About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 25 August 2023

திவ்ய ப்ரபந்தம் - 18 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 18 - பிள்ளை வாயுள் உலகம் ஏழும் கண்ட யசோதை
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

கையும் காலும் நிமிர்த்துக்* கடார நீர்*
பைய ஆட்டிப்* பசுஞ் சிறு மஞ்சளால்*
ஐய நா வழித்தாளுக்கு* அங்காந்திட* 
வையமேழும் கண்டாள்* பிள்ளை வாயுளே|

  • கையும் - திருக்கைகளையும்
  • காலும் - திருவடிகளையும்
  • நிமிர்த்து - நீட்டி நிமிர்த்து
  • கடாரம் - கடாரத்தில் காய்ச்சின
  • நீர் - திருமஞ்சனத் தீர்த்தத்திலே
  • பைய - திருமேனிக்குப் பாங்காக
  • ஆட்டி - ஸ்நாநம் செய்வித்து
  • பசுஞ் சிறு மஞ்சளால் - குறுங்கண்ணான பசு மஞ்சளால்
  • ஐய - மெல்லிதான
  • நா - நாக்கை
  • வழித் தாளுக்கு - வழித்தவளான யசோதைக்காக
  • அங்காந்திட - கண்ணன் வாயைத் திறக்க, யசோதையானவன்
  • வையம் ஏழும் - உலகங்களையும் 
  • கண்டாள் - ஸாக்ஷத்கரித்தாள்
  • பிள்ளை - கண்ணபிரானுடைய
  • வாயுள் - வாயினுள்ளே

குழந்தைப் பிறந்தவுடனேயே, கருவிற்குள் மடங்கிய நிலையிலேயே இருப்பதால், அதனைக் குளிப்பாட்டும் பொழுது, உடலை நன்றாக உருவி விட்டு, கைகளை முன்னும் பின்னும் மடக்கி, கால்கள் வளைந்து விடாது இருப்பதற்காக, அதை நன்கு விரைப்பாக நீட்டிப் பிடித்த வண்ணம் வெந்நீரை ஊற்றுவர். குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காக அகன்ற, பெரிய பாத்திரத்தில் நீரூற்றி, அதை கை பொறுக்கும் அளவுக்கு இதமாக சூடேற்றி, கண்ணனின் கை கால்களை நன்கு உருவி விட்டு, அவை நன்கு உறுதி படுவதற்காக, இதமான வெந்நீரை ஊற்றி கால்களை நிமிர்த்தி விட்டாள் யசோதை. கிருமி நாசினியாகவும், மருத்துவக் குணம் உடையதுமான மஞ்சளை, நன்றாக மைப்போல் அரைத்து, அதை உடல் முழுவதும் பூசினாள். அதன் பிறகு, கண்ணனின் நாக்கிலுள்ள அசடினை எடுப்பதற்காக, ஒரு சிறிய மஞ்சளால் நாவினை வழிக்க வாயைத் திறக்கும் போது, அண்டகுலத்துக்கு அதிபதியானவனின் வாயினுள் ஏழு உலகத்தையும் கண்டாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment