About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 11 August 2023

திவ்ய ப்ரபந்தம் - 4 - திருப்பல்லாண்டு 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 4 - நமோ நாராயணாய
திருப்பல்லாண்டு - நான்காம் பாசுரம் 

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து* 
எங்கள் குழாம் புகுந்து*
கூடு மனமுடையீர்கள் வரம்பொழி* 
வந்தொல்லைக் கூடுமினோ*
நாடும் நகரமும் நன்கு அறிய* 
நமோ நாராயணாயவென்று*
பாடு மனமுடைப் பத்தருள்ளீர்* 
வந்து பல்லாண்டு கூறுமினே|


இதில் ஆத்மாநுபவத்தை ஆசைப்படும் கைவல்யார்த்தியை அழைக்கிறார். பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர்களை அழைத்த பிறகு, த்ருப்தி ஏற்படாமல், உலக இன்பங்களை ஆசைப்படும் ஐச்வர்யார்த்தியையும், தன்னைத் தானே அனுபவிக்கும் கைவல்யார்த்தியையும் பார்த்து, இவர்கள் இருவரில் உலக இன்பத்தை ஆசைப் படுபவன் என்றாவது பகவத் விஷயத்தில் ஆசை கொள்வான், ஆனால் கைவல்யார்த்தி, கைவல்ய மோக்ஷத்தைப் பெற்று விட்டான் என்றால் அவனுக்கு மீட்சியே இல்லை என்பதை உணர்ந்து, கைவல்யார்த்தியை இங்கே அழைக்கிறார்.

  • ஏடு நிலத்தில் - பொல்லாத ஸ்தானமாகிய மயானத்தில் இந்த உடலை 
  • இடுவதன் முன்னம் - சேர்ப்பதற்கு முன் 
  • வந்து - கைவல்யத்தில் ஆசையை விட்டு வந்து 
  • எங்கள் குழாம் - எங்கள் கோஷ்டியில் 
  • புகுந்து கூடு - சேர்ந்து கூடுவோம் 
  • மனம் - என்ற மனம் 
  • உடையீர்கள்! - உடையவர்களாகில் 
  • வரம்பு ஒழி - ஆத்மாநுபவம் மாத்திரம் செய்வோமென்று நீங்கள் வைத்துக் கொண்டிருக்கிற வரம்பை ஒழித்துக் கொண்டு இனி பூர்ணாநுபவம் பண்ணுவோமென்று விட்டு 
  • வந்து ஒல்லைக் - வந்து விரைவாக 
  • கூடுமினோ - எங்கள் கோஷ்டியில் கூடுங்கள் அப்படியே சேர்ந்த பின்பு
  • நாடும் - நாட்டிலுள்ளவர்களும் 
  • நகரமும் - நகரத்திலுள்ளவர்களும் 
  • நன்கு அறிய - உங்களுடைய நன்மையை நன்கு அறிந்து கொள்ளும்படி 
  • நமோ நாராயணாய என்று - திருமந்திரத்தை அனுசந்தித்து 
  • பாடும் மனம் உடைப் பத்தர் - பாடக் கூடிய மனம் உடைய பக்தர்களுக்குள் 
  • உள்ளீர்! வந்து - சேர்ந்தவர்களாயிருந்து 
  • பல்லாண்டு கூறுமினே - எம்பெருமானுக்கு மங்களா சாஸநம் பண்ணுங்கள்

ஆழ்வார் இப்பாசுரத்தில் ஒரு மகத்தான உண்மையை ஆஸ்தீகர்களுக்கு கூற விரும்புகிறார் . அது என்னவென்றால் ஆத்மாநுபவத்தில் ஆசையை விட்டு விட்டு பகவத் அநுபவத்தில் ஆசையை வையுங்கள். சரீரத்தை முழுவதுமாக ஒழித்துவிடுவதற்கு முன் எங்கள் கூட்டத்தில் வந்து புகுந்து, எங்களுடன் கூடுவோம் என்ற ஆசை மட்டும் இருப்பீர்களாகில், ஆத்மாவை மட்டும் அனுபவிப்பது என்கிற வரம்பை விட்டொழித்து, எங்களுடன் கூடுங்கள். க்ராமத்தவர்களான ஸாமாந்யர்களும், நகரத்தவர்களான அறிவாளிகளும் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி, திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை அனுஸந்தித்துப் பாடக் கூடிய பக்தியை உடையர்களானீர்கள் என்றால், நீங்களும் வந்து எங்களுடன் சேர்ந்து பல்லாண்டு பாடுங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment