About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 10 April 2024

ஸ்ரீமத் பகவத் கீதை - மூன்றாம் அத்யாயம் அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

கண்ணன் காட்டிய கர்ம யோகம் சுவர்களை வீடாக்குகிற, இல்லமாக்குகிற, லக்ஷ்மி வசிக்கும் கிருஹமாக்குகிற கலையை சொல்லி தருகிறது. வாழ்க்கையில் கலை, தொழில், வியாபாரம், இன்பம் துய்த்தல், ஓய்வெடுத்தல், ப்ரார்த்தனை செய்தல், சமூக நடவடிக்கைகள், அண்டை அயல் மனிதருடன் உறவாடுதல் ஆகிய அனைத்தையும் இணைத்து வாழ்க்கையின் சிதறுண்ட மலர்களை வாழ்க்கை என்ற மாலையாக்கக் கற்றுதருகிறது கீதையில் கண்ணன் காட்டிய கர்மயோகம். முதலில் அத்யாயம் பற்றிய விளக்கத்தை பார்ப்போம் பிறகு கர்மயோகம் பற்றி ஒரு சில விளக்கத்தை பார்ப்போம்.

பாவ புண்ணியமென்ற பலனை எதிர்பாரா ஞானமே பெரிதென்று போதிக்கும் நீ, பலன் கருதும் கோரமான இப்போரில் என்னை ஏன் ஈடுபடுத்துகிறாய்? என்ற அர்ஜூனனின் கேள்விக்கு கண்ணன், ”ஞான யோகம், கர்ம யோகம் இரண்டுமே என்னால் சொல்லப்பட்டப் போதும் கர்மயோகமே சிறந்தது” என்கிறார். ஏனெனில் பிறந்தவர் யாவருமே செயலாற்றாமல் இருக்க முடியாது. மனதால் செயலை நினைத்துக்கொண்டு செயலாற்றாமல் இருப்பவன் பொய்யன். வினைகள் குணங்களுக்கேற்பவும் புலன்களுக்கேற்பவும் அமைகின்றன. இது இயற்கையாகவே நடக்கிறது. இதற்கு தானே காரணம் என்று உணர்க்கிறான் அஞ்ஞானி, இறைவனே காரணம் என்று உணர்கிறான் ஞானி. திருப்தி அடையாத ஆசையே ஒருவனை செயலில் ஈடுபடுத்தி மனிதனின் துன்பத்திற்கு காரணமாகிறது. ஆசையின் இருப்பிடங்கள் புலன்களில் தொடங்கி, மனம், புத்தி, என்று இடமாறுகிறது. முதலில் புலன்களை அடக்கு. புலன்களை விட உயர்ந்தது மனம், மனத்திலும் உயர்ந்தது புத்தி, புத்தியிலும் உயர்ந்தது ஆத்மா. புத்திக்கும் மேலான ஆத்ம பலத்தால் ஆசையை வென்று பற்றற்றுச் செயல் புரிபவனே கர்ம்யோகி.

தனக்காக செய்யும் வினை/செயல் ஒருவனை பந்தத்தில் ஈடுபடுத்துகிறது. உலக நலன் கருதிச் செய்யும் வினை/செயல் பந்தத்தை அறுக்கிறது. எல்லா செயல்களிலும் இறைவன் இருக்கிறார். அதனால் தான் ஆசை இல்லாத துறவிகளும் உலக நலன் கருதி இறைவனை வேண்டி வேள்வி எனும் வினை/செயல் புரிகின்றனர். அறிவாளிகள் தானும் பற்றற்று செயல் புரிந்து மற்றவர்களையும் அது போல் செயல் புரிய தூண்டவேண்டும். நானே மக்களுக்காக எடுத்துக் காட்டாய் வினை/செயலாற்ற வேண்டி இருக்கிறது என்று எப்படி எல்லாம் வினையாற்ற வேண்டும் என்று இங்கே பகவான் விளக்குகிறார். புலன்களின் உணர்வே இன்பம், துன்பம். இந்த இரண்டையும் சமமாக நினைப்பது ஞான யோகம், புலன்களை வென்று பற்றற்று செயல் புரிவது கர்ம யோகம். புலன்களை அடக்கி இன்ப துன்பங்களைச் சமமாக பாவித்து செயல் புரிபவன் நிலையான புத்தியுடையவன் என்றும் பகவான் இங்கே விளக்கம் அளிக்கிறார்.

  • மனிதர்கள் நான்கு வகையாக செயல் புரிகிறார்கள்.
  • 1. உள்ளும் புறமும் செயலிலே ஈடுப்பட்டிருப்பவர்கள் இவர்கள் தம் ஆன்மீக யாத்திரையை இன்னும் தொடாங்காதவர்கள்.
  • 2. உள்ளே செயலைச் செய்துகொண்டே வெளியே ஆசைகள் அற்றவர்கள் போல் இருப்பவர் இவர்கள் பொய்யொழுக்கம் உடையவர்கள்.
  • 3. உள்ளும் புறமும் பற்றற்று இருப்பவர்கள் இவர்கள் சன்னியாசிகள் அல்லது துறவிகள் என்போம்.
  • 4. புலன்களினால் மட்டுமே செயலைச் செய்து கொண்டு உள்ளே பற்றற்று இருப்பவர். இவர்கள் கர்மயோகிகள்.

மேலும் கர்ம்யோகி யார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

கண்ணனிலும் பெரிய கர்மயோகி யார் உள்ளார்? தோல்வி வெற்றி, பகைவர் நண்பர் அனைவரையும் சமதிருஷ்டியுடன் நோக்கி போர்க் களத்தே பரஞான மெய்கீதையை புகன்ற கண்ணன் ஸ்ரீமத் பகவத் கீதை காட்டும் கர்மயோகத்திற்கு வாழ்கின்ற உதாரணம். அவனே நிலைத்த அறிவுடையவன், அவனே சன்னியாசி, அவனே கர்மயோகி, அவனே தியான யோகி, விஞ்ஞானி, விஸ்வரூபி, லட்சிய பக்தன், தேவன், குணாதீதன், புருஷோத்தமன், சாத்வீகக் கர்த்தா இப்படி கீதையின் ஒவ்வொரு சுலோகமும் கண்ணனின் வாழ்க்கை வரலாறே. மேலும் ராமனும், பரதனும், இலட்சுமனனும், அனுமனும் கர்மயோகத்திற்கு இந்நாடு கண்ட உதாரணங்களாவர். 

பானை செய்யும் கோராகும்பர், பெற்றோருக்கு பணிவிடை புரியும் புண்டலீகன், ஸ்ரீசேனா நாவிதர், ஸாவதாமாலி என்ற பூந்தோட்டக்காரன், நரஹரிஸோனன் என்ற பொற்கொல்லன், ரவிதாஸர் என்ற சக்கிலியர், சாஹீகர் என்ற வட்டிக்கடைக்காரர், ஜயமல்லர் என்ற மன்னன், தனாசடர் என்ற விவசாயி, கபீர் என்ற நெசவாளி, நாமதேவர் என்ற தையல்காரர், பெரியதாசர் என்ற வளையல் வியாபாரி என்று இப்படி அனைவரும் கர்மயோகம் புரிந்து விட்டலனை வழிபட்டனர். செய்தொழில் எதுவாயினும் அதை உண்மையுடன் செய்து பரம்பொருளை அடை என்கிறது கீதை. தமிழ் இலக்கியத்தில் இப்படி சாதாரண தொழில் வாழ்க்கை புரிந்தும் இறைவன்மீது பக்திகொண்டு கர்மயோகியராய் வாழ்ந்த பெரியவர்கள் வரலாறுதான் பெரியபுராணம். அரியனை ஏறி அரசு புரிந்த சேரமான் பெருமான், மீன்பிடிக்கும் அதிபத்தர், 

மண்பாண்டம் செய்துவந்த திருநீலகண்டர், வணிகராய் வாழ்ந்த இயற்பகையார், விவசாயம் செய்து வந்த இளையான்குடி மறநாயனார், கண்ணப்பன் எனும் ஒப்பிலா வேடன், பக்தருக்கு துணி துவைத்துப் போட்ட திருகுறிப்புத் தொண்டர், இல்லத்தரசியாக விளங்கிய காரைக்கால் அம்மையார் இவர்கள் அனைவரும் கர்மயோகிகளே.

ஆக, கண்ணன் சொல்லும் கர்மயோகம் குலம், தொழில், இடம், கல்வியறிவு இவைகளால் பேதம் ஏற்படா வண்ணம் ஆணும், பெண்ணும் செய்து ஒழுகவல்ல வழி. நமக்கு எல்லாம் ஒரு சந்தேகம் ஏற்படும் கர்மயோகம் எப்படி செய்வது, அதற்கான சக்தி நம்மிடம் இருக்கிறதா, அதையும் கண்ணன் மிக அழகாக கூறுகிறார் .

கர்மயோகம் புரிவதற்கு எனக்கு சக்தி இல்லையே. தொண்டு புரிவதற்கு எனக்கு அறிவு இல்லையே. புதுப்பணி தொடங்குவதற்கு எனக்கு திறமை போதாதே. நான் குறையுள்ளவன் எளியவன் என்கிறான் தொண்டன். அதற்கு கண்ணன் சொல்கிறான்: “குழந்தாய், புதிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். ஏற்கனவே தான் உன் உடம்பும், மனதும், அறிவும், மூச்சும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றனவே, அவற்றையே அந்த அசைவுகளையே இயக்கங்களையே பயன்படுத்துக் கொள்ளேன்”.

உடம்பு எப்போழுதும் அசைந்து கொண்டே இருக்கிறது. அரை நிமிஷம் ஒரிடத்தில் உட்கார முடிகிறதா? கால் ஆடிக் கொண்டே இருக்கிறது. கை தலையைச் சொறிகிறது. ஆக உடல் என்பது எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பது. அதன் இயக்கத்தைப் பயன்படுத்தி தன்னை உணர். அந்த இயக்கம் சீராக செய்ல்படும் ஒழுங்கினை ஆரம்பிக்க உனக்கு உதவும் என்கிறான் கண்ணன். அதே போல் மூச்சு விடுவதற்கு மனிதன் கற்றுக்கொள்ளவா வேண்டும்? ஆகவே மூச்சுவிடுவதிலும் மனிதன் சக்தியைச் செலவழித்துத் தானே வருகிறான். அந்த மூச்சைச் சற்று ஒழுங்காக, சீராக விடுவது தானே பிராணாயாமம்! அதுபோல, மனம் எப்போதும் ஆசையும், துவேஷமும், விருப்பும், வெறுப்பும் கொண்டு தானே இருக்கிறது. இந்த விருப்பு வெறுப்பை நல்லதை விரும்புவதாகவும், கெட்டதை வெறுப்பதாகவும் ஒழுங்குபண்ணிக் கொள்வதுதானே பக்தி. அதுபோல அறிவு ஒவ்வொரு கணமும் இவ்வுலகை இது நல்லது இது கெட்டது என்று துண்டு போட்டுக் கொண்டு தானே இருக்கிறது. இந்த அறிவை இது சாசுவதம், நித்தியம், இது நிலைத்த பரம்பொருள் என்றும், இது தற்காலிகமானது, இது அழிவது, இது அனித்தியம் என்றும் பிரித்தறிவதற்குத் தானே விவேகம் என்று பெயர். ஆகவே புதிதாக சக்தியைச் செலவழிக்கத் தேவை இல்லை. ஏற்கனவே வீண் பண்ணிக் கொண்டிருக்கிற சக்தியை, உடல், மூச்சு, மனம், அறிவு ஆகியவற்றின் சக்தியை ஒழுங்கு பண்ணுவது தான் இறைவனை அடையும் வழி என்கிறார் கண்ணன்.

தன்னிடம் செயலாற்றும் திறன் இல்லை என்று சோம்பி இருப்பவனுக்கு, இதைவிட ஒழுக்க உயர்வு, நியாய உணர்வு சற்று அதிகமானவனுக்கு கீதை என்ன சொல்கிறது தெரியுமா? “நீ உண்கிறாய், உடை உடுத்துகிறாய், வீட்டில் வசிக்கிறாய். இந்த வசதிகள் எல்லாம் உழைப்பினால், முயற்சியினால், கர்மத்தினால் யாரோ ஒரு உழைப்பாளி படைத்தது தானே! அதையெல்லாம் நீ அனுபவித்துவிட்டு, நீ உழைக்க மாட்டேன் என்பது இவ்வுலகில் கூட நியாயம் இல்லையே இறைவன் சன்னதியில் இது எப்படி நியாயமாகும்? ஆகவே உழை தொண்டுபுரி என்கிறார் கண்ணன்.

சில பேர் கர்மத்தினால் வருகின்ற பலன், பலம் தனக்குத் தேவை இல்லாத அளவிற்கு உயர்ந்து இருப்பார்கள். அவர்கள் ஏன் தொண்டு புரிய வேண்டும்? தொண்டு புரிந்து அவர்களுக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. தொண்டு புரியாததனால் அவர்களுக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. இவர்களை பார்த்து கண்ணன் சொல்கிறான்:- அப்படி அலட்சியமாக இராதே. நீ நல்லவன் தானே? ஒழுக்கம் மிகுந்தவன் தானே. அப்படி நல்லவனாக இருக்கிற உன்னைப் பார்த்துத் தானே பாமர ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்து கொள்வார்கள். ஆகவே, மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்குவதற்கு என்றாவது நீ கர்மம் புரி, தொண்டு செய், சேவை பண்ணு. நீ வினைப்பயன் தேவையில்லை என்று சும்மா இருக்கலாம். உண்மையில் நீ முழுமை உடையவனாக இருக்கலாம். ஆனால் உன்னைப் பார்த்து பாமர மக்கள் சோம்பேறிகளாகி விடக் கூடாது. ஆகவே தொண்டு புரி, உழை, முயற்சி செய், செயல் புரி. இறைவன் நல்ல காரியங்களை உலகில் நடத்த நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கிறான். அப்படி இறைவனின் கைகருவியாக ஆகிவிடு. காலியாக இருக்கிற புல்லாங்குழல் கண்ணனின் உதடுபட்டு இசைமழை பொழுவதுபோல் நீயும் அவன் கைபட்டு உலக சேவைபுரியும் புண்ணிய கருவியாக ஆகிவிடு. அப்போதும் கூட தொண்டும், தொழிலும் இன்றியமையாதவை, தவிர்க்க முடியாதவை.

கர்மயோகம் “பலனை எதிர்பாராமல் செயல் புரிபவன் பரம்பொருளை அடைகிறான்” உங்களைச் சிரமமின்றி பணி செய்யத் தூண்டுகின்ற இயற்கையாக அமைந்த, சுலபமான உங்கள் மனத்தைக் கவர்ந்த விஷயங்கள் அனைத்தையும் எழுதுங்கள். உலக நன்மை, புலனடக்கம், மனிதாபிமானம், பரோபகாரம் என்ற தலைப்பின்கீழ் நீங்கள் செய்ய விரும்புகிற விஷயங்கள், பணிகள் ஆகியவற்றைப் பட்டியிலிடுங்கள். இரண்டு பட்டியல்களிலும் இருக்கின்ற பணிகள் எதெது என்று அடையாளம் காணுங்கள். அதுதான் உங்கள் சுய தர்மம், சுய கர்மம், சுபாவம். அந்த சுயதர்மத்தை ஒதுக்கிவிட்டு நீங்கள் வாழ்க்கையில் எந்த நற்பணியையும் செய்ய முடியாது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment