||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பிருந்தாவனம், வத்சாசுரன் வதம்|
ஒரு நீண்ட பயணத்திற்கு பிறகு அவர்கள் பிருந்தாவனம் அடைந்தார்கள். அங்குள்ள அழகிய காட்சிகளையும், கோவர்த்தன மலையையும், யமுனை நதியில் மணல் மேடுகளையும் கண்டு கிருஷ்ணனும் பலராமனும் மகிழ்ச்சி கொண்டனர். இவர்களின் குறும்புச் சேட்டைகளைக் கண்டு, கோபர்களும் கோபிகளும் மகிழ்ச்சியுற்றார்கள்.
இவர்கள் இருவரும் சற்றுப் பெரியவர்களானதும் முதலில் கன்றுகளை மேய்க்கும் வேலை, பிறகு பசுக்களை மேய்க்கும் வேலை என்று இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த வேலை கிடைத்ததைப் பற்றி இந்த சிறுவர்கள் மகிழ்ச்சியே அடைந்தார்கள். ஏனென்றால் இப்போது மற்றச் சிறுவர்களுடன் ஊருக்கு வெளியே சுற்றலாம் அல்லவா!
மற்ற யாதவச் சிறுவர்களுடன் சேர்ந்து அவர்கள் கன்றுகளை வெளியே அழைத்துச் சென்றார்கள். தங்களுடன் கூட நிறைய விளையாட்டுக் கருவிகளையும் எடுத்துச் சென்றார்கள். பிருந்தாவனத்தில் நிறைய மயில்கள் இருந்தன. கிருஷ்ணன் தன் புல்லாங்குழலில் வாசிப்பான். மயில்கள் அவனுடைய கீதத்துக்கு இசைய நடனமாடும். அது ஒரு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
கிருஷ்ணனும் பலராமனும் கூட ஆடுவார்கள். அவர்களுடைய ஆட்டமும் அவர்களுடைய தண்டைமநிகளின் ஓசையும் அவர்களுடைய நண்பர்களை மகிழ்விக்கும். சில வேளைகளில், அவர்கள் தங்கள் உடலை கம்பளியால் போர்த்துக் கொண்டு, பசுக்களும், காளை மாடுகளும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்வதைப் போல் நடிப்பார்கள். சில சமயங்களில் காட்டு மிருங்கங்களை போல ஒலி எழுப்புவார்கள். இப்படியாக, சாதாரண சிறுவர்களைப் போல அவர்கள் விளையாடி எல்லோரையும் மகிழ்வித்தார்கள்
ஒரு நாள் யமுனைக் கரையில் மற்றச் சிறுவர்களுடன், பலராமனும் கிருஷ்ணனும் கன்றுகள் மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணனைக் கொல்லுவதற்காக, வத்சாசுரன் என்ற ஓர் அசுரன் அங்கே வந்து சேர்ந்தான். அவன் ஒரு கன்றின் உருவம் எடுத்துக் கொண்டு மற்றக் கன்றுகளோடு கலந்து விட்டான். ஆனால் அவனால் கிருஷ்ணனின் கண்களிலிருந்து தப்ப முடியவில்லை. கிருஷ்ணன் அவனைக் கண்டு கொண்டு பலராமனுக்கு அடையாளம் காட்டினான்.
பிறகு கிருஷ்ணன் இயல்பாக போவது போல அந்தக் கன்றுக் குட்டியின் பக்கம் சென்று அதன் பின்னங்கால்களைப் பற்றி, சுற்று சுற்று என்று சுற்றி கடைசியில் ஒரு பெரிய மரத்தின் மீது அதை ஓங்கி அடித்தான். அடிப்பட்ட அசுரன் இறந்து தன் சுய உருவில் கீழே விழுந்தான். அத்தனை பெரிய உடலைப் பார்க்க, கூட இருந்த சிறுவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். அவனுடைய சாமர்தியத்திற்காக அவர்கள் கிருஷ்ணனைப் பாராட்டினார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment