About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 6 December 2023

ஸ்ரீமத் பாகவத புராணம் - 26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

காலம்

ஸ்கந்தம் 01

தன் இரு சகோதரர்களின் புதல்வர்களுக்குள் யுத்தம் மூண்ட படியால், விதுரர், யுத்தத்தில் பங்கேற்க மனமின்றி தீர்த்த யாத்திரை சென்றார்.

யுத்தம் முடிந்த நிலையில் நாடு திரும்பிக் கொண்டிருந்த விதுரர், வழியில் கங்கைக் கரையில், மைத்ரேய மகரிஷியைச் சந்தித்தார். கண்ணனிடத்துப் பேரன்பு கொண்டிருந்த அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால், சந்தித்ததில்லை. மைத்ரேயரும் விதுரரைப் பற்றி அறிந்திருந்தாரே தவிர கண்டதில்லை.


ஆனால், உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் அன்பு ஒன்றே அன்றோ! எனவே, தூரத்தே கண்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டனர். அன்புணர்வு மிகுதியான உள்ளங்களுக்கு நாவின் துணை தேவையா என்ன? 

ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டனர். பின்னர், மெதுவாக மைத்ரேயர் சுதாரித்துக் கொண்டு, நிறைய விஷயங்களைச் சொன்னார்.

விதுரரும் அவரிடம் நிறைய சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்டார். நேரம் போவதே தெரியாமல் இருவரும் அன்பினால் கட்டுண்டு அளவளாவினர்.

கண்ணனின் அடியார்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அவனைப் பற்றிப் பேச நேரமும் போதவில்லை. 

பின்னர், விதுரர் மெதுவாக விடை பெற்றுக் கொண்டு அஸ்தினாபுரம் வந்தடைந்தார்.

தர்மபுத்ரர், தம்பிகள், யுயுத்ஸு, த்ருதராஷ்ட்ரன், காந்தாரி, குந்தி, சஞ்சயன், த்ரௌபதி, சுபத்ரை, உத்தரை, க்ருபி, மற்றும் மற்ற உறவுக்காரர்கள் அனைவரும் வந்து உயிரைக் கை வரவேற்பதுபோல் விதுரரை வரவேற்றனர்.

மிக்க மகிழ்ச்சியுடன் தர்ம புத்ரர் விதுரருக்கு பூஜை செய்தார்.

களைப்பாறிய பின்னர், அனைவரும் சூழ, விதுரரிடம் தர்ம புத்ரர் கேட்டார்.

"உங்கள் நிழலில் வளர்ந்த எங்களை நினைவு வைத்திருக்கிறீர்களா? விஷம், நெருப்பு முதலியவற்றிலிருந்து நீங்களே எம்மைக் காத்தீர். யாத்திரையாக எங்கெல்லாம் சென்றீர்கள்? என்னென்ன தீர்த்தம், க்ஷேத்ரங்களை தரிசனம் செய்தீர்கள்?
வழியில் துவாரகை பக்கம் சென்றீர்களா? கண்ணன் எப்படி இருக்கிறான்? வேறு யாராவது பந்துக்களைப் பார்த்தீர்களா?"

விதுரர், ஒரே ஒரு செய்தியைத் தவிர மற்ற எல்லா விஷயங்களையும் விவரமாகச் சொன்னார்.

துக்ககரமான அந்த செய்தியைச் சொல்லி, அனைவர் மனத்தையும் புண்படுத்த அவர் விரும்பவில்லை.

சில காலம் அங்கு தங்கியிருந்தார் விதுரர். மாண்டவ்ய மஹரிஷியின் சாபத்தால் நூறு வருஷங்களுக்கு பூமியில் விதுரராகப் பிறந்திருந்தார். அப்போது யமனின் வேலையை அர்யமா என்பவர் செய்து வந்தார். காலத்தின் வேகத்தை அறிந்த விதுரர், ஒரு நாள் த்ருதராஷ்ட்ரனைத் தனிமையில் சந்தித்தார். "அண்ணா, நம் எல்லோருக்குமே மரண காலம் வந்து விட்டது. சீக்கிரம் கிளம்புங்கள்.  உங்கள் தந்தை, சகோதரர், நண்பன், புத்திரர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். உங்களுக்கும் முதுமை வந்து விட்டது. மனிதனுக்கு உயிரோடிருப்பதில் ஆசை அதிகம். பீமனை விஷம் வைத்துக் கொல்லத் துணிந்தீர். இப்போது வேளை தவறாமல் வந்து நாய்க்குக் கொடுப்பது போல் உணவு வைத்து விட்டுப் போகிறான். கொழுக்கட்டையை அவன் கொடுக்கும் போது அதே கொழுக்கட்டையில் நீங்கள் அவனுக்கு விஷம் கொடுத்தது நினைவு வரவில்லையா? குலவதுவான த்ரௌபதியை சபையில் அவமானப்படுத்திய போது வாளாவிருந்து விட்டு, இன்று அவள் தர்மபுத்ரரோடு வந்து தினமும் வணங்குவதையும் ஏற்றுக் கொள்கிறீரே. அந்த யுதிஷ்டிரனை நீங்கள் தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு நாடு கடத்தினீர்கள்.

இப்படியாவது நீங்கள் உயிர் தரிக்கத் தான் வேண்டுமா? நீங்கள் விரும்பா விட்டாலும் மரணம் வந்தே தீரும். அதற்கு முன்னால் விரக்தியடைந்து, தானாகவே அனைத்தையும் துறந்து கிளம்புபவனை தீரன் என்று உலகம் புகழ்கிறது. ஸ்ரீ வாசுதேவனை மனத்தில் தியானித்து, இவ்வுலக வாழ்வில் வெறுப்படைந்து, விரக்தியுடன் வடக்கு திசை நோக்கிக் கிளம்புங்கள். இதன் பின் வரப் போகும் காலம் கலியுகமாகும்." என்றார்.

இவ்வாறு கேட்டதும், குருடனான த்ருதராஷ்ட்ரன், மன உறுதியுடன் பந்தங்களை உதறி, விதுரர் சொன்னபடி கிளம்பினார். பதிவ்ரதையான காந்தாரியும் அவரை பின் தொடர்ந்தாள்.

மாலை அனுஷ்டாங்களை முடித்து விட்டு, பெரியோர்களை வணங்குவதற்காக த்ரௌபதியோடு வந்த யுதிஷ்டிரன் பெரிய தந்தை, பெரியம்மா, சிற்றப்பாவான விதுரர் ஒருவரும் அரண்மனையில் இல்லாதது கண்டு திகைத்தார். 

பின்னர் எங்கு தேடியும் கிடைக்காததால் அழுது அரற்றத் துவங்கினார். சஞ்சயனைக் கேட்டார்.

"பெரியப்பா எங்கே? தந்தையில்லாத காலத்தில் எங்களை அரவணைத்தவர் அவர். பெரியம்மா எங்கே? கண்கள் தெரியாதே. என்னிடம் ஏதாவது குறையா? சொல்லாமல் எங்கு போனார்கள்? கங்கையில் விழுந்து விட்டார்களா?" என்றெல்லாம் கேட்க, சஞ்சயனுக்கும் ஒன்றும் தெரியவில்லை.

ஒருவர் கலக்கமுறும் நேரத்திலெல்லாம் அரவணைப்பவர் குரு ஒருவரே. நாரதர் அங்கு வந்து சேர்ந்தார்.

மஹரிஷியைக் கண்டதும் யுதிஷ்டிரர் அவரை வரவேற்று பாத பூஜைகள் செய்து ஆசனம் அளித்தார்.

பின்னர், அவரிடம் தன் தவிப்பைச் சொன்னார் யுதிஷ்டிரர்.

கரை காணாத படகோட்டி போல் தவிக்கும் தர்ம புத்ரரைப் பார்த்து நாரதர் சொல்லலானார்.

"தர்ம புத்ரரே, நீ வருத்தமடையாதே. உலகமே ஈஸ்வரனுக்கு கட்டுப்பட்டது. எந்த இறைவன் நம்மை ஒன்று சேர்த்து வைக்கிறானோ, அவனே பிரித்தும் வைக்கிறான். இந்த தேஹம் அழிவுடையது. ஆனால், ஆத்மா அழிவில்லாதது என்பதைத் தெரிந்து கொண்டால் நீ வருந்த மாட்டாய். அதனால், உன் பெரியோர்களைக் குறித்து கலக்கம் அடையாதே. காலத்திலிருந்து யார் யாரைக் காப்பாற்றமுடியும்?" இப்படியாக பல உபதேசங்கள் செய்தார். பின்னர், "இவ்வுலகில் அசுரர்களை அழிப்பதற்காக ஸ்ரீ வாசுதேவனே கண்ணனாகப் பிறந்தார். அவரது வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. அவர் இவ்வுலகில் வசிக்கும் காலம் வரை நீயும் வசிப்பாயாக. த்ருதராஷ்ட்ரர் விதுரனோடும், காந்தாரியோடும், இமயத்திற்குத் தெற்கே உள்ள மஹரிஷிகளின் ஆசிரமத்தில் இருக்கிறார். அவர் பரம வைராக்யத்தை அடைந்து இன்றிலிருந்து ஐந்தாம் நாள் யோகத்தினாலேயே சரீரத்தை விடப் போகிறார். அவருக்கு நீ இடையூறாகி விடாதே. காந்தாரியும் அவரது யோகாக்னியில் ப்ரவேசிப்பாள். அதன் பின் விதுரர் தீர்த்த யாத்திரை செல்வார்." என்று சொல்லி, இன்னும் பலவாறு ஆறுதல்கள் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி தும்புரு மஹரிஷியோடு தேவலோகம் சென்றார்.

நாரதரின் தரிசனத்தால் தர்ம புத்ரரின் மனக்கலக்கம் நீங்கியது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment