்கள், மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன. ஸ்ரீமத் பாகவதமானது வேத மெய்யறிவை நல்கும் கற்பக மரம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமே ஸ்ரீமத் பாகவதம்
ஒரு கல்லிலோ பளிங்கிலோ பகவான் அவதரிக்கும் போது, அவரை விக்ரஹம் என்கிறோம். அவர் மீனாகத் தோன்றினால் மத்சயர் என்றும், ஆமையாகத் தோன்றினால் கூர்மர் என்றும், பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் தோன்றினால் நரசிம்மர் என்றும் அழைக்கின்றோம். அது போலவே, புத்தகத்தின் வடிவில் கிருஷ்ணர் தோன்றினால், அவர் ஸ்ரீமத் பாகவதம் என்று அறியப்படுகிறார்.


ஸ்ரீமத் பாகவதம் தோன்றிய விதம்
நான்கு வேதங்கள், வேதாந்த சூத்திரம், புராணங்கள், மகாபாரதம் போன்றவற்றை தொகுத்து வழங்கிய மாமுனிவரான ஸ்ரீல வியாச தேவரின் மனம், அவ்வாறு தொகுத்த பின்னும் திருப்தி அடையவில்லை. அந்நிலைக்கான காரணத்தை அவர் தனது ஆன்மீக குருவான ஸ்ரீல நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர், “உண்மையில், முழுமுதற் கடவுளின் களங்கமற்ற புகழை நீ வர்ணிக்கவில்லை. பகவானின் தெய்வீகப் புலன்களைத் திருப்தி செய்யாத தத்துவங்கள் பயனற்றவை. அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை விவரமாக விளக்கியுள்ள போதிலும், முழுமுதற் கடவுளான வாசுதேவரின் (கிருஷ்ணரின்) புகழை நீ விளக்கவில்லை. அந்த முழுமுதற் கடவுளின் சேவையில் நமது எல்லா செயல்களையும் அர்ப்பணிப்பதால் மட்டுமே நமது அனைத்து துயரங்களையும் போக்க முடியும். ஆகையால் தயவுசெய்து நீ பகவானின் லீலைகளைப் பற்றி நேரடியாக வர்ணிப்பாயாக. அதுவே கற்றறிந்தவர்களின் ஏக்கத்தை திருப்தி செய்ய வல்லது” என்று வியாசருக்கு உபதேசித்தார். இவ்வாறாக, ஞானத்தின் முதிர்ந்த நிலையில், தனது குருவான நாரதரின் கட்டளைப்படி, வியாச தேவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவில் நமக்கு அருளினார். நாரத முனிவர் ருக்மணி பிராட்டியாருக்கு வியாசர் அருளிய பாகவதத்தை சொன்னார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment