About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 24 November 2023

லீலை கண்ணன் கதைகள் - 71

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ருக்மியின் கோபம்|

கிருஷ்ணனுடன் சண்டைக்கு வந்த எல்லா அரசர்களும் தோல்வியை ஒப்புக் கொண்டு ஓட வேண்டியதாயிற்று. ஜராசந்தன் சிசுபாலனைப் பார்த்து, "ஓ அரசே! கவலைப்படாதே, இன்பமும் துன்பமும் எல்லாருடைய வாழ்க்கையில் நிச்சயமாக இருக்கும். எப்படி மரப் பொம்மை அதை ஆட்டி வைப்பவன் இஷ்டத்திற்கு ஆடுகிறதோ, அது போலவே நம் ஈஸ்வரனின் விருப்பப் படித்தான் ஆட வேண்டியிருக்கிறது. இருபத்திமூன்று ஆக்ஷௌஹினி சேனைகளைக் கொண்டு ஜராசந்தனாகிய நான் பதினேழு முறை கிருஷ்ணனிடம் தோற்றுவிட்டேன். இருந்தும், இது பகவானின் செய்கை என்று என்னை நான் தேற்றிக் கொள்ளுகிறேன்" என்று சொன்னான். ஆனால் சிசுபாலன் ஆறுதல் அடையவில்லை. மனம் நொந்து, அவன் தன் நாடு திரும்பினான்.


பீஷ்மகருக்கோ, நடந்த செயல்கள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன, ஆனால் கிருஷ்ணரின் எதிரியான ருக்மிக்கோ, தன் தங்கையைக் கிருஷ்ணர் மனம் புரிவது, அதுவும் பலாத்காரத்தினால் மனம் புரிவது, துளியும் பிடிக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட கோபத்தை அவனால் தாங்க முடியவில்லை. தன் சேனைகளைத் திரட்டிக் கிருஷ்ணரைப் பின் தொடர்ந்தான். புறப்படுவதற்கு முன், கவசம் அணிந்து, கையில் வில்லை எடுத்துக் கொண்டு, எல்லோருக்கும் முன்னால் அவன் ஒரு வீரசபதம் செய்தான், "கிருஷ்ணரைக் கொன்று, ருக்மிணியை மீட்காமல் நான் இந்த நகரத்திற்குள் பிரவேசிக்கமாட்டேன்" என்றான்.

கிருஷ்ணரைப் பிடிப்பதற்காக அவன் வெகு வேகமாகச் சென்றான். தூரத்தில் கிருஷ்ணர் தெரிந்ததும், "ஏ திருடா! நில்! ஏன் தங்கையைத் தூக்கிச் செல்லும் துணிவு உனக்கு எப்படி ஏற்பட்டது?" என்று கத்தினான். மூன்று அம்புகளால் அவன் கிருஷ்ணரைத் தாக்கினான். பதிலுக்குக் கிருஷ்ணர் புன்சிரிப்புடன், அவனுடைய வில்லை துண்டுகளாக உடைத்தார். அவனையும் ஆறு அம்புகளால் தாக்கினார். ருக்மி இன்னொரு வில்லை எடுத்தான், ஆனால் கிருஷ்ணர் அதையும் துண்டு துண்டாக்கினார். இப்படி அவன் புது வில்லை எடுப்பதும், அதைக் கிருஷ்ணர் துண்டாக்குவதும் வெகு நேரம் நடந்தது.

கடைசியில் கையில் கத்தியுடன் ருக்மி இரதத்திலிருந்து குதித்து, கிருஷ்ணர் மீது பாய்ந்தான். ருக்மியைக் கொல்லக் கிருஷ்ணர் தாமும் கத்தியைக் கையிலெடுத்தார். தன் அண்ணன் கொல்லப்படப் போகிறான் என்று ருக்மிணி பயந்தாள். அவள் கிருஷ்ணரின் காலில் விழுந்து, "தயவு செய்து ஏன் அண்ணனைக் கொன்றுவிடாதீர்கள்" என்ச்று கெஞ்சினாள். பயத்தினால் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் முகம் வெளிறி விட்டிருந்தது.

கிருஷ்ணர் ருக்மியின் மீது இறக்கம் காட்டி, அவனை வெட்ட வேண்டாம் என்று தீர்மானித்தார். ஆனால் அவன் அகந்தையைக் கொல்ல வேண்டுமே! அதற்காக, ஒரு துணியினால் ருக்மியைக் கட்டினார். பிறகு அவனுடைய குடுமி, மீசை, தாடி இவற்றையெல்லாம் அரைகுறையாக மழித்து, அவன் முகத்தை விகாரமாக்கினர். கிருஷ்ணர் இப்படி ருக்மியை விகாரப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் பலராமர் யாதவப் படையுடன் அங்கு வந்து சேர்ந்தார். அவர் ருக்மி மீது பரிதாபப்பட்டு, கிருஷ்ணரைப் பார்த்து, "நீ இப்படிச் செய்திருக்கக் கூடாது" என்று கூறினார்.

பிறகு பலராமர் ருக்மிணியைப் பார்த்து, "உன் அண்ணன் மீதுள்ள அன்பு காரணமாக நீ இப்பொழுது சங்கடப் படுகிறாய். ஆனால் நீ சங்கடப்படத் தேவையில்லை. எல்லாவற்றையும் மறந்து, நீ கிருஷ்ணரோடு மகிழ்ச்சியோடு போய் வா" என்று அறிவுரை கூறினார். ருக்மி கிருஷ்ணர் சென்ற தேரையே வெகு நேரம் பார்த்துக் கொண்டு நின்றான். அவன் தன் சபதப்படி ஊர் திரும்பவில்லை. அங்கேயே ஒரு சிறிய நகரை கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்தான். கிருஷ்ணர் பிறகு ருக்மிணியுடன் தேரில் துவாரகைக்கு புறப்பட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment