||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
013 ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையாரைப் போலே|
திருமழிசை என்பது திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு ஊராகும். பல முனிவர்கள் வாழ்ந்த இத்தலத்தில் பார்கவர் என்ற மகாமுனிவர் தவமேற்கொண்டார். அந்த தவத்தைக் கலைக்க அப்சரஸ் போன்ற பெண் கனகாங்கி முற்பட்டார். அதன் விளைவாக அவர்கள் இருவருக்கும் பிண்ட வடிவில் ஒரு சிசு பிறந்தது. அந்த பிண்ட வடிவமான ஆண் சிசுவை ஒரு கோயிலில் போட்டு விட்டு அகன்று விட்டனர் இருவரும். கருணையே வடிவான மகாலட்சுமி தாயார் அந்தக் குழந்தையின் மீது கருணை கொண்டு அதன் அவயங்களை வளர்ச்சியடையச் செய்து பூரணனாக்கினாள். பின்னர், அக்குழந்தையின் அழு குரல் கேட்டு அவ்வழியேச் சென்ற பிரம்புக் கூடை முடையும் ஒருவன் அக்குழந்தையை எடுத்து வளர்த்தான். அக்குழந்தையே திருமழிசை ஆழ்வார் ஆவார்.
திருமழிசை ஆழ்வார் வேதங்கள் அனைத்தும் கற்றார். பல சமய நூல்களையும் கற்று தேர்ச்சி பெற்றார். தனது வாதத் திறமையினாலும், யோக நிஷ்டையினாலும் பல யோகிகளை வெற்றி கண்டார். உலகில் பல மதங்கள் இருக்கின்றன, இந்த உலகத்தைப் படைத்த கடவுள் யார் என்று குழப்பம் ஏற்பட்டது. கடும் தவம் புரிந்தார். பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார். சிலர் சாக்கிய (பௌத்த) மதம் தான் கடவுளை அடைய வழி என்றார்கள். உடனே ஆழ்வார் சாக்கிய மதத்தில் சேர்ந்து அவர்களின் தத்துவ நூல்களைப் படித்தார். அதில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. குழப்பம் இன்னும் அதிகமாகியது. அந்த மதத்தை விட்டுவிட்டு சமண மதத்துக்குச் சென்றார். அங்கேயும் அதே போல அவருக்குத் தெளிவு ஏற்படவில்லை. அலைந்தார். பிறகு சைவ மதத்தைத் தழுவினார். சிவவாக்கியர் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு, சைவ தத்துவ விளக்கங்களை ஆராயத் தொடங்கினார்.
இவர் ஆராய்வதை ஒருவர் கவனித்து வந்தார். அவர் பேயாழ்வார். இவரின் ஆராய்ச்சி குணத்தைக் கண்ட அவர் இவருக்கு முழுமுதற் கடவுளைப் பற்றிப் புரிய வைக்க ஒரு திட்டம் போட்டார். ஒரு நாள் காலை திருமழிசை ஆழ்வார் வரும் வழியில் பேயாழ்வார் செடிகளைத் தலை கீழாக நட்டார். இலைகள் கீழ் பக்கமாகவும், வேர்ப் பகுதி ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டும் இருந்தது. ஒரு குடத்தை எடுத்தார் அதில் நிறைய ஓட்டைகளைப் போட்டு, கிணற்றிலிருந்து அதில் நீர் ஒழுக செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற முயன்றார். தண்ணீர் இல்லாததால் அவர் மீண்டும் கிணற்றிலிந்து எடுத்தார் மறுபடியும் ஒழுகியது. இந்த விசித்திரமான செயலைப் பார்த்தார். திருமழிசை ஆழ்வார்.
பேயாழ்வார் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று அவருக்குப் புரியவில்லை. எதையும் ஆராய்ந்து கற்றுக் கொள்ளும் குணமுடைய திருமழிசை ஆழ்வாருக்குத் தலைகீழ் செடியும், ஒழுகும் ஒட்டை குடமும் சிரிப்பு வந்தது.
பேயாழ்வார் இதைக் கவனித்து” உங்களைப் பார்த்தால் மிகுந்த படித்தவராகத் தெரிகிறது. ஏன் சிரிக்கிறீர்கள்” என்று கேட்டார்.
“பித்துப் பிடித்தவர் போலத் தலை கீழ் செடிகள்.. ஓட்டை குடம்... ” என்றார் சிரித்துக் கொண்டே.
“பித்துப் பிடித்தவன் நீர் அன்றோ! பரம்பொருள் யார் அவனை எப்படி அடைய முடியும் என்று தேடித் தேடி பித்துப் பிடித்து அலைந்து கொண்டு இருப்பவர் நீர் தானே!”
திருமழிசை ஆழ்வார் துணுக்குற்று “என்ன சொல்லுகிறீர்கள்?” என்றார்.
பேயாழ்வார் “என் செயல் கண்டு சிரித்தீர் ஆனால் அதன் உட்பொருளை ஆராய உம்மால் முடியவில்லையே! நீர் எப்படி பரம்பொருளைக் கண்டுபிடிக்க போறீர்?” என்று கேட்க திருமழிசை ஆழ்வார் திகைத்து நின்றார்.
“நீரே உம் செயலுக்கு விளக்கத்தையும் சொல்லும்” என்றார்.
”நீர் ஆராய்ந்த மதம், தத்துவம் எல்லாம் இந்த செடிகளைத் தலை கீழாக நடுவதற்குச் சமம். ஓட்டை குடத்தில் தண்ணீர் ஊற்றுவது அந்த மதம் உமக்கு மோட்சம் அளிக்கும் என்று நம்புவதற்குச் சமம்!” என்று கூறிவிட்டு பேயாழ்வார் வேத கருத்துக்களையும் பரம்பொருளைப் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்.
இதைக் கேட்டுக் கொண்டு இருந்த திருமழிசை ஆழ்வார் “இவ்வளவு பேசுகிறீரே அந்த பரம்பொருளை நீர் கண்டீரோ?“ என்றார்.
“கண்டேன், என்னுள் கண்டேன், என் வெளியில் கண்டேன். நிலத்திலும் கண்டேன், நீரிலும் கண்டேன், காற்றிலும் கண்டேன், நெருப்பிலும் கண்டேன், ஆகாசத்திலும் கண்டேன், கோவிந்தா என்ற நாமத்தில் கண்டேன் ஏன் உன் உள்ளும் கண்டேன்!” என்றார்.
“அவன் உருவம் அற்றவன். அவனை எப்படிக் காண முடியும்? அவனை எனக்குக் காட்டுங்கள்” என்று திருமழிசை ஆழ்வார் கேட்க அதற்குப் பேயாழ்வார் ”அவன் உருவமற்றவன் என்றாலும், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வாருடன் நானும் சேர்ந்து திருக்கோவிலூரில் அவன் திருமேனி அழகைக் கண்டு ரசித்தோம். திருவரங்கத்தில் கிடக்கிறான், என்னுள் நிற்கிறான்” என்று பேயாழ்வார் திருக்கோவிலூரில் நடந்த கதையைச் சொன்னார். இவ்வளவு நாள் உண்மை அறியாது தவித்த திருமழிசை ஆழ்வார் மனம் உருகி பேயாழ்வாரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டு திருமாலே பரம்பொருள். அவரே மோட்சம் கொடுக்க வல்லவர் என்ற உண்மையை அறிந்து கொண்டார். கடைசியில் நாராயணன் திருவடியே கதி என்று ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் ஒன்றே ப்ரதானம் என்று வந்து அதில் தீவிரமாக இருந்தவர்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “திருமழிசையார் போலே நான் எந்த மதத்தையும் ஆராயவில்லையே! அப்படி மற்ற மதங்களை ஆராய்ந்து விட்டுவிட்டு வரவில்லையே! எம்பெருமானை பற்றி ஒன்றுமே ஆராயவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment