About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 25 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பத்தி ஒன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

031 குடை முதலானது ஆனேனோ அநந்தாழ்வானைப் போலே|

காச்யபர் என்ற மகரிஷிக்கு கத்ரு, வினதை என இரு மனைவிகள். இவர்கள் காச்யபரிடம் புத்திரபாக்கியம் வேண்டும் என வேண்டினர். கத்ரு தனக்கு ஆயிரம் பிள்ளைகள் வேண்டும் என வரம் கேட்டாள். வினதை தனக்கு அறிவுடை இரண்டு புத்திரர்களைக் கேட்டாள். அவளுக்கு அருணனும், கருடனும் பிறக்கின்றனர். சூரியனின் தேரோட்டியாகிறான் அருணன். கத்ருவின் ஆயிரம் புதல்வர்களும் ஆயிரம் அரவங்களாக பிறக்கின்றனர். அவர்களுள் மூத்தவன் ஆதிசேஷன். ஆதிசேஷன், தன் சகோதரர்கள் எப்போதும் பொறாமைக் குணம் கொண்டவர்களாக இருப்பதாலும், கருடனுடன் எப்போதும் சண்டையிடுபவர்களாகவும் இருப்பது கண்டு மனவேதனையடைந்தார்.


பிரம்மாவிடம், "என் மனம் எப்போதும் தர்மசிந்தனையில் இருக்க வேண்டும்" என வேண்டினார். அதற்கு பிரம்மா, எப்போதும் அதன் மையப்புள்ளியிலிருந்து அசைந்த வண்ணம் இருக்கும் பூமியை அதன் அச்சிலிருந்து அசையாது உனது ஆயிரம் தலைகளால் பிடித்துக் கொள்' என்கிறார். இந்த பூவுலகை ஆதிசேஷன் தலையில் தாங்கி வருவதாக மகாபாரதம் கூறுகிறது. அப்படிப்பட்ட ஆதிசேஷனை எம்பெருமான் தன் படுக்கையாக்கிக் கொண்டார்.


அரவுகளுக்கு அரசனாக விளங்கும் ஆதிசேஷனை வைணவ நெறியில் அநந்தாழ்வான் என்று கூறுவர். பெருமாளைப் பிரிந்து செல்லாத ஆதிசேஷன் அவருக்குப் பலவிதத்திலும் பல வடிவங்களில் இருந்து தொண்டு செய்கிறான். 

அநந்தாழ்வான், ஆதிசேஷனின் பெயர். வடமொழியில் ஆதிசேஷன், தமிழில் ஆனந்தன். சேஷன் என்றால் தொண்டன் என்று பொருள். ஆதிசேஷன், பாற்கடலில் திருமாலின் படுக்கையாக இருக்கின்ற நாகமாகும். ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, திருமாலின் ஒவ்வொரு திருஅவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர்.

பெருமாள் வெளியில் எழுந்தருளும் போது, ஆதிசேஷன் அவருக்குக் குடையாக இருந்து கைங்கர்யம் செய்கிறார். பெருமாள் ஓரிடத்தில் அமர்ந்தால், சேஷன் அவருக்குச் சிங்காதனமாக இருக்கிறார். திருமால் நிற்கும் பொழுது ஆதிசேஷன் பாதுகைகளாக விளங்குகிறார். திருப்பாற்கடலில் பெருமாள் எழுந்தருள ஆதிசேஷன், புணையாக (தெப்பமாகத்) திகழ்கிறார். ஆதிசேஷனிடம் நாகரத்தினங்கள் இருப்பதால் அவற்றின் ஒளியால் பெருமாள் சந்நதியில் மணிவிளக்காகவும் விளங்குகிறார். பெருமாளுக்குரிய பூம்பட்டாகவும் சாய்ந்து, பள்ளிக் கொண்டபோது பாற்கடலில் பாயாகவும், பரிவட்டமாகவும் அணைத்துக் கொள்ளும் போது தலையணையாகவும் ஆதிசேஷனே திகழ்கிறார். குடை, அரியணை, பாதுகை, புணை, விளக்கு, பூம்பட்டு, மெல்லணை ஆகிய அனைத்துமாகிக் கைங்கர்யம் செய்யும் அநந்தாழ்வானின் பெருமைகளுக்கு, நல்ல குணங்களுக்கு ஓர் எல்லையே இல்லை.  எல்லா காலங்களிலும் எல்லா தொண்டுகளையும் ஆதியிலிருந்து செய்வதால் ஆதிசேஷன் என்று பெயர் பெற்றார். அனந்தன் என்றால் எல்லையற்ற மகிமையை உடையவர் என்று பொருள்.

ஸ்ரீராமானுஜரின் சீடர்களில் ஒருவர் பட்டர். அவருக்கு சர்வ தந்திர ஸ்வதந்திரம் என்னும் சிறப்புப் பெயர் உண்டு. இது பிடிக்காத ஒருவர் அவரை சோதிக்க எண்ணி ஒரு குடத்தினுள் பாம்பு ஒன்றைப் போட்டு அதன் வாயை இறுக்க மூடி அவரிடம் கொடுத்து, "உள்ளே என்ன இருக்கிறது" எனக் கேட்டார்

கையில் குடத்தை வாங்கிய பட்டர், குடத்தினுள் பாம்பு அசைவதை உணர்ந்தார். "இது எம்பெருமானின் குடை" என்றார்.

"பட்டரே! உள்ளே இருப்பது பாம்பு. உங்கள் எண்ணம் தவறு" என்றார் அவர்.

அதற்கு பட்டர், "இந்த பாம்புதான் எம்பெருமானுக்கு குடையாக இருப்பதாக பொய்கையாழ்வார் பாடியுள்ளார்' என பதிலுரைக்கிறார். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அந்த குடை முதலானது போல அநந்தாழ்வார் விளங்கினாரே. நான் அப்படியில்லையே!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment