||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
சால்வனின் தந்திரம்|
பிரத்தியும்னன் அவர்களுக்கு ஆறுதல் கூறி, சால்வனை எதிர்க்கத் தன் இரதத்தில் ஏறினான். அவனுடன் சாத்யகி, சாம்பன், அக்ரூரர், கிருதவர்மன் போன்ற பல யாதவ வீரர்களும் சென்றார்கள். இரண்டு அணிகளுக்குமிடையே கடும் போர் நிகழ்ந்தது.
பிரத்தியும்னன் வெகு வீரமாகச் சண்டையிட்டான். அவன் மாயப் போர் நன்கறிந்தவன். அதனால் சால்வனின் எல்லாத் தந்திரங்களையும் அவனால் சமாளிக்க முடிந்தது. ஆனால் அவனுக்கு ஆச்சரியம் அளித்தது சால்வனுடைய இரதம். அவனுடைய சேனையைப் பிரத்தியும்னனால் அழிக்க முடிந்தது. ஆனால் சால்வன் அகப்படவில்லை.
சிவபெருமான் கொடுத்த அந்த அதிசய விமானத்தில் சால்வன் உட்கார்ந்திருந்தான். அவன் யார் கண்ணுக்கும் புலப்படவில்லை. அந்த விமானம் ஒரு கணம் ஆகாயத்தில் இருக்கும், அடுத்த கணம் அது பூமியில் இருக்கும், அதற்கும் அடுத்த கணம் அது ஆகாயத்தில் பறந்து சென்றுவிடும். ஒரு சமயம் மிகப் பெரியதாகக் காணப்படும்; இன்னொரு சமயம் மிகச் சிரியதாகிவிடும்.
சால்வனின் மிக பராக்கிரமசாலியான மந்திரி த்யுமான் பிரத்தியும்னனை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தாக்கினான். ஒரு நல்ல தருணம் பார்த்து அவன் பிரத்தியும்னனைத் தன் இரும்பு கதையினால் அடித்தான். பிரத்தியும்னனுக்கு மார்பில் நல்ல அடி. உடனே அவனுடைய சாரதி இரதத்தைப் போர்க் களத்திலிருந்து அப்பால் ஓட்டிச் சென்றான். மருத்துவ உதவிக்குப் பிறகு பிரத்தியும்னனுக்கு நினைவு திரும்பியது.
உடனே அவன் தன் சாரதியைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டான். இதற்கு சாரதி, "ஐயா! யுத்த தர்மத்தின்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத் தான் நான் செய்தேன். யஜமானன் ஆபத்தில் இருந்தால் அவரைக் காப்பாற்ற வேண்டியது சாரதியின் கடமை. அதைத் தான் நான் செய்தேன். இதனால் நான் தங்களுக்கு ஒரு களங்கமும் ஏற்படுத்தவில்லை. தாங்கள் இப்பொழுது சரியாகி விட்டதனால், மீண்டும் போர்க்களத்திற்குத் தங்களை நான் ஓட்டிச் செல்வேன்" என்றான்.
பிரத்தியும்னன் உடனே த்யுமானைத் தாகித் தன் கொடிய அம்புகளினால் அவன் தலையைத் துண்டித்தான். கிருஷ்ணர் நகரத்தைக் காப்பாற்றும் பொறுப்பைப் பாலராமரிடம் விட்டுவிட்டு, தம்முடைய சாரதி தாருகனை நேரே யுத்தக் களத்திற்கு இரதத்தை ஓட்டும்படிச் சொன்னார்.
கிருஷ்ணரைப் பார்த்ததும் அங்குள்ள யாதவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். சால்வனும் கிருஷ்ணரின் இரதத்தைப் பார்த்தான். இருவருக்கும் இடையே கொடிய போர் நடந்தது. சப்தமிட்டுக் கொண்டு வெகு வேகமாகச் செல்லும் வேலாயுதத்தைச் சால்வன் கிருஷ்ணரை நோக்கி எறிந்தான். கிருஷ்ணர் தம்முடைய அம்புகளினால் அதைத் துண்டு துண்டாக்கினார். சால்வன் தன் விமானம் மூலம் ஆகாயத்தில் மறைந்து, அங்கிருந்து கிருஷ்ணரின் இடக்கையை நோக்கி அம்புகளைப் பொழிந்தான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment