||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
இவனே இறைவன். இவனே சகல ஜீவராசிகட்கும், தேவர்கட்கும் சகல லோகங்களுக்கும் ஆத்மாவாக இருப்பவன். “சர்வம் விஷ்ணுமயம் ஜகத்”. இந்த மகாவிஷ்ணு பரமபதத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் எந்நேரமும் நித்ய சூரிகளால் பல்லாண்டு இசைக்க சகல லோகங்களையும் காத்தருள்கிறான். இவர் உலகு படைப்பதற்காகவும், பக்தர்கட்காகவும் தம்மை ஐந்து வடிவங்களில் உண்டாக்கி தரிசனம் தருகிறார் என்பது மரபு. அவைகள் பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமித்வம், அருச்சை என ஐவகைப்படும். இதனை விரிவுறக் காணலாம்
1) பரம்
பரம பதத்தில் திருமகள், மண்மகள் எனப்படும் பூமாதேவி, நீளாதேவி என்ற மூன்று தேவிமார்களுடன் எழுந்தருளி இருக்கிறார். இங்கு பகவானுக்கோ, மற்றவர்கட்கோ, பசி, தாகம், தூக்கம், துக்கம், அயர்வு என்பன கிடையாது. இங்கு உள்ளவர்களையே நித்ய சூரிகள் என அழைப்பதுண்டு. இவர்கள் அத்தம்பதிகளின் அழகிலும், கல்யாண குணங்களிலும் ஈடுபட்டு எப்போதும் அவர்களைச் சாம கானத்தில் புகழ்ந்து கொண்டு ஆனந்தித்திருப்பார். அத்தம்பதிகளோ இவர்களின் சேர்த்தியில் ஆனந்தம் கொண்டிருப்பர். இவ்வுலகிற்குப் பாட்டுக் கேட்கும் உலகு என்று பெயர்.
2) வ்யூகம்
ஸ்ரீமந்நாராயணன் பரமபதமாகிய இந்த வைகுண்டத்திலிருந்து புறப்பட்டு வெள்ளையந்தீவு என்று சொல்லப்படும் சீராப்தி என்ற பாற்கடலில் பக்தர்களின் தரிசனத்திற்காகவும் தன்னைக் கீழ்க்கண்ட வ்யூகமாக பிரித்து ஆதிசேடனின் படுக்கையில் திருமகளும், பூமகளும் திருவடி வருட யோக நித்திரை செய்து அறிதுயிலமர்ந்த நிலையில் உள்ளார். இதைத்தான் “உறங்குவது போல யோகு செய்து” என்பார் நம்மாழ்வார். இந்த வ்யூகத்தில் (வ்யூகம் என்றால் விரிவுபடுத்துதல் எனப் பொருள்)
*கிழக்கு நோக்கிச் சிரிப்புடன் கூடிய வாசுதேவனாகவும், தெற்கு நோக்கிச் சிங்கமுகம் கொண்ட சங்கர்ஷனனாகவும், வடக்கு நோக்கிய வராகமுகம் கொண்ட பிரத்யுமனனாகவும், மேற்கு நோக்கிய ருத்ரமுகம் கொண்ட அனிருத்னாகவும் தம்மை வ்யூகப்படுத்தி சர்வ திக்குகளையும் நோக்கியுள்ளார்.*
தேவர்கள் தமக்குத் துன்பம் நேரிடும்போதெல்லாம் இந்தப் பாற்கடலின் கரையில் வந்து நின்று ஸ்ரீமந் நாராயணனைப் பற்றியெழுப்பி தமது முறையீட்டினைத் தெரிவித்து அபயக்குரல் கொடுப்பர். எம்பெருமானும் அபயமளிப்பான். எனவே இந்த உலகிற்கு கூப்பாடு கேட்கும் உலகு என்று பெயர். இந்த வ்யூக வாசுதேவனுடன் மற்றைய மூன்று உருவங்களும் பிரளய காலத்தில் ஐக்கியமாகி விடுகின்றன என்பது ஐதீஹம்.
3) விபவம்
விபவம் என்ற வடசொல்லுக்கு இறங்கி வருதல் என்று பொருள். பக்தர்கட்காகவும் உலகுய்யவும் - இரண்டிடங்களிலிருந்து இறங்கி வருதல், ஸ்ரீ இராமனாகவும், ஸ்ரீகிருஷ்ணனாகவும், பூவுலகில் தோன்றிய அவதாரங்களை விபவம் என்பர். இவைகள் பூர்ணாவதாரம், அமிசாவதாரம், ஆவேச அவதாரம் என்று வகைப்படும். இராம, கிருஷ்ண, வாமன, பரசுராம அவதாரங்கள் பூர்ணவதாரம். மச்சாவதாரம், வராக அவதாரம் போன்றன அமிசாவதாரம். நரசிம்மம் - ஆவேச அவதாரம்.
4) அந்தர்யாமித்வம்
இதில் ஒவ்வொரு ஜீவாத்மாவின் உள்ளிருந்தும் அதைத் தாங்கி நிற்பதாக ஐதீஹம். அந்தர்யாமியாக - மறைமுகமாக (உள்ளுக்குள் உணர்வாய், உணர்வுக்குள் உயிராய்) மானிடர்களின், ஞானிகளின், பக்தர்களின் உள்ளத்திலிருந்து தம் சக்தியை வெளிப்படுத்தும்.
5) அருச்சை
நம்மைப்போன்ற சாமான்ய மனிதர்கள் பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமித்வம் என்னும் இவைகளை கண்ணால் காண்பதும், கருத்தால் தீண்டலும் அரிதே. ஆம் பரமபதத்திற்குச் செல்ல நாம் நித்ய சூரிகளாக இல்லை. வ்யூகத்தைக் காண நாம் தேவர்களாயில்லை. விபவ அவதாரங்கள் நிகழ்ந்த காலக் கட்டத்தில் நாம் எப்படிப்பட்ட ஜென்மங்களாக இருந்தோம் என்பதை உணருமாறில்லை. அந்தர்யாமித்யமாய் இருப்பதை அறியும் ஆற்றலும் நமக்கு இல்லை. எனவேதான் ஒரு மனிதன் (ஒரு பக்தன்) தங்கம், வெள்ளி, கல், மரம், சாளக்கிராமம், முதலிய வஸ்துக்களில் யாதாயினுமொரு கருப்பொருளில் தன் மனதிற்குகந்தவாறும், சாஸ்திரங்களில் கூறியமுறை வழுவாமலும் மேற்சொன்னவற்றில் ஏதாயினுமோர் உருவத்தை பிரதிட்டை செய்து வழிபடும் முறைக்கு அருச்சை அல்லது அர்ச்சாவதார வழிபாடு என்று பெயர். இதனையே விக்ரக ஆராதனை அல்லது உருவ வழிபாடு என்றும் சொல்வர்.
மனிதர்கள் செய்யாமல், பக்தர்களின் வேண்டுகோளுக்காக எம்பெருமான் தானே யுகந்து அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளியதுண்டு. பக்தர்கள் விரும்பிய உருவங்களில் இந்த அர்ச்சா வடிவங்களில் தன்னை வெளிக்காட்டியதுண்டு. நம் போன்று இந்தக் கலியுகத்தில் வாழ்பவர்கட்கு அர்ச்சாவதாரம் போன்று எளிதாக வேறென்ன இருக்க முடியும். அல்லது இதை விடுத்தால் தான் நம் மனதில் பக்திக்கு அடைக்கலம் அளித்து உய்விக்க வேறு என்ன உபாயம் இருக்க முடியும்.
“புகலொன்றில்லா அடியேன் நின்னடிக்கீழ் புகுந்தொழிந்தேனே” என்றாற் போல் இதைவிட்டால் நமக்கு புகலேது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment