About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 15 July 2023

1. பொய்கையாழ்வார்

 ||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - பாஞ்சசன்னியம் (சங்கு)
  • அவதார ஸ்தலம் - காஞ்சீபுரம் திருவெஃகா யதோக்தகாரி கோயிலில் பொற்றாமரை பொய்கையில் தாமரை மலரில் - அயோநிஜர் (சுயம்பு)
  • காலம் - கி.பி. 7ம் நூற்றாண்டு 
  • வருடம் – சித்தார்த்தி (த்வாபர யுக கலியுக சந்தி)
  • மாதம் - ஐப்பசி
  • திரு நக்ஷத்திரம் - திருவோணம்
  • திதி - வளர்பிறை அஷ்டமி
  • கிழமை - செவ்வாய்
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • அருளிச் செய்தவை - 1. முதலாம் திருவந்தாதி - மூன்றாம் ஆயிரம் - 2082-2181 
  • பாசுரங்கள் - 100

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் – 6; பாசுரங்கள் - 17 

  • திருவரங்கம்         1 பாசுரம்
  • திருக்கோவிலூர்         2 பாசுரங்கள்
  • திருவெஃகா         1 பாசுரம்
  • திருவேங்கடம்         10 பாசுரங்கள்
  • திருப்பாற்கடல் 1 பாசுரம்
  • திரு பரமப்பதம் 2 பாசுரங்கள்
----------
பிற பெயர்கள்
சரோ யோகி, பொய்கை பிரான், பத்ம முனி, காவினிய போரேயர், கிரக முனி, மகாதேவயார், தமிழ் தலைவன் 
----------
வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார். பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் என்று அழைக்கப்படுகிறார். இவரே திருமாலின் பத்து அவதாரங்களையும் முதலில் சிறப்பித்துப் பாடியவர் ஆவார். இவர் கவிஞர் தலைவன் என்று வைணவர்களால் சிறப்பிக்கப்படுகிறார். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப் போற்றப்படுகிறது. ஒரு சமயம் பொய்கையாழ்வார் மழையின் காரணமாக திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு திருமால் மூவருக்கும் காட்சியளித்தார். முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.

பரமபதத்திற்கும் இம்மண்ணுலகத்திற்கும் ஒரே நாதனாக ஒப்பற்ற ஸ்வாமியாக விளங்குபவன் ஸ்ரீமன் நாராயணன் என்பதை தன் ஞானத்தால் உணர்ந்தார். உபய விபூதியையும் தியானத்து, பிறந்த ஞானத்தாலே, அவரவர் தாம் தாம் அறிந்தவாறு தந்தமக்கு விருப்பமான உருவம், பெயர் வைத்து பரம்பொருளான அவனைத் தொழுதாலும், கருணைக் கடலான அவன் அருள் புரிவது திண்ணம் என்று உலகோருக்கு அவனது எளிமையை எடுத்துக் கூறுகிறார். மூவரான மும்மூர்த்திகளில் முதல்வனானவன் கடல்நிற வண்ணன் எம்பெருமான். திருநாபியில் பிரமனுக்கு இடம் அளித்து வேதத்தை ஓதுவிக்குமாறு உபதேசித்த அந்த எம்பெருமானை மனதால் சிந்தனை செய்யாமல் கர்மானுஷ்டானங்கள் செய்வதால் ஒரு பயனும் இல்லை. மனத்தூய்மையுடன் வாயினால் பாடி, தூ மலர் கொண்டு தொழுதால் தீராத பாவ வினைகளும் அணுகாமல் பரம பக்தியாகிற செல்வம் வளர பெறுவோம் என்று நாம் உய்ய மிகவும் சுலபமான வழியைக் காட்டித் தருகிறார்.
----------
தனியன் 1
துலாயாம் ஸ்²ரவணே ஜாதம் 
காஞ்ச்யாம் காஞ்சந வாரிஜாத்| 
த்³வாபரே பாஞ்ச ஜந்யாம்ஸ²ம் 
ஸரோ யோகி³நம் ஆஸ்²ரயே|| 

தனியனின் விளக்கம்
த்வாபர யுகத்தில், ஐப்பசி மாஸ ஸ்ரவண நக்ஷத்ரத்தில், காஞ்சீபுரியில், பொற்றாமரையில், பாஞ்ச ஜந்ய அம்ஸமாகத் தோன்றிய பொய்கை ஆழ்வாரை வணங்குகிறேன்.

தனியன் 2
காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே 
ஜாதம் காஸார யோகிநம்|
கலயே ய: ஸ்ரிய:பதி 
ரவிம் தீபம் அகல்பயத்|

தனியனின் விளக்கம்
காஞ்சித் திருவெஃகாத் திருக்குளத்தில் தங்கத்  தாமரைப் பூவில் அவதரித்த, தம் திவ்ய ஞான ஒளியால் ஸூர்ய தேஜஸ்ஸில் ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட பொய்கை ஆழ்வாரைத்  துதிக்கிறேன்.

வாழி திருநாமம் 
செய்ய துலா ஓணத்தில் செகத்து உதித்தான் வாழியே|
திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே|
வையந் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே|
வனச மலர்க் கருவதனில் வந்து அமைந்தான் வாழியே|
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே|
வேங்கடவர் திருமலையை விரும்பும் அவன் வாழியே|
பொய்கை முனி வடிவழகும் பொற்பதமும் வாழியே|
பொன் முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே||

திருநாள் பாட்டு
1. ஐப்பசியில் ஓணம்* அவிட்டம் சதயம் இவை*
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்* 
எப்புவியும் பேசு புகழ்* பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்*
தேசுடனே தோன்று சிறப்பால்!

2. மற்றுள்ள ஆழ்வார்களுக்கு* முன்னே வந்துதித்து*
ற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த* 
பெற்றிமையோர் என்று
முதலாழ்வார்கள் என்னும் பெயரிவர்க்கு*
நின்து உலகத்தே நிகழ்ந்து*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment