About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 15 July 2023

4. திருமழிசை ஆழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

----------

  • அம்சம் - ஆழி (சக்கரத்தாழ்வார்)
  • அவதார ஸ்தலம் - திருமழிசை
  • காலம் - கி.பி. 7ம் நூற்றாண்டு 
  • வருடம் - சித்தார்த்தி - த்வாபர, கலி யுக சந்தி
  • மாதம் - தை
  • திரு நக்ஷத்திரம் - மகம்
  • திதி - தேய்பிறை பிரதமை
  • கிழமை - ஞாயிறு
  • தந்தை - பார்க்கவ முனிவர்
  • தாய் - கனகாங்கி 
  • ஆசார்யன் - ஸேனை முதலியார், பேயாழ்வார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருக்குடந்தை
  • அருளிச் செய்தவை -                                                                                                      1. திருச்சந்த விருத்தம் - முதலாம் ஆயிரம் - 752-871 (120 பாசுரங்கள்)            2. நான்முகன் திருவந்தாதி - மூன்றாம் ஆயிரம் - 2382-2477 (96 பாசுரங்கள்)
  • பாசுரங்கள் - 216

----------
மங்களாஸாஸநம்: செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 17; பாசுரங்கள் - 67

  • திருவரங்கம் 14 பாசுரங்கள்
  • திரு அன்பில் 1 பாசுரம்
  • திருப்பேர் நகர் 1 பாசுரம்
  • திருக்கவித்தலம் 1 பாசுரம்
  • திருக்குடந்தை 7 பாசுரங்கள்
  • திருப்பாடகம் 2 பாசுரங்கள்
  • திருஊரகம் 2 பாசுரங்கள்
  • திருவெஃகா 3 பாசுரங்கள்
  • திருஎவ்வுள் 1 பாசுரம்
  • திருவல்லிக்கேணி 1 பாசுரம்
  • திருக்குறுங்குடி 1 பாசுரம்
  • திருக்கூடல் 1 பாசுரம்
  • திருக்கோஷ்டியூர் 1 பாசுரம்
  • திரு துவாரகா         1 பாசுரம்
  • திருவேங்கடம்         15 பாசுரங்கள்
  • திருப்பாற் கடல் 13 பாசுரங்கள்
  • திரு பரமப்பதம் 2 பாசுரங்கள்
----------
பிற பெயர்கள்
பக்தி சாரர், பார்கவர், மகிசாரபுரீஸ்வரர், மழிசை பிரான்
----------

இவர் எம்பெருமானுடைய அந்தர்யாமித்வத்தில் மிகவும் ஊன்றியவர். சிறந்த யோகிகள் மற்றும் பக்தர்களுக்கு, எம்பெருமான் தன் திருமேனியுடன் அவர்களுடைய இதயத்தில் காட்சி கொடுப்பான். அப்படி இவருக்கு எம்பெருமான் காட்சி தர, அதிலேயே மிகவும் ஈடுபட்டிருந்தவர். அதற்கு மேலும் முக்கியமாக ஸ்ரீவைஷ்ணவர்கள் என்பவர்கள், ஸ்ரீமந் நாராயணனுக்கு அடிமைப்பட்டு இருக்க வேண்டும். வேறு எந்த எந்த தேவதையையும் மறந்தும் கூட நினைக்க கூடாது என்ற விஷயத்தை மிக ஆழமாக எடுத்துக் காட்டியவர். நான்முகன் திருவந்தாதியில் ஸ்ரீமந் நாராயணனின் பரத்வத்தை நிரூபித்து இதர மதங்களை கண்டனம் செய்கிறார். ஈசர்க்கும் நான்முகற்கும் தெய்வமான நீரே அனைத்து காரணமும், கற்றவையும், கற்பவையும், அனைத்தும் நாராயணனே என்பதை நன்கறிந்தேன் என்று தலைக் கட்டுகிறார்.

திருமழிசை ஆழ்வார் பல சமயங்களிலும் உழன்று, திரிந்து, திருத்தி அமைக்கப்பட்டு, வைணவத்தை அடைந்ததால், சாஸ்திரங்களை கடைந்து திரட்டி ஸாரமாக திருச்சந்த விருத்தத்தை அருளிச் செய்கிறார். ஜகத்திற்கு மூல காரணம், அவனே அனைத்திற்கும் அந்தர்யாமி, அவனே அனைத்திற்கும் ஆதாரம் என அனைத்தும் அந்த முழு முதற் கடவுளான பகவான் ஸ்ரீமந் நாராயணனே என்று காட்டிக் தருகிறார். அவனே ஸர்வ காரணமானதால் சரணடைய தகுந்தவன். அவனுடைய அவதார ரஹஸ்யத்தை அவன் காட்டி தந்தால் அன்றி நம்முடைய சாமர்த்தியத்தால் அறிய முடியாது. அவனது அனைத்து கல்யாண குண விசேஷங்களின் எல்லையை பிராட்டியைத் தவிர பிரம்மாதி தேவர்களாலும், நித்ய சூரிகளாலும் அறிய முடியாது. பகவான் ஸங்கல்பத்தால் தான் ஏற்கும் பிறவிகளில் ஏற்றத் தாழ்வை பார்க்காதது போலவே தன்னை சரண் அடைந்தவர்களின் பிறப்பு, ஞானம், குணவிசேஷம் எதையும் பொருட்படுத்தாமல் அடைக்கலம் அளிப்பவன். திரும்பி வருதல் இல்லாத பரமபதத்தை அடைய அவனே உபாயம் (வழி), அடைவிப்பனும் அவனே, அடையும் பயனும் அவனே, அவனைச் சரணடையுங்கள் என்று உபதேசிக்கிறார்.
----------
தனியன் 1
மகா²யாம் மகரே மாஸே 
சக்ராம்ஸ²ம் பா⁴ர்க³வோத்³ ப⁴வம்| 
மஹீ ஸார புராதீ⁴ஸ²ம் 
ப⁴க்தி ஸார மஹம் ப⁴ஜே||

தனியன் 2
ஸ²க்தி பஞ்சமய விக்ரஹ ஆத்மநே 
ஸூக்தி ஹாரா ஜித்தா சித்த ஹாரிணே|
முக்தி தாயக முராரி பாதயோர் 
பக்தி ஸார முநயே நமோ நம:||

தனியனின் விளக்கம்
எம்பெருமான் முராரியின் கமலப் பாதங்களில் வைத்த பக்தியே வடிவெடுத்தவரும், பஞ்சோபநிஷத்மய திருமேனியை உடைய (நம் சரீரம் நிலம் நீர் காற்று வெளி தீ எனும் பஞ்ச பூதங்களால் ஆனது. எம்பெருமான் திருமேனியோ விஸ்வம், நிவ்ருத்தம், சர்வம், பரமேஷ்டி, புமான் எனும் பஞ்ச உபநிஷத்துகளால் ஆனது) எம்பெருமானைத் தன் நெஞ்சிலே தரித்தவரும், நமக்கு மதி தர வல்லவருமான திருமழிசைப் பிரானுக்கு என் வணக்கங்கள். ஸூக்திஹாரன் என்னும் அரசனிடத்தில் ஜயித்த ஹாரத்தை அணிந்து கொண்டிருப்பவர் என்றும் சொல்லப்படும்.

வாழி திருநாமம்
அன்புடன் அந்தாதி தொண்ணுற்றாறு உரைத்தான் வாழியே|
அழகாரும் திருமழிசை அமர்ந்த பிரான் வாழியே|
இன்ப மிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே|
எழிற் சந்த விருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே|
முன்புகத்தில் வந்து உதித்த முனிவர் கோன் வாழியே|
முழுப் பொன்னிப் பெருக்கெதிர் செல்முதிர் கவியோன் வாழியே|
நன் புவியில் நாலாயிரத்து எழுநூறிருந்தான் வாழியே|
நங்கள் பத்திசாரர் இரு நற்பதங்கள் வாழியே||

திருநாள் பாட்டு
தையில் மகம் இன்று* தாரணியீர்! ஏற்றம்* 
இந்தத் தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன்* 
துய்ய மதி பெற்ற* மழிசை பிரான் பிறந்த நாள் என்று*
ற்றவர்கள் கொண்டாடும் நாள்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment