||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ருக்மிணியின் மன நிலை|
இதற்கிடையில் செய்வது இன்னதென்று தெரியாமல் ருக்மிணி தவித்தாள். கிருஷ்ணரின் வருகைக்காக அவள் மிகவும் ஆவலோடு காத்திருந்தாள். ஓர் உயர்ந்த மாளிகையின் உப்பரிகையில் உட்கார்ந்து அவள் கிருஷ்ணரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தாள். ஆனால் அவள் அனுப்பிய அந்தணர்க் கூட இன்னும் வரவில்லையே!
"நான் அதிர்ஷ்டம் இல்லாதவள். சிறிது நேரத்தில் என்னைச் சிசுபாலனுக்குத் திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். கிருஷ்ணரோ இன்னும் வரவில்லை. நான் தூது அனுப்பிய அந்தணரும் கூட இன்னும் வரவில்லை. ஒருவேளை கிருஷ்ணர் என்னை ஏற்றுக் கொள்ளவில்லையோ என்னவோ" என்றெல்லாம் அவள் நினைக்க ஆரம்பித்தாள். அந்த நிலையில் கடவுளை வேண்டிக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு ஒரு வழியுமில்லை. ஆகவே கண்களில் கண்ணீர் மல்க, தன்னைக் காப்பாற்றும்படி இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தாள்.
இதற்கிடையில் கிருஷ்ணரும் அந்த அந்தணரும் ஊருக்கு வெளியே இருந்த ஒரு நந்தவனத்திற்கு வந்து சேர்ந்தார்கள். உடனே போய் ருக்மிணியிடம் விஷயத்தைச் சொல்லும்படி கிருஷ்ணர் அந்தணரைக் கேட்டுக் கொண்டார். அந்தணர் வருவதை தூரத்திலிருந்தே ருக்மிணி பார்த்தாள், அவர் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சியையும் அவர் மெதுவாக நடந்து வருவதையும் பார்த்து ருக்மிணிக்கு ஆறுதல் ஏற்பட்டது.
கிருஷ்ணர் வந்து விட்டார் என்று அந்தணரிடமிருந்து அறிந்ததும் அவள் உள்ளம் மகிழ்ச்சியால் குதூகலித்தது. அந்தணருக்கு என்ன கொடுப்பது என்று தெரியாமல் திகைத்து, 'பிராம்மணோத்தமரே! தங்களுக்கு என்ன வெகுமதி கொடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள் காட்டிய அன்புக்கு ஈடாக நான் ஒன்று தான் செய்ய முடியும்' என்று அவர் காலில் விழுந்து, அவர் பாதங்களைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment