||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
015 ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே|
ஆழ்வார்களிலே ஆறாவதாக திருவஞ்சிகளம் என்ற ஸ்தலத்தில் அவதரித்தவர் குலசேகராழ்வார். இவர் கலியுகம் பிறந்த 28வது வருடமான பராபவ வருடம் மாசி மாதம் சுக்ல பட்ச துவாதசி திதியில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.
இவர் மூன்று தேசத்துக்கு ராஜாவாக இருந்தவர். சாம்ராஜ்யத்துக்கே சக்கரவர்த்தியாக இருந்தாலும் கூட, அவருக்கு லௌகிக விஷயங்களில் அவ்வளவாக நாட்டம் இருக்கவில்லை. பரத்வம் என்பது எது, அதை அடைவது எப்படி என்பதிலேயே அவருடைய கவனம் எல்லாம் இருந்து வந்தது. செங்கமலக் கண்ணனான திருமாலின் திருவடிகளே முடிவான பரத்வம் என்ற பேருண்மையும் அவருக்குப் புரிந்தது. அதன் பிறகு அந்த பரத்வத்தை அடைய வேண்டி, பஞ்ச சம்ஸ்காரங்களையும் கடைப் பிடித்து இறைத் தொண்டு ஆற்றி வந்தார். திருமாலின் பத்து அவதாரங்களில் இவருக்கு ஸ்ரீ ராமபிரானிடம் அளவற்ற ஈடுபாடு. ராமபிரானிடம் இவருக்கு இருந்த அன்பை விளக்க ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.
ஒரு முறை ஒரு பாகவதோத்தமர் ராமாயண உபந்யாசம் செய்து கொண்டிருந்த போது, ராமனை எதிர்த்து கரன் என்பவன் பெரும் சேனையுடன் வந்த கட்டத்தை மிக ரசமாக, ஏதோ நேரில் நிகழ்ந்தது போல சொல்லிக் கொண்டிருந்தார். குலசேகரரோ, 'காட்டில் ராமன் எவ்வித படைபலமும் இல்லாமல், எதிர்த்து வரும் கரனை எவ்வாறு எதிர்கொள்வார்’ என்று நினைத்தவராகத் தன் படைகளைத் தயார் படுத்தி ராமனின் உதவிக்கு அனுப்புமாறு படைத் தளபதிக்கு உத்தரவு போடுகிறார். அந்த அளவுக்கு ராமனிடம் ஈடுபாடு கொண்டிருந்தார்! அதே போல் அவருக்குத் திருவேங்கடமுடையானிடமும் அளவற்ற பக்தி ஏற்பட்டது. அதன் காரணமாக, அவர் பத்து பாசுரங்கள் பாடி இருக்கிறார்.
திருவேங்கடமுடையானால் பாகவதர் ஆனவர். அனைத்து திவ்ய தேசங்களுக்கும் யாத்திரையாக சென்றவர், திருவேங்கடத்துக்கும் வந்தார். திருவேங்கடத்திலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் இருக்க விரும்பினாலும், ராஜா என்பதால் யாரும் அதை நிச்சயமாக அனுமதிக்க மாட்டார்கள். குலசேகரராக இங்கிருக்க முடியாது என்று புரிந்து கொண்டார். வேறு எப்படி இருக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி அப்படி பிறந்திருக்க மாட்டேனா இப்படி பிறந்திருக்க மாட்டேனா என்று சொல்லி கொண்டே வருகிறார். திருவேங்கட த்தில் எம்பெருமான் புஷ்கரிணியில் ஒரு பறவையாக பிறந்திருக்க மாட்டேனா! ஆனால் பறவைக்கு இறக்கை முளைத்து கீழ் திருப்பதிக்கு பறந்து போய் விடும் அப்பொழுது பெருமானை சேவித்துக் கொண்டே இருக்க முடியாதே வேண்டாம் என்று சொல்லி கொள்கிறார். அதிலேயே மீனாக பிறந்து விடலாம் என்றால் வெய்யில் காலத்தில் மீன் எங்கே போகும்? அல்லது ஆற்று நீர் அடித்து வந்தால் மீன் அதோடு போய் விடுமே அதனால் அதுவும் வேண்டாம் என்கிறார். பெருமான் கையில் பொன் வட்டில் பிடிப்பவனாக ஆகலாமே என்றால் வேறொருவர் வந்து பிடித்துக் கொண்டு போனால் பெருமானை சேவிக்க முடியாதே அதனால் வேண்டாம், செண்பக புஷ்பமாக பிறக்கலாம் என்றால் யாராவது அதை பறித்து தலையில் வைத்துக் கொண்டு போய் விட்டால் அவனை சேவிக்க முடியாதே! அதனால் வேண்டாம் என்கிறார். தம்பகமாக நிற்போம் என்றால் (தம்பகம் என்றால் எதற்கும் உதவாத ஒரு செடி) எதற்கும் பயன் இல்லை என்று அதை வெட்டி விட்டால் எம்பெருமானை சேவிக்க முடியாதே! அதனால் அதுவும் வேண்டாம் என்கிறார். ஆறாக இருக்கலாம் என்றால், ஆறு நிற்கும் ஆனால் தண்ணீர் வற்றி போய் விட்டால் என்ன பண்ணுவது! அதனால் அதுவும் வேண்டாம். பாகவதர்கள் நடக்கும் பாதையாக இருக்கலாமே! அவர்கள் ஸ்ரீபாதத்தில் இருக்கும் தூசியாக இருக்கலாமே என்றால் வேற வழியாக சென்று விட்டால் பெருமானை சேவிக்க முடியாதே! அதனால் எதுவுமே வேண்டாம். உன் ஆஸ்தானத்திற்கு முன்பு இருக்கும் படியாகவே இருந்து விடுகிறேன். நான் படியாய் கிடப்பேன், நீ அது கண்டு ஆனந்தப்பட்டு சிரிப்பாய், உன் சிரித்த பொன்முகத்தை நான் கண்டு கொள்கிறேன் என்றார். இன்றைக்கும் திருவேங்கட ஆஸ்தானத்திற்கு முன் இருக்கும் படிக்கு குலசேகரபடி என்று தான் பெயர். படிக்கட்டு மீது ஒரு வேளை கவசம் போட்டு விட்டால் சேவிக்க முடியாமல் போய் விடுமே என்று யோசித்து கடைசியாக எதுவாக இருந்தாலும் சரி பெருமானின் சேவை நமக்கு வேண்டும், கைங்கர்யம் வேண்டும் என்று எதுவாகவாவது பிறக்க பிரார்த்தித்துக் கொண்டார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “எதுவாக பிறந்தாலும் இந்த ஊர்லேயே இருக்க வேண்டும் என்று அவரை போல நான் நினைக்கவில்லையே! பகவத் சம்பந்தம் இருக்கிற ஜென்மம் முக்கியமே தவிர என் ஜென்மம் எது என்பது முக்கியமில்லை என்கிற ஞானம் எனக்கு வரவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment