About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 28 November 2023

ஸ்ரீமத் பாகவத புராணம் - 25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

கண்ணன் காத்த குழந்தை

ஸ்கந்தம் 01

விஷ்ணுராதனுக்கு புண்ணியாக வசனமும், ஜாத கர்மாவும் தௌம்யர் போன்ற மஹரிஷிகளைக் கொண்டு செய்விக்கப் பட்டது.


தர்ம புத்ரர் ஏராளமான தானங்களைச் செய்தார். அப்போது அவரை வாழ்த்திய அந்தணர்கள், "விஷ்ணுராதன், ஸார்வ பௌமனாகவும், மிகுந்த புகழ் உடையவனாகவும், மஹா பாகவதனாகவும் விளங்குவான். இக்ஷ்வாகு போல் மக்களைக் காப்பவன். ராமனைப்போல் மக்களிடத்தில் பிரியம் உள்ளவன். சிபியைப் போல் கொடையாளி, பரதனைப் போல் தன்னைச் சேர்ந்தவர்களின் புகழை அதிகரிக்கச் செய்வான். கார்த்தவீர்யன், அர்ஜுனன் இவர்களைப் போல் சிறந்த வில்லாளி, அக்னி போல் நெருங்க முடியாதவன். சிம்மம் போல் பராக்ரமம் உள்ளவன், பொறுமை உடையவன். ப்ரும்மாவைப் போல் பாரபட்ச இல்லாதவன். சிவனைப் போல் அனுக்ரஹம் செய்பவன். மஹா விஷ்ணுவைப் போல் அனைவர்க்கும் ஆச்ரயமாய் விளங்குவான். ஸாக்ஷாத் க்ருஷ்ணனைப் போல் அனைத்து நற்குணங்களும் கொண்டவன். ரந்தி தேவன்போல் உதார குணமுள்ளவன். தைரியத்தில் மஹாபலி போலும், ப்ரஹ்லாதன் போல் பகவானிடம் பற்றுள்ளவனாகவும் இருப்பான். நிறைய ராஜ ரிஷிகளை உண்டு பண்ணுவான். கெட்ட வழியில் நடப்பவர்களை தண்டிப்பான். கலியை அடக்குவான். ஒரு ப்ராமண குமாரனின் சாபத்தால் தன் மரணத்தை அறிந்து கொண்டு, விரக்தனாகி ஹரி சரணத்தை அடைவான். வியாசரின் மகனான சுகரிடம் கதை கேட்டு, ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்து, கங்கைக் கரையில் இவனுக்கு மோக்ஷம் கிட்டும்." என்றனர்.

ப்ராமண சாபம் கிட்டும் என்றதும் சற்று கலங்கிய தர்மபுத்ரர், ஸத்சங்கம் கிட்டும், மோக்ஷத்தை அடைவான் என்றதும் ஆறுதல் அடைந்தார்.

அன்னை, 5 தாத்தாக்கள், ஏராளமான பாட்டிகள், கொள்ளுப் பாட்டியான குந்தி, அத்தனை பேரின் அரவணைப்பிலும் வெகு சீக்கிரம் வளர்ந்தான் குழந்தை.

ஞாதிகளை வதம் செய்த பாவத்தைப் போக்க, தர்ம புத்ரர் மூன்று அச்வ மேத யாகங்கள் செய்தார்.

பகவான் கண்ணன் வந்து உடனிருந்து யாகங்களை செவ்வனே நடத்திக் கொடுத்தான். அவ்வமயம் சில மாதங்கள் அஸ்தினாபுரத்தில் தங்கியிருந்த கண்ணன், தன்னால் காக்கப்பட்ட அந்த குழந்தையோடு மிகவும் ஆசையாய் விளையாடினான். பின்னர், மீண்டும் துவாரகை திரும்பும் போது, அர்ஜுனனை உடன் அழைத்துக் கொண்டு திரும்பினான். அதன் பின்னர் ஏழு மாதங்களுக்கு கண்ணனைப் பற்றிய எந்த செய்தியும் அஸ்தினாபுரத்தை எட்டவில்லை. தர்ம புத்ரர் கவலை கொள்ளத் துவங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment