||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 19 - அருந்தெய்வம்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வாயுள் வையகம் கண்ட* மட நல்லார்*
ஆயர் புத்திரனல்லன்* அருந் தெய்வம்*
பாய சீருடைப்* பண்புடைப் பாலகன்*
மாயனென்று* மகிழ்ந்தனர் மாதரே|
- வாயுள் - பிள்ளையின் வாயினுள்ளே
- வையகம் - உலகங்களை
- கண்ட - பார்த்த
- மடநல்லார் - குணவதிகளான
- ஆயர் புத்திரன் அல்லன் - இவன் இடைப் பிள்ளை அல்லன்
- அருந்தெய்வம் - பெறுதற்கு அரிய தெய்வம்
- பாய சீர் உடை - பரம்பின புகழை உடையனும்
- பண்புடை - எளிமையான குணங்களை உடையனுமான
- பாலகன் - இந்த சிறுப் பிள்ளையானவன்
- மாயன் - ஆச்சர்யமான எம்பெருமான்
- என்று - என்று ஒருவர்க்கு ஒருவர் சொல்லிக் கொண்டு
- மகிழ்ந்தனர் - ஆனந்தித்தார்கள்
- மாதர் - ஸ்த்ரீகளானவர்கள்
குழந்தை கண்ணபிரானின் நாவினை நல்ல மஞ்சளால் வழித்துவிட, அவன் வாயை அங்காந்திட்ட போது, யசோதை குழந்தையின் வாயினுள்ளே வையம் ஏழினையும் கண்டாள். அவ்வருங் காட்சியை, உடனிருந்த ஆயர்குலப் பெண்களிடம் யசோதை காட்டிய போது, பேதை பெண்டிதர்களும் எல்லா உலகங்களையும் கண்டு களித்தனர். அவர்கள் வெகு ஆச்சர்யத்துடன் ஒருவருக்கொருவர், ''இவன் ஆயர் குலத்தவருக்குப் பிறந்த சாதாரண மானுடப் பிள்ளையே அல்லன்; காண்பதற்கும், பெறுவதற்கும் அரிதான தெய்வமிவன்; எல்லாராலும் விரும்பத் தகுந்தவனும், மேன்மையான புகழும், பெரும் கீர்த்தியும், கல்யாண குணங்களும் உடைய இந்த குழந்தை நம் குலத் தெய்வமான மகத்தான மாய சக்தி படைத்தவன்" என்று கூறி பெரும் மகிழ்ச்சி கொண்டனர் ஆயர் குலப் பெண்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment