||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
029 கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே|
ஜனகர் என்பவர் மிதிலையின் அரசனாவார். இவர் இராமாயண காவிய நாயகி, சீதையின் தந்தையாவார். ஜனகர் எனும் சொல்லுக்கு தந்தை என்று பொருள். ஜனகர் மாபெரும் தத்துவ ஞானி. கர்ம யோகி. தாமரை இலைத் தண்ணீர் போல, பட்டும் படாமல், ஒட்டி உறவாடாமல், எதன் மீதும் மோகம் கொள்ளாமல், எதையும் எதிர் பார்க்காமல், சாஸ்திரத்தில் கூறியது போல் வாழ்க்கை நடத்தினார். இறைவனுக்கு செய்யும் தொண்டாகவே மன்னன் பொறுப்பை ஏற்றார்.
மிதிலை மன்னர் ஜனகர், பிரம்மஞானம் அடைய குரு யாக்ஞவக்யர் என்பவரிடம் கர்மஞானம் கற்று மிகப்பெரிய ஞானியாக விளங்கினார். அவருடைய குரு யாக்ஞவக்யர் என்ற மஹரிஷி. ஜனகர் பால் பேரன்பு கொண்டவர்.
குரு யாக்ஞவக்யதிடம் காலட்ஷேபம் கேட்க ரிஷிகள் முதற்கொண்டு அனைவரும் வருவர். ஜனக்கரும் வருவார். அவர் வந்த பிறகே காலட்ஷேபம் ஆரம்பிப்பார் குரு. இதனால மற்ற ரிஷிகளுக்கு பொறாமை ஏற்பட்டது. அவரை குற்றம் சொல்லி கொண்டு இருந்தனர். அதனால் ஜனகரின் ஞானத்தை வெளியுலகிற்கு அறிவிக்க பிரம்மஞானி விரும்பினார்.
தனது யோக ப்ரபாவத்தால் மிதிலை நகரம் நெருப்புப் பற்றி எரிவதைப் போல ஒரு மாயையை ஏற்படுத்தினார். சீடர்கள் அனைவரும், தங்கள் சொத்துகளை காத்துக் கொள்ள அலறி அடித்து ஓடினர். ஆனால், ஜனகரோ அசையவில்லை. பின்னர், ஓடிய சீடர்கள் அது மாயை என உணர்ந்து, வெட்கித் தலை குனிந்தனர். யாக்ஞவல்கியர், ஜனகரைப் பார்த்து,"ஜனகரே! அனைவரும் ஓடிய போதும் நீங்கள் ஏன் ஓடவில்லை?" என்றார்
"ஆத்மா அழிவற்றது. இடையில் வருபவை அழியக்கூடியவை. ஆத்மஞானம் அடைய வேண்டுமானால், எனது இப்போதய நிஷ்டையிலிருந்து நான் வெளியே வருவதாக இல்லை" என்றார் ஜனகர்.
ஜனகர், ஒரு ராஜ்ஜியத்தின் மன்னனாய் இருந்த போதும் கர்ம ஞானத்தைக் கடைபிடித்து வந்தார். இதை கண்டு மகிழ்ந்த அவரது குரு, மிதிலையை மீண்டும் பொலிவுடன் மிளிர செய்தார்.
ஜனகர் மன்னனாக அரியணை ஏறிய நேரம், அவரின் ஞானத்தை அறிய, பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணன் பிராமணன் போல் மிதிலை வந்தார். தவறு செய்து, காவலாளிகள் கையில் அகப்பட்டு, ஜனகரின் அரசவையில் நின்றார். பிராமணனை கண்ட ஜனகர், அவர் செய்த தவறுக்கு அவரை நாடு கடத்தினார். இதை கேட்ட பிராமணன், மன்னனிடம், “உங்கள் நாட்டின் எல்லை எது?” என்று வினவ, அக்கூற்றின் உண்மையை அறிந்து கொண்ட மன்னர், ”இந்நாட்டில் இருக்கலாமா என்று தாங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.” என்றார். மன்னனின் அறிவையும், பண்பையும் பாராட்டிய பரம்பொருள், அவருக்கு ஆசிகளை வழங்கினார்.
அர்ஜுனனுக்கு கீதை உரைக்கும் பரமாத்மா, ஜனகரை ராஜரிஷி என்றே அழைத்தார். ஜனகர் கர்ம யோகியாய் வாழ்ந்து சித்தி பெற்றார் என்று கிருஷ்ணன் அர்ஜுனனிடம் உரைத்தார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அந்த ஜனகரைப் போல கர்மஞானத்தை நான் கடைபிடிக்கவில்லையே!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment