About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 28 November 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபத்தி எட்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

078 வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே|

இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் மகனாகப் பிறந்தவர் பராசர பட்டர்.


நான்கு வயது சிறுவனாக இருக்கும் பொழுது, ஒரு நாள், காவிரிக் கரையில் விளையாடிக் கொண்டிருந்த பராசரன், ஸர்வக்ஞ பட்டர் என்ற முதிர்ந்த வைணவப் பெரியவரொருவர் பல்லக்கில் ஊர்வலமாகப் போய்க் கொண்டு  இருப்பதைக் கண்டார். உடன் வந்த அவரின் சீடர்கள், அவருடைய புகழைப் பாடி வந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பராசர பட்டர், ராமானுஜரும், கூரத்தாழ்வாரும், முதலியாண்டாரும், எம்பாரும் வசிக்கும் ஊரில், இப்படி தற்புகழ்ச்சியுடன் ஒருவர் வருவதை விரும்பவில்லை.

கையில் ஒரு பிடி மணலை எடுத்துக்கொண்டு, பல்லக்கினை நிறுத்தி, சர்வக்ஞரிடம், “நீங்கள் திறமைசாலி எனில், என் கையில் உள்ள மண் எவ்வளவு எனக் கூற முடியுமா?” என்றார்.

“மண் கோடிக்கணக்கில் இருக்கும். எவ்வளவு மணல் உள்ளது என்பதை எப்படி சொல்ல முடியும்?” என்று கேலியாக சிரித்து திகைத்த ஸர்வக்ஞ பட்டர் வினவ, 

உடனே பராசரர், "என்னால் சொல்ல முடியும்" என்றார்.

வியந்த சர்வக்ஞர்" சொல் பார்ப்போம்" என்றார்.

சற்றும் தாமதிக்காத பராசர பட்டர், "ஒரு கைப்பிடி மண்" தன் கேள்விக்கான பதிலைக் கூறினார்.

சிறுவனின் திறமையைக் கண்டு வியந்து தலைவணங்கிய சர்வக்ஞர், அந்தக் குழந்தையை, “யார் நீ?” என வினவ, பராசர பட்டர், தான் கூரத்தாழ்வாரின் மகன் எனக் கூறினார். குழந்தையை தன் பல்லக்கில் ஏற்றி வந்து கூரத்தாழ்வார் வீட்டில் கொண்டு வந்து விட்டார், ஸர்வக்ஞ பட்டர்.

வாசலில் பிள்ளை உறங்காவில் தாசரின் மனைவி பொன்னாச்சியார் குழ்ந்தையை அதன் தாய் ஆண்டாளிடம் ஒப்படைத்து, "குழந்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள். கெட்ட கண்கள் அவர் மீது பட்டு விடப் போகிறது" என்றாள்.


பின்னாளில், பராசர பட்டர் வளர்ந்ததும், ஸ்ரீராமானுஜரால் தெரிந்து எடுக்கப்பட்டு, அவர் காலத்திலேயே வைணவ ஆசாரியராக நியமிக்கப் பட்டார். ராமானுஜரின் அந்திம காலத்தில் ராமானுஜர், பராசரரை அழைத்து, திருநாராயணபுரம் சென்று, அங்கு வேதாந்தி என்பவரை வாதத்தில் வென்று வருமாறுக் கூறினார். பட்டரும் திருநாராயணபுரம் சென்று, வேதாந்தியை வாதத்திறமையால் வென்று அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வந்தார். அவருக்கு நஞ்ஜீயர் எனப் பெயரிட்டு, வைஷ்ணவ சம்பிரதாயத்தை கடைபிடிக்கவும் வைத்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "பட்டரைப் போல் தனது வாதத் திறமையால் பிறரை வென்று, ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை நிலைநாட்டினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment