||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 40 - மகரக் குண்டலங்கள் பதிந்த திருச்செவிகள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதினெட்டாம் பாசுரம்
மண்ணும் மலையும்*
கடலும் உலகேழும்*
உண்ணும் திறத்து*
மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு*
வண்ணமெழில் கொள்*
மகரக் குழை இவை*
திண்ணம் இருந்தவா காணீரே*
சேயிழையீர்! வந்து காணீரே|
- மண்ணும் - பூமியையும்
- மலையும் - மலைகளையும்
- கடலும் - கடல்களையும்
- உலகு ஏழும் - ஸப்த (ஏழு) லோகங்களையும்
- உண்ணும் - திருவயிற்றில் வைத்துக் கொள்ளும்
- திறத்து - திறமையுடன்
- மகிழ்ந்து - உகந்து
- உண்ணும் - உண்கின்ற
- பிள்ளைக்கு - இக் கண்ணபிரானின்
- எழில் வண்ணம் கொள் - அழகிய நிறம் கொண்ட
- மகரம் குழை இவை - எங்கும் பிரகாசிக்கின்ற அழகுடைய மீன் வடிவ குண்டலங்களின் (காதணிகள்)
- திண்ணம் இருந்தவா காணீரே - திண்மையான அழகைக் காண வாருங்கள்!
- சேயிழையீர்! - அழகிய ஆபரணங்களை அணிந்துள்ள பெண்களே!
- வந்து காணீர்! - காண வாருங்கள்!
பிரளய காலத்தில் மண்ணும், மலையும், பெருங்கடல்களும் நிறைந்திருக்கின்ற இந்த பூவுலகத்தோடு சேர்த்து ஏழு உலகங்களையும், வெண்ணெய் உண்பது போல் எளிதாய், இலகுவாய் விரும்பி தன் திரு வாயால் காக்கும் திறமையால் மகிழ்ச்சியுடன் உண்டு தன் வயிற்றில் அடக்கி வைக்கிறான். அச்சிறந்த பண்புடைய கண்ணனின் திருக்காதுகளில், பொன் வண்ண ஒளி எங்கும் சிதறுகின்ற அழகுடைய மீன் வடிவ குண்டலங்கள் ஒவ்வொன்றும் எத்தனை பொருத்தமாய், அழகாய் இருக்கின்றதென்பதை வந்து பாருங்கள். இங்கே வந்து, இந்த பிள்ளையின் காதுகளுக்குப் பொருத்தமாய் அமைந்திருக்கின்ற இந்த மகரக் குண்டலங்களின் அழகினை வந்து பாருங்கள் என்று செம்மையான ஆபரணங்கள் அணிந்துள்ள பெண்களை அழைக்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment