||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான எம்பெருமான் ஸாதுக்களைக் காக்கவும் துஷ்ட செயல்களை கண்டிக்கவும் ஸ்ரீக்ருஷ்ணராக அவதரித்து அர்ஜுனனை காரணமாக்கி ஸ்ரீமத் பகவத் கீதையை உபதேசித்தான். ஜீவாத்மாக்கள் எம்பெருமானை தன்னை ஒத்த மனிதனாகவே எண்ணி உபதேசங்களுக்கு இசையாமல் நிற்கவே, கருணா மூர்த்தியான பகவான் அநந்த, கருட, விஷ்வக்ஸேநர், முதலிய நித்ய ஸூரிகளை கொண்டு ஜீவ கோடிகளைக் கரையேற்ற திருவுள்ளம் கொண்டான். லீலா விபூதியில் நித்யசூரிகளை அவதரிப்பித்து ஜீவாத்மாக்களை பக்தி மார்க்கத்தில் மூட்டி உய்வடையும்படி செய்யுமாறு பகவான் நியமித்தான். அவன் நியமனத்தை தலைமேற் கொண்டு பூவுலகில் அவதரித்தவர்கள் ஆழ்வார்கள்.
திருமாலாகிய பேரெழில் பொய்கையில் ஆழ மூழ்கி கவி பாடியவர்கள் ஆழ்வார்கள். உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்னும்படி பகவத் அனுபவத்தில் திளைத்தவர்கள், ஆதலால் ஆழ்வார்கள் எனக் கொண்டாடப் படுகின்றனர். அவர்கள் அருளி செய்த பாசுரங்களே வேதங்களுக்கு இணையாக திவ்ய பிரபந்தம் என்று போற்ற படுகின்றன.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். வைணவத்தில் பெருமாளுக்கு இணையாக பார்க்கப் படுபவர்கள் ஆழ்வார்கள். பெருமாளே கதியென்று அவரை சரணடைந்து, தீராத பக்தி கொண்டு, தமிழ் செய்யுளால் பெருமாளை பாடியவர்கள் இந்த ஆழ்வார்கள். ஆழ்வார்களின் பேச்சுக்கு பெருமாளே கட்டுப்பட்டதாகவும், ஆழ்வார்கள் எங்கு சென்றாலும் பெருமாளும் அந்த இடத்திற்கு தேடி செல்வார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு ஆழ்வார்களை பெருமாள் ஆட்கொண்ட கதைகளே உதாரணமாக உள்ளன. தென் மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு. இவர்கள் 5 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.
மரபுப்படி இறைவனின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொற்பொருள் கூறுவர். ஆயினும் இந்தச் சொல் ஆள்வார் என்றும் வழங்கினதாகவும் பிறகு ஆழ்வார் என்று ஆனதாகவும் பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். நம்மாழ்வாரின் திருவாய்மொழி, தமிழ் வேதம்/ திராவிட வேதம் என்றும் போற்றப்படுகின்றது.
இந்த 108 திவ்ய தேசத் திருத்தலங்களுக்குச் சென்று நம் பெருமானைச் சேவிக்கு முன் அவனைப் போற்றி, சரணடைந்து, அவனே கதியென்று வாழ்ந்த பன்னிரண்டு ஆழ்வார்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இந்த ஆழ்வார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் போற்றிப் பணிந்ததெல்லாம் ஒரே பரமனைத்தான். இந்த ஆழ்வார்கள் திருமாலின் அம்சமாகவே கருதப் படுகின்றனர். பெருமானைப் போற்றுவதும், மங்களாசாஸனம் செய்வதுமே அவர்களின் வாழ்க்கை முறையாக அமைந்தது.
- 1) பொய்கை ஆழ்வார்
- 2) பூதத்தாழ்வார்
- 3) பேயாழ்வார்
- 4) திருமழிசை ஆழ்வார்
- 5) நம்மாழ்வார்
- 6) திருமங்கையாழ்வார்
- 7) தொண்டரடிப் பொடி ஆழ்வார்
- 8) பெரியாழ்வார்
- 9) ஸ்ரீ ஆண்டாள்
- 10) குலசேகர ஆழ்வார்
- 11) மதுரகவி ஆழ்வார்
- 12) திருப்பாணாழ்வார்
இவர்களுள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் மூவரையும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பது வழக்கம்.
பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
அய்யன் அருள்மாறன் சேரலர் கோன் துய்ய பட்ட
நாதனன் பர்த்தாள் தூளி நற்பாணன் நல் கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாம் இங்கு
இதில் ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. ஆழ்வார்கள் பத்துபேர் என்று சொல்வதே பழைய மரபு. ஆண்டாளும் மதுரகவி ஆழ்வாரும் அதற்குப்பின் சேர்க்கப்பட்டனர்.
ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் இறைவனைப் பாடாமல் தன்னுடைய குருவான நம்மாழ்வாரைப் பற்றிய பாசுரங்கள் மட்டுமே பாடினார். ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண்.
- பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் அயோநிஜர்கள்‘ என்று விவரிக்கப்படுகிறார்கள், அதாவது, இவர்கள் கண்டெடுக்கப்பட்டவர்கள் என்பதும், பிற்பாடு ரிஷிகளாக இருந்தார்கள் என்பதும் தெரிகிறது.
- திருமழிசையாழ்வார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்பது அவரது பாட்டிலிருந்தே தெரிகிறது. “குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்” (நா. தி.பி – 841) என்று அவரே கூறுகிறார்.
- பெரியாழ்வார் அந்தணர். அவரது துளசித்தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை கோதை எனும் ஆண்டாள்.
- திருமங்கையாழ்வார் கள்ளர் குலத்தைச் சார்ந்தவர்.
- குலசேகர ஆழ்வார் சேர நாட்டு மன்னர் குலத்தைச் சேர்ந்தவர்.
- திருப்பாணாழ்வார் ‘அந்திம வம்சம் பஞ்சம குலம்‘ எனப்பட்ட பாண வம்சத்தில் பிறந்தவர்.
- தொண்டரடிப்பொடியாழ்வார் ஒரு பிராமணர்.
- நம்மாழ்வார் வெள்ளாள சிற்றரசர் வம்சத்தைச் சேர்ந்தவர்.
- அவரது சிஷ்யர் மதுரகவியாழ்வார் பிராமணர்.
- சேர நாடு - குலசேகர ஆழ்வார்
- சோழ நாடு - திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார்
- பாண்டிய நாடு - நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், மதுரகவி ஆழ்வார்
- தொண்டை நாடு - பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார்
பன்னிரு ஆழ்வார்கள் வாழித் திருநாமங்கள்
போத மிகும் பொய்கையார் பூதத்தார் வாழியே!
புகழ் பேயார் மழிசையர் கோன் புத்தூரன் வாழியே!
நாதமுனி தொழுங் குருகை நாவீறன் வாழியே!
நற்பாணன் கொல்லி நகர் நாதனார் வாழியே!
ஆதரிக்குந் தொண்டரடிப்பொடி தாள்கள் வாழியே!
அருட்கலியன் மதுரகவி ஆண்டாளும் வாழியே!
ஏதமற்ற நாலாயிரப் பனுவல் வாழியே!
இவர் உதித்த நாள் மாதம் எழிற் பதியும் வாழியே!!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment