About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 6 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறிமுகம்l

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

நவ திருப்பதிகளில் ஒன்றான, மதுரகவியாழ்வாரால் பெருமை பெற்ற திவ்ய தேசமான திருக்கோளூரில் ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அந்த பெண் மதுரகவியாழ்வாருடைய நிஷ்டை படைத்தவள். வைத்த மாநிதி பெருமானுடைய அனுக்ரஹம் பெற்றவள். நம்மாழ்வாருடைய பாசுரத்திலே திளைத்தவள். அப்படிப்பட்ட அப்பெண் எந்த காரணத்தாலோ அவ்வூரை விட்டு வெளியேறி போய்க் கொண்டிருந்த அதே சமயம், ஸ்வாமி ராமானுஜர் பல திவ்ய தேசங்களுக்கு யாத்திரையாக வருகிறார். அப்படி ஒவ்வொரு ஊராக போய்க் கொண்டிருந்த அவர் திருக்கோளூருக்குள் சென்று கொண்டிருந்தார். ராமாநுஜருக்கு நம்மாழ்வாரிடத்தில் தனி ப்ரீதியும் பக்தியும் இருந்தது. காரணம், தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே பல திவ்ய தேச பெருமாள்களின் தரிசனம் கிடைக்கப் பெற்று,  மங்களாஸாஸநம் செய்த பெருமைக்கு உரியவர் நம்மாழ்வார் மட்டுமே! அவர் அவதரித்த ஆழ்வார் திருநகரி திருத்தலத்தை தரிசித்து வணங்கிய பின்னர், ராமாநுஜர், 'எல்லோரும் விரும்பிப் புகும் ஊர்’ என்று நம்மாழ்வாரால் போற்றப் பெற்ற திருக்கோளூருக்குச் செல்கிறார். அந்த திவ்ய தேசத்தின் புறநகரில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். ஸ்வாமியை பார்த்த அப்பெண் மிகுந்த பக்தியோடு அவருக்கு தெண்டன் சமர்ப்பிகிறாள். அப்போது ஸ்வாமி அவளை பார்த்து "எங்கிருந்து வருகிறாய்" என்று வினவினார். அதற்கு அப்பெண் திருக்கோளூரை விட்டு வெளியேறுவதாக கூறினாள். அதை கேட்டு ஆச்சர்யம் அடைந்த ஸ்வாமி, ‘‘அம்மா, உனக்குக் குறை தான் என்ன?’’ ஏழு பேராக ஒரே துணியை அணிந்து கொண்டாலும், எது கிடைத்தாலும் சாப்பிட்டு கொண்டு, திருக்கோளூரிலேயே இருக்க வேண்டும் என்று அனைவர்க்கும் புகு ஊராக இருக்கும் இவ்வூர் உமக்கு மட்டும் ஏன் போகும் ஊரக இருக்கிறது? நாங்கள் எல்லோரும் இந்த ஊர் கிடைக்குமா என்றெண்ணி உள்ளே புகுர்கிறோம் நீர் ஏன் வெளியே வந்தீர்? என்று வினவ, அதற்கு அந்த பெண், “எனக்கு என்ன யோகியதை இருக்கிறது இந்த ஊரில் இருக்க? எனக்கு எந்த யோகியதையும் இல்லை. காலந்தோறும் தோன்றிய திருமாலடியார்கள் போல், தான் எதனையும் சாதித்து விடவில்லை என்றும், எந்த பெரியவரை போலவும் நான் நடந்துக் கொள்ளவில்லையே. அவர்களை போல நான் வாழ்ந்து காட்ட வில்லையே! அதனால் தான் இந்த ஊரில் இருப்பதே தவறு என்று எண்ணி ஊரை விட்டு புறப்படுகிறேன்” என்று கூறி, அவர்களுடைய செயற்கரிய செயல்களைப் பட்டியலிட்டுக் 
கூறினாள். 


இராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஆழ்வார்களின் வரலாறுகள் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் சான்றோர்கள் செய்த எண்பத்தோரு அருஞ்செயல்களைக் கூறினாள். அத்தகைய சான்றோர்கள் செய்தது போன்ற செயல்கள் எதனையும் தான் செய்யவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். மிகச் சிறந்த திருத்தலமாகிய திருக்கோளூரில், தான் தொடர்ந்து வசிக்கத் தகுதியற்றவள் என்று குறிப்பிட்ட அப்பெண்மணி, அடியேன் அவர்களைப் போல் ஞானமும் அன்பும் பக்தியும் கொண்டிருந்தேன் என்றால் நானும் இவ்வூரில் தங்கலாம். ஆனால் அவர்களைப் போல் ஞானம் கொன்டவள் இல்லை. அழகிய மரமாகும் திறன் இல்லா விதை வயலில் இருந்தால் என்ன பாலைவனத்தில் இருந்தால் என்ன? இரண்டும் அதற்கு ஒன்று தானே. அடியேன் கூறிய நற்காரியங்கள் ஏதும் செய்திராமல், எவ்வாறு நான் இந்த ஊரில் வசிப்பதற்குத் தகுதியானவளாக இருக்கமுடியும்? என்னுடைய இருப்பின் காரணமாக திருக்கோளூர் தன் புனிதத்தை இழந்து விடக்கூடாது. அதனால்தான் அவ்வூரை விட்டு வெளியேறுவதாகக் கூறினாள். வயலில் கிடக்கும் முயல் புழுக்கையைப் போல், தான் திருக்கோளூரில் பயனற்றவளாக இருப்பதாகக் கூறினாள்.

அத்தனையும் பொறுமையாக கேட்ட ஸ்வாமி ராமானுஜர், இந்த ஊரில் இருப்பதற்கு யோகியதை இல்லை என்று சொல்பவளே இந்த பேச்சு பேசுகிறாளே! சாதாரணப் பெண்மணிக்கே இவ்வளவு ஞானம் இங்கு உள்ளதே என வியந்தார். அப்படியானால் இந்த ஊரில் இருப்பவர்கள் எப்படி பட்டவர்களாக இருப்பார்கள் என்று நினைத்து ஆனந்தப்பட்டு ஆச்சர்யப்பட்டு போனார். அவள் சொன்ன அத்தனையையும் யாராலும் இருந்து விட முடியாது. யாரோ சில புருஷர்கள் ஸ்திரீகள் இருந்திருக்கிறார்கள். அவர்களை போல என்னால் இருக்க முடியவில்லையே என்று கூறினாள். இராமானுஜரும் திருக்கோளூர்ச் சான்றோர்களும் அப்பெண்மணியின் ஞானத்தையும், பணிவையும் கண்டு வியந்தனர். அதை கேட்ட ஸ்வாமி, "பெண்ணே! "ஸ்ரீ வைஷ்ணவத்தின் முழு சரித்திரத்தையும், அதன் கொள்கைகளையும் எண்பத்தி ஒன்று வரிகளில் அசாதாரணமாக விளக்கிய உன்னை விட இவ்வூரில் வாழ தகுதியானவர் எவர் இருக்க முடியும்?!" உனக்கு தான் இந்த ஊரில் இருக்க யோகியதை, நான் சொல்கிறேன் வா என்று சொல்லி அப்பெண்மணியை இராமானுஜர் தன்னுடன் அழைத்துச் சென்று, வைத்தமாநிதிப் பெருமாளைச் சேவிக்கச் செய்தார். ஊருக்குள் அழைத்து சென்று அவள் இல்லத்தில் தங்கி அவளை தளிகை பண்ண சொல்லி பெருமாளுக்கு கண்டருளப் பண்ணி அமுது பண்ணினார். ஸ்வாமி எந்த இடத்திலும் சாப்பிடுவது கிடையாது. கிடாம்பியாச்சான் ஒருவர் தொட்டு மட்டும் தான் சாப்பிடுவார். கிடாம்பியாச்சானின் மடப்பள்ளி மடத்தில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று அவருடைய அசார்யர்களில் ஒருவரான திருகோட்டியூர் நம்பியின் ஆணை. நிச்சயம் ஸ்வாமி அதை மீறி நடக்க மாட்டார். இருந்தும் அந்த பெண் தொட்டு ஸ்வாமி சாப்பிடுகிறார் என்றால் அந்த பெண்ணிடத்தில் நிச்சயமாக ரொம்ப உசந்த லக்ஷணங்கள் நிறைந்த குணம் இருக்கிறது என்று தானே அர்த்தம். அவள் குறிப்பிட்ட ஒவ்வொன்றும் வைணவத்தைச் சாறு பிழிந்து கூறுவது போல இருந்தது. அவற்றை சுருங்கச் சொல்லி விளங்கவைத்தது, அப்பெண்ணின் ஞான அறிவைக் கூறுகிறது. அதனால் தான் அவள் சொன்ன அந்த காரணங்கள் "பெண்பிள்ளை ரஹஸ்யம்" என்று ஏட்டில் பதித்து வைத்து எல்லா அசார்யர்களும் ஆசையோடு ஆதரித்து வந்திருக்கிறார்கள். திருமாலடியார்களின் செயற்கரிய செய்லகளை இரண்டிரண்டு அடிகளில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவற்றுள் இதிகாச புராண வரலாறுகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு வரலாற்றிலும் ஒவ்வொரு ரகசியம் (மறை பொருள்) அடங்கியுள்ளது.

அவள் சொல்லும் காரணங்களை தான் “திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள்” என்று நமக்கு தொகுத்து கொடுத்துள்ளர்கள். ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வரி தான். ஆனால் அதில் உள்ள கதைகள், அதன் அர்த்தங்களை நாம் புரிந்து கொண்டோமேயானால் பல பெரியவர்கள் எப்படியெல்லாம் நடந்துக் கொண்டார்கள் என்பதையும், பல சம்ப்ரதாய விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த வார்த்தைகள் நம் மனதில் சட்டென்று பதிந்து அதை கடை பிடிக்க வேண்டும் என்ற வைராகியத்தையும் கொடுக்க கூடியதாக சிறப்புற்று விளங்குகிறது. இதன் மூலம் பல பெரியவர்கள் எப்படி நடந்துக் கொண்டார்கள் என்பதை விளக்கமாகவும் தெரிந்து கொள்கிறோம்.

அதை ஒவ்வொரு வார்த்தையாக விளக்கத்தோடு இப்போது நாம் பார்க்கலாம். முதலில் என்னென்ன வார்த்தைகள் சொன்னாள் என்பதை பார்க்கலாம். அடுத்தடுத்து ஒவ்வொரு வார்த்தைக்குரிய கதையையும் அதிலுள்ள கருத்தினையும் பார்க்கலாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment