||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்|
கடவுள் தான் அழகு, கடவுள் தான் ஆனந்தம், கடவுள் தான் அமைதி. ஆகவே பகவான் பிறக்கப் போகும் இடமும் சூழ்நிலையும் எத்தனை எழிலாகவும் இன்பமாகவும் இருக்க வேண்டும்! நள்ளிரவு. எங்கும் அமைதி நிலவியது. வானம் துல்லியமாக இருக்க, நட்சத்திரங்கள் பளிச்சென்று பிரகாசித்தன. ரோகிணி நட்சத்திரம் உச்சத்தில் இருந்தது. உலகத்திற்கு மங்கலம் ஏற்படப் போகிறது என்பதை அது காட்டியது. கிருஷ்ணன் உலகத்திற்கு வருவதைக் கண்டு ஆனந்திருப்பது போல் ஏரிகளில் உள்ள தாமரைப் பூக்கள் மலர்ந்து காணப்பட்டன. உலக நாயகனைத் தன் கருவில் தாங்கிக் கொண்டு இருக்கும் தேவகிக்கு நோகக் கூடாது என்பது போல மந்த மாருதம் மெல்லென வீசியது. காடுகளில் அழகிய பறவைகள் புதிய குரலெடுத்துப் பாடின. மயில்கள் நடமாடின. எல்லோர் மனத்திலும் அமைதி நிலவியது. தேவர்கள் பேரிசைகளை முழங்கினர். இறைவன் உலகில் அவதரிக்கப் போவதைக் குறித்து அவர்களுக்கு ஏற்பட்ட இன்பத்தில் பூமியின் மீது பூமாரி பொழிந்தனர்.
அதே நள்ளிரவில் எங்கும் ஒரே இருளாக இருந்த அந்நேரத்தில் மகாவிஷ்ணு தேவகிக்குக் கிருஷ்ணன் என்ற குழந்தையாகப் பிறந்தார். வசுதேவர் அந்த அழகிய குழந்தையை உற்று நோக்கினார். திடீரென்று ஓர் அதிசயம் நடந்தது. அதைக் கண்டு வசுதேவர் ஆச்சரியப்பட்டார். பிறந்த குழந்தை சாதரணக் குழந்தையாகத் தோன்றவில்லை. மகாவிஷ்ணுவாகவே அது காட்சியளித்தது. அந்தக் குழந்தைக்குத் தாமரைக் கண்கள், நான்கு கைகள். ஒரு கையில் சங்கு இன்னொரு கையில் சக்கரம், ஒரு கையில் கதை, இன்னொரு கையில் தாமரை மலர் இருந்தன. மார்பில் ஸ்ரீவத்ச அடையாளம். காதுகளில் வைடூரிய மணிகள் இழைத்த குண்டலங்கள், கழுத்தில் துளசிமாலை, இடுப்பில் பட்டாடை, இடுப்பை மணிச்சரங்கள் தொங்கும் அழகிய ஒட்டியாணம் அலங்கரித்தது. கங்கணங்கள், கடகங்கள், இன்னும் பல ஆபரணங்கள் உடலை அலங்கரித்தன.
இந்த அழகிய உருவைக் கண்டதும் வசுதேவரின் கண்கள் ஆச்சரியத்தில் பிரகாசித்தன. பிறந்திருக்கும் குழந்தை நாராயணன்தான் என்று அவர் தெரிந்து கொண்டார். 'இத்தனை அழகான குழந்தை பிறந்திருக்கிறது! ஆனால் என்ன பரிதாபம்! கம்சன் சீக்கிரமே இதைக் கொன்றுவிடுவானே! என்று அவர் கவலைப்பட்டார். ஆனால் அடுத்த கணமே 'இது சாதாரண குழந்தையல்ல, இறைவன் மனித உருவில் வந்துள்ளார்' என்று அவர் உணர்ந்ததும் கம்சனைப் பற்றி அவருக்கு இருந்த பயம் விலகியது. கைகூப்பிச் சிரம் தாழ்த்தி அவர் அந்தக் குழந்தையைத் துதிக்கத் தொடங்கினார்.
தங்களுடைய எல்லையற்ற கருணை காரணமாக உலகைக் காப்பாற்ற, என் குலத்தில் தாங்கள் அவதரித்துள்ளீர்கள். என்னுடைய உள்ளக் கிளர்ச்சியை நான் எப்படி விவரிப்பேன்! மனிதர்களுக்குள்ளே நான் மிகவும் பாக்கியசாலி. என் மனைவியோ இறைவனுக்குத் தாய் என்ற அரிய பேற்றைப் பெற்றவள். எங்கள் மீது தங்களுக்கு ஏற்பட்ட கருணைதான் என்னே! இறைவனே! கொடியவனான கம்சன் தாங்கள் எங்கள் குடும்பத்தில் பிறப்பதால் தனக்கு வரப்போகும் அழிவை நினைத்துப் பயந்து எங்களுக்குப் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் கொன்றுவிட்டான். இப்பொழுது தாங்கள் பிறந்ததைக் கேள்விபட்டதும் அவன் ஆயுதத்துடன் தங்களைக் கொல்ல வருவானே! என்று கவலைப்பட்டார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment