About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 15 July 2023

3. பேயாழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - நாந்தகம் (வாள்)
  • அவதார ஸ்தலம் - மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் குளத்தில் செவ்வல்லி மலரில் - அயோநிஜர் (சுயம்பு)
  • காலம் - கி.பி. 7ம் நூற்றாண்டு
  • வருடம் - சித்தார்த்தி
  • மாதம் - ஐப்பசி
  • திரு நக்ஷத்திரம் - சதயம்
  • திதி - வளர்பிறை தசமி
  • கிழமை - வியாழன்
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • அருளிச் செய்தவை - 1. மூன்றாம் திருவந்தாதி - மூன்றாம் ஆயிரம் - 2282-2381 
  • பாசுரங்கள் - 100

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 15; பாசுரங்கள் - 44

  • திருவரங்கம்         2 பாசுரங்கள்
  • திருக்குடந்தை         2 பாசுரங்கள்
  • திருவிண்ணகரம் 2 பாசுரங்கள்
  • திருக்கச்சி         1 பாசுரம்
  • திருஅஷ்டப்புஜகரம் 1 பாசுரம்
  • திருவேளுக்கை 3 பாசுரங்கள்
  • திருப்பாடகம்         1 பாசுரம்
  • திருவெஃகா         4 பாசுரங்கள்
  • திருவல்லிக்கேணி 1 பாசுரம்
  • திருக்கடிகை         1 பாசுரம்
  • திருமாலிருஞ்சோலை 1 பாசுரம்
  • திருக்கோஷ்டியூர் 1 பாசுரம்
  • திருவேங்கடம்         19 பாசுரங்கள்
  • திருப்பாற்கடல் 4 பாசுரங்கள்
  • திரு பரமப்பதம் 1 பாசுரம்

----------
பிற பெயர்கள்
கைரவ முனி, மஹாதாஹ்வாயா, ஓடித் திரியும் யோகிகள்
----------
சிறுவயது முதல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அவர் மனம் எப்போதும் பரமனின் திருவடியையே நாடி நின்றது. திருமாலின் திருப்புகழை பாமாலையாக்கி நாள்தோறும் தொடுப்பார் இவர். அப்பொழுது இவர் கண்களில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டோடும். திருமாலின் திருப்பாதம் பணியுங்கள். உங்கள் வினைகள் ஓடிப் போகும். அத்துடன் மீண்டும் உங்களை தொடாது. முதலாழ்வார்கள் எனப்பட்ட பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரில் இவர் தான் அதிகமான ஸ்தலங்களைப் பாடி உள்ளார். திருக்கோவிலூரில் உள்ள ஒரு வைணவரின் வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் நாராயணன் நிற்பது முதலில் பேயாழ்வாருக்கு தான் தெரிந்தது. இப்படி பரமனைக் கண்ட பரவசத்தில் திருக்கண்டேன். பொன்மேனி கண்டேன் என்று துவங்கி நூறு பாடல்களை பாடினார். மேலும் திருவேங்கடம் சென்ற இவர் பெருமானை சிவனும், விஷ்ணுவும் கலந்த உருவாக கண்டார். பெருமாள் மேல் ஆராக்காதல் கொண்டு வேறு எதையும் நினைக்காமல் வாழ்ந்தார். பக்தி பரவசத்தில் அதுவே ஒரு வெறிபோல் தோன்றும்படி அவர் அழுவார். தொழுவார். ஆடிக் காண்பார். இறை பக்தியில் தன்னை முழுதும் மறந்து போனதால் இவர் பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தார். இதனாலேயே இவர் பேயாழ்வார் என் அழைக்கப் பட்டார்.  

உபயவிபூதி நாயகன் ஸ்ரீயுடன் கூடினவன் என்று பக்தியால் பகவானை அநுபவித்தபடி பேசுகிறார். அவன் திருவடிகளை சேவித்த அளவில் எல்லை இல்லாமல் வளரும் பிறவிகளைப் போக்கினேன். கொடியதான நரக வாஸத்திலிருந்து என்னை மீட்பதற்கு அவனே அருமருந்தாக திகழ்கிறான். என் மனதில் குடியேறிய அவனது திருப் பாதங்களே நான் பெற்ற பெரும் செல்வமும் அமிர்தமும் ஆகும். திருவனந்தாழ்வான் ஆகிற மெத்தென்ற பஞ்ச சயனத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்வாமி, அதை விட்டு என் மனமாகிற மலரணையில் பள்ளி கொண்டான் என்று அனுபவிக்கிறார். அவன் புகழை பேச வல்லவர்களும் பூரணமாக பேசி முடித்துவிட முடியுமா? முடியவே முடியாது. என் வாக்கு ஸதா ஸர்வ காலமும் அவனையே மங்களாசாசனம் செய்ய வேண்டும். தியானம் செய்வோரின் மனதில் அவன் அகலாது பொருந்தியுள்ளான் என்று உறுதி கொள் என்று தன் நெஞ்சை விளித்துக் கூறுகிறார். தவம் புரிவதற்காக மலைகளில் நிற்கவோ தடாகங்களில் மூழ்கவோ பஞ்சாக்னியில் வாடவோ தேவையில்லை. பயனை எதிர் பார்க்காமல் அன்புடன் அவன் திருவடிகளில் மலர்களை இட்டு அஞ்சலி செய்தாலே பாவங்கள் தான் இருக்க தகுந்த இடம் இதுவல்ல என்று ஓடிப் போய்விடும் என்கிறார். தேன் மிகுந்த தாமரை மலரில் நித்யவாஸம் புரியும் ஸ்ரீமகாலட்சுமியை அநுபவித்தபடியே பிரபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.
----------
தனியன் 1
துலா ஸ²த அபி⁴ஷக் ஜாதம் 
மயூர புரி கைர வாத்| 
மஹந்தம் மஹதா யாதம் 
வந்தே³ ஸ்ரீநந்த³ காம்ஸ²கம்||

தனியன் 2
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா 
விஷ்ணும் ரமயா மயிலாதிபம்|
கூபே ரக்தோத் பலே ஜாதம் 
மஹதாஹ்வயம் ஆச்ரயே||

தனியனின் விளக்கம்
திருமயிலைத் தலைவர், கிணற்றில் செவ்வல்லிப் பூவில் அவதரித்த ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட திவ்ய சக்ஷுஸ் பெற்ற பேயாழ்வார் திருவடிகளை வணங்குகிறேன்.

வாழி திருநாமம்
திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே|
சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்த வள்ளல் வாழியே|
மருக் கமழும் மயிலை நகர் வாழ வந்தோன் வாழியே|
மலர்க்கரிய நெய்தல் தனில் வந்து உதித்தான் வாழியே|
நெருக்கிடவே இடை கழியில் நின் செல்வன் வாழியே|
நேமி சங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே|
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே|
பேயாழ்வார் தாளிணை இப்பெரு நிலத்தில் வாழியே||

திருநாள் பாட்டு
1. ஐப்பசியில் ஓணம்* அவிட்டம் சதயம் இவை*
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்* 
எப்புவியும் பேசு புகழ்* பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்*
தேசுடனே தோன்று சிறப்பால்!

2. மற்றுள்ள ஆழ்வார்களுக்கு* முன்னே வந்துதித்து*
ற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த* 
பெற்றிமையோர் என்று
முதலாழ்வார்கள் என்னும் பெயரிவர்க்கு*
நின்து உலகத்தே நிகழ்ந்து*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment