||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 17 - முல்லை அரும்பு போன்ற பற்களை உடையவர்கள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
கொண்ட தாளுறி* கோலக் கொடு மழுத்*
தண்டினர்* பறியோலைச் சயனத்தர்*
விண்ட முல்லை* அரும்பன்ன பல்லினர்*
அண்டர் மிண்டிப்* புகுந்து நெய்யாடினார்|
- கொண்ட தாள் - நெருங்கிப் பின்னப்பட்ட
- உறி - உறிகளையும்
- கோல - அழகிய
- கொடு - கூர்மையான
- மழு - மழு மற்றும்
- தண்டினர் - தடிகளை கொண்டவர்
- பறியோலை - தாழை மடல் ஓலை
- சயனத்தர் - படுக்கையில் சயனிப்பவராய்
- விண்ட - மலர்ந்த
- முல்லை அரும்பு அன்ன - முல்லை அரும்பு போன்ற
- பல்லினர் - பற்களை உடையவர்களான
- அண்டர் - இடையர்கள்
- மிண்டிப் புகுந்து - நெருங்கிப் புகுந்து
- நெய்யாடினார் - எண்ணெய் தேய்த்த உடலோடு தழுவினர்
ஆநிரைகளை மேய்ப்பதற்கு நெடுந்தொலைவு சென்ற ஆயர்கள், பாதமளவிற்கு நீண்ட உறியையும், அழகிய, கூரிய மழு என்ற அரிவாளையும் கொண்டவர்கள்; மேலும், ஆநிரைகளை ஒழுங்கு படுத்துவதற்காக நீண்ட, தடித்த குச்சியினை (கோல்) உடையவர்கள்; அவர்கள் ஓய்வெடுக்கவும், உறங்கவும், பனை ஓலையினை படுக்கையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்; முகிழ்கின்ற முல்லை மலரின் அரும்பினைப் போன்ற வெண்மையான பற்களை உடைய ஆயர்கள், தங்கள் நிரைகளை மேய்க்கச் செல்லும் பாதி வழியிலேயே கண்ணன் பிறந்து விட்ட நல்ல செய்தியைக் கேட்டு, உடனே வீட்டிற்குத் திரும்பினர்; வீட்டிற்கு வந்தவுடன், கண்ணன் பிறந்திருந்த நல்ல நாளினை முன்னிட்டு எண்ணெய்க் குளியலாடினர். ஒருவருக்கொருவர் எண்ணை தேய்த்த உடம்புடன் ஆலிங்கனம் செய்தும், ஆனந்தமாக ஆடியும் பாடியும், ஸ்நானம் செய்தும் மகிழ்ந்தனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment