||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
001 அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே|
அக்ரூரர், ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் சகோதரர். அக்ரூரர் என்றால் வடமொழியில் சாது என்று பொருள். இவரும் சாது, நல்லவர். என்றாலும் கூட, அவருக்கு உத்தியோகம் என்னவோ கம்சனின் அரண்மனையில் தான். சில நேரங்களில், இறைவன் நிறைய விஷயங்களில் இப்படி மாற்றிப் போட்டு விடுகிறான்! பரமபக்தனான பிரகலாதன், கிருஷ்ணனை நாராயணனாகவே பார்த்த பீஷ்மர் போன்றோரைப் போல, வயிற்றுப் பிழைப்பு கம்சனிடமும், சிந்தனை கண்ணனிடமும் அக்ரூரருக்கு இருந்தது.
கோகுலத்தில் இருந்த வரையில் கண்ணனுக்குப் பரம சுகம். அவன் பக்தர்களுக்கோ அதை விடவும் பரமானந்தம்! வெண்ணெய் உண்ண வேண்டியது; தலையில் ஒரு முண்டாசைக் கட்டிக் கொண்டு, கையில் ஒரு புல்லாங்குழலையும் எடுத்துக் கொண்டு, 'நானும் மாடு மேய்க்கப் போகிறேன்’ என்று கிளம்பி விட வேண்டியது; அப்புறமென்ன பொழுதுக்கும் கோபாலர்களோடும் கோபியருடனும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்! வெறும் கொண்டாட்டத்துடன் விட்டானா என்றால், அது தான் இல்லை. கம்சனின் கட்டளைப்படி தன்னைக் கொல்ல வந்த பூதனையையும், பறவையாகவும், மாடாகவும், சக்கரமாகவும் வந்த இன்னும் பல அசுரர்களையும் போகிற போக்கில் வதம் செய்தானே! ஆழ்வார்களும் சரி, ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரும் சரி அவன் கோகுலத்தில் இருந்த காலத்தில் நிகழ்த்திய லீலைகளைத் தான் போற்றி பாடி அனுபவித்து இருக்கிறார்களே தவிர, அவன் துவாரகையில் அரசாண்டதைப் பற்றியோ, பாண்டவர்களின் தூதுவனாக அஸ்தினாபுரம் சென்றது பற்றியோ, அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்தது பற்றியோ பாடவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, அந்த கோகுலக் கண்ணன் தான் பாட்டுடைத் தலைவன்!
கோகுலத்தில் வளர்ந்து வரும் ஸ்ரீ கிருஷ்ணனை, கம்சன், நிறைய முறை கொல்ல முயற்சி செய்தான். இந்த முயற்சிகள் தோல்வியடைவே கண்ணனைக் கொல்வதற்கு கம்சன் ஒரு திட்டம் தீட்டுகிறான். புதிதாக தனுர் யாகம் என்ற ஒன்றை நடத்தி, அதற்கு கிருஷ்ண, பலராமர்களை அழைத்து வரச் செய்து, சாணூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களைக் கொண்டு மல்யுத்தத்தில் அவர்களைக் கொன்று விடத் தீர்மானிக்கிறான். அதற்கு யாரை அனுப்புவது? இவனுடைய ஆட்களை அனுப்பினால், கண்ணன் ஒரே நொடியில் போட்டுத் தள்ளி விடுகிறான். எனவே, வசுதேவரின் சகோதரரான விவேகம் நிறைந்த அக்ரூரை அனுப்பி, இருவரையும் அழைத்து வரச் செய்கிறான். அக்ரூரர்: அவரது சிந்தனை எப்போதும் கிருஷ்ணனைப் பற்றியே! ஸ்ரீ கிருஷ்ணன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அக்ரூரருக்கு ஒரே குஷி! கண்ணனை நேரில் பார்க்கலாமே; கொஞ்சிப் பேசி மகிழலாமே! அவருடைய உள்ளத்தில் வாஞ்சை பெருகுகிறது. கிருஷ்ணனின் லீலைகளை நன்கு அறிந்தவர். கிருஷ்ணன் தான் சாக்ஷாத் ஸ்ரீமன் நாராயணன், கம்சனை வதம் செய்ய பிறந்தவன் என்பதையும் அறிந்தவர். கிருஷ்ணன் பால் அதீத அன்பும் மாறா பக்தியும் கொண்டவர். எனவே கம்சனின் திட்டம் நிறைவேறப் போவதில்லை என்பதும் மேலும் இதுவே கம்சனின் இறுதி திட்டம், இதில் கம்சன் மடிவான் என்பதும் அவருக்கு தெரியும். அனைத்தும் அறிந்திருந்தும் கம்சன் கூறியவுடன், மறுப்பேதும் கூறாமல், "இதோ புறப்படுகிறேன்!! இப்பொழுதே அழைத்து வருகிறேன்!!!" என்று கிருஷ்ணனை விழாவிற்கு அழைக்கச் சென்றார். காரணம்? கண்ணனின் மீதுள்ள மாறா நம்பிக்கை மட்டுமல்ல, கண்ணன் மீதுள்ள தீராக் காதலும் தான். இருப்பினும் கம்சன் கிருஷ்ணனைக் கொல்வதற்குத்தான் அழைத்து வரச் செய்கிறான் என்பதுகூட அவருக்கு மறந்து போய் விடுகிறது. குறும்பு கண்ணனின் சேட்டைகளை காதால் கேட்டு மட்டுமே இதுவரை ரசித்தவர், இப்பொழுது நேரில் சென்று அவனை, அவன் அழகுகளை, அவன் அன்பை, அவன் சிரிப்பை கண்ணாரக் கண்டு ரசிக்கலாம் அல்லவா!! வழி முழுவதும் கிருஷ்ணனின் லீலைகள் பற்றியும் அவனுடன் இருக்கப் போகும் கிடைப்பதற்கரிதான நொடிகளைப் பற்றியும் மனதில் எண்ணி அசை போட்டபடியே ரதத்தைச் செலுத்திக் கொண்டு வரும் வழியில் கண்ணனின் பாத சுவடுகள் மண்ணில் தெரிந்தது. உடனே ரதத்தை நிறுத்திக் கீழே இறங்கினார். பாத சுவடுகள் இருந்த மண்ணில் புரண்டார். ஆனந்தக் கண்ணீர் விட்டார். மீண்டும் கண்ணன் நினைவு வர, ரதத்தை வேகமாக ஓட்டினார், கோகுலத்தில் நுழைந்தவுடன் சாலைகளில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். மகிழ்ச்சிக்குக் காரணம் கோகுலத்தில் எல்லோர் மனதிலும் கண்ணனே இருந்தான். அக்ரூரர் சந்தை வழியே ரதத்தில் வரும் போது பழம் விற்பவர் பழத்தைக் காண்பித்து “கொஞ்சம் கோவிந்தாவை வாங்கிக் கொண்டு போங்க” என்றார். பூக்காரி “ஒரு கொத்து கேசவனை வாங்கிக்கோங்க” என்றாள்.
இதை 'பாரிப்பு’ என்பார்கள். பாரிப்பு என்றால், ஒரு நிகழ்ச்சியை அது நிகழ்வதற்கு முன் அசை போடுவது. ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அர்ச்சிராதிகதி சிந்தனை மிகவும் அவசியம். ஸ்ரீ வைஷ்ணவர்களை 'முமூக்ஷு’ என்று அழைப்பர். இறுதியாக வைகுண்டத்தில் நித்தியவாசம் செய்யப் போகிறவர்கள் என்பது இதன் பொருள். இருப்பினும், அந்த வைகுண்டவாசத்தை தினமும் ஒருமுறையாவது சிந்தையில் நிறுத்தவேண்டியது ஒவ்வொரு வைஷ்ணவரின் கடமையாகும். திருவேங்கட யாத்திரை, அர்ச்சிராதிகதி மனம், அக்ரூர ஞானம் இம்மூன்றையுமே வைஷ்ணவர்களின் இலக்கணமாகக் கூறுவர்.
அப்படிப்பட்ட பாரிப்புடன், அக்ரூரருக்கு கண்ணனை இப்பவே பார்க்க வேண்டும் போல இருந்தது. ரதத்தை இன்னும் வேகமாக ஓட்டி யமுனா நதிக்கரையில் உள்ள பிருந்தாவனத்துக்குச் செல்கிறார். கண்ணனுடன் அளவளாவுகிறார். அவரை அழைத்துச் செல்ல வந்ததாகக் கூறினார். கண்ணனும் கம்ச ராஜ்ஜியத்துக்குள் நுழைவதற்கு ஒரு கேட்பாஸை அல்லவா எதிர்பார்த்து நிற்கிறான்? எனவே, மறுப்பேதும் தெரிவிக்காமல் பலராமனுடன் கம்சனைக் காணச் செல்கிறான். வழி நெடுக நொடி கூட இமைக்காமல் கண்ணனை கண்கள் குளிர குளிரக் கண்டு ரசித்தார், மனதில் ஆனந்தம் கொண்டார். இதனால், கிருஷ்ணன் அருகில் இருக்கும் பேரும், அவன் கடாட்ஷமும் பெற்றார் அக்ரூரர். பிறகு, அவன் கம்சனைக் கொன்றது சரித்திரம். இப்போதும், நந்தகௌன் என்ற இடத்திலிருந்து கண்ணனை அக்ரூரர் தேரில் அழைத்துச் சென்ற வழித்தடம் உள்ளது.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அக்ரூரர் போல் மாறா பக்தியும் அளவில்லா அன்பும் நம்பிக்கையும் கொண்டு எந்நேரமும் அந்த கிருஷ்ணனை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேனா?, அக்ரூரர் செய்தது போல் நான் செய்தேனா? இல்லையே! அப்படி நான் யாரையும் அழைத்துக் கொண்டு வர போகலையே! சேவிக்கணும்னு ஆசையும் என் உள்ளத்தில் இல்லையே!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment