||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
030 கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையாரைப் போலே|
திருமங்கை ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலி திருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். 'கலியன்' என்னும் இயற்பெயர் கொண்ட இவர், சோழ மன்னனுக்கு படைத் தலைவனாக இருந்தார். ஒரு முறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவரை சோழ தேசத்தின் "திருமங்கை" (சிறுவாலி) நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.
இவர் குமுதவல்லியின் அழகில் மயங்கி முறையாகப் பெண் கேட்டுச் செல்கிறார். ஆனால், குமுதவல்லியோ, வைஷ்ணவரைத் தவிர வேறொருவரை மணக்க மாட்டேன் என்கிறாள். அதனால் பரகாலர், பஞ்சசமஸ்காரம் செய்து கொண்டு ஸ்ரீவைஷ்ணவர் ஆகிறார்.
குமுதவல்லி, அவர் 1008 வைஷ்ணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கிறாள். அதையும் அவர் நிறைவேற்றுகிறார். தினமும் ஆயிரம் திருமாலின் அடியார்களுக்கு அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்து வரலானார்.
குமுதவல்லி சொன்னதற்காக, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், பெருமாள் கோயில்கள் திருப்பணிகளுக்கும் தன் செல்வத்தை செலவிடுகிறார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தார். அதனால், தன்னை குறுநிலமன்னனாக ஆக்கிய சோழ அரசருக்கு அவரால் கப்பம் செலுத்த முடியவில்லை. அதனால் கைதாகிறார்.
அன்றிரவு காஞ்சி வரதராஜப் பெருமாள் அவர் கனவில் தோன்றி, வேகவதி நதிக்கரையில் புதையல் இருக்கும் ரகசியத்தைக் கூறுகிறார். சோழ மன்னன் அனுமதியுடன், சிறையில் இருந்து வருபவர், புதையலைக் கண்டெடுக்கிறார்.
அதில் ஒருபகுதியை கப்பம் கட்டி விட்டதால், மீதத்தை பழையபடி செலவிடுகிறார். மீண்டும் வறுமை. பரகாலராகிய திருமங்கை ஆழ்வார் இப்போது புது முடிவுக்கு வருகிறார். களவு புரிந்து கொள்ளை அடித்தாவது அடியார்களைப் பேண வேண்டும், கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதே அது.

நான்கு பேருடன் கூட்டு சேர்ந்து வழிப்பறி செய்ய ஆரம்பிக்கிறார். செல்வந்தர்கள் தாக்கப் படுகின்றனர். பொருள்கள் களவாடப்பட்டு எம்பெருமானின் கைங்கர்யத்திற்கு செலவிடப்படுகிறது.
ஒருநாள் பெருமாள், அந்தண வேடமிட்டு லட்சுமியுடன் ஒரு திருமண கோஷ்டி போல தன் பரிவாரங்களுடன் கிளம்பினார். அவர்களைப் பார்த்ததும் திருமங்கை ஆழ்வார் "நில்" என்றார் "நகைகள் எல்லாவற்றையும் கழட்டுங்கள்" என்றார்

பெருமாளும் பயந்தவர் போல நகைகள் அனைத்தையும் கழட்டினார். லட்சுமியும் கழட்டினார். கடைசியில், பிராட்டியின் மெட்டி மட்டுமே இருந்தது. அதைக்கூட விட்டு வைக்க மனமில்லாத திருமங்கை ஆழ்வார், அதையும் கழட்டுங்கள் என்றார். ஆனால் அதை அவரால் கழட்ட முடியவில்லை. உடனே ஆழ்வார் மண்டியிட்டு கழட்டப் பார்த்தார். இயலவில்லை. பின்னர், தன் பற்களால் கடித்து கழற்றினார்.
எம்பெருமான் சிரித்துக் கொண்டே "நீர் நமது கலியனோ" (பலம் மிக்கவன்) என்றார். கழற்றிய ஆபரணங்களை ஒரு பட்டுத் துணியில் மூட்டையாய்க் கட்டி தூக்க முயன்றார் ஆழ்வார். தூக்க முடியாமல் கனத்தது.
பெருமாளை நோக்கி, “எதும் மந்திரங்கள் போட்டாயா? நீ என்ன மாயங்கள் அறிந்தவனா? மந்திரத்தை கூறும், சொல்லாவிடில் இந்த வாளுக்கு இறையாவாய்” என்று தம் கையில் வாளைக் காட்டி அதிகாரத்துடன் கேட்க, தனக்கு சேவை செய்ய, தன் அடியார்களுக்கு சேவை செய்ய திருடவும் துணிந்த திருமங்கையை அழைத்து சென்று அருகில் இருந்த ஆல மரத்தடியில் அவரை அமர்த்தி, மந்திரங்களுக்கு அரசனான திருமந்திரத்தை ஓதினார். எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய) உபதேசித்தார்.

ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க எம்பெருமான் தன் திருஉருவில் ஸ்ரீமன் நாராயணனாக தாயாருடன் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது. தனது பெரிய திருமொழியின் முதல் பாசுரத்தை (வாடினேன் வாடி வருந்தினேன்) பாடினார். திருமங்கை ஆழ்வார் கதறினார். "கண்டு கொண்டேன் நாராயணா என்ற நாமம்" என கூத்தாடினார்.
பின்னர் தன் அனுபவங்களை ஆசு, சித்திரம், மதுரம், விஸ்தாரம் என நான்குவகைக் கவிகளாகப் பாடினார். நான்கு வேதங்களின் உட்பொருளை நான்கு பிரபந்தங்களாகப் பாடினார்.
சிக்க்ஷை, வியாகரணம், கல்பம், நிருத்தம், ஜோதிசம், சந்தஸ் என ஆறு பிரிவுகளின் உட்பிரிவை பெரிய திருமொழி, திருக்குறுதாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடலில் பாடி வைத்தார்.
நாலாயிர திவ்யபிரபந்தத்தில் அதிக பாசுரங்களை பாடி எம்பெருமான் சந்நிதிகளை மங்களாசாசனம் செய்தார்.
மெட்டியை கல்லால் கடிக்கப் போக; எட்டெழுத்து மந்திரத்தை பகவானே ஆசானாக இருந்து உபதேசம் பெற்ற பாக்கியம் உடையவர் திருமங்கை ஆழ்வார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " திருமங்கை ஆழ்வார் போல் ஸ்ரீமன் நாராயணனின் திருவடி விரலை கடித்தாவது அவரின் அருள் பெரும் பாக்கியத்தை பெற்றேனோ? அந்த பாக்கியத்தைப் பெறாத நான் இங்கிருந்தால் என்ன போனால் என்ன என்கிறாள்!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment