||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
053 காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே|
கைகேயி, கேகய நாட்டு மன்னர் அஸ்வபதியின் மகளும், தசரத மன்னனின் மூன்று மனைவிகளுள் இளையவர் ஆவார். அழகும், வீரமும், விவேகமும் ஒரு சேர உருவான பெண். பரதன் இவருடைய மகன் ஆவார். ஸ்ரீராமனிடம் அதிக அளவு அன்பும் பாசமும் கொண்டவர்.
தசரத சக்ரவர்த்தி, ராமனுக்கு முடிசூட்ட எண்ணம் கொண்டு, மந்திரிகளுடன் ஆலோசனை முடிந்து ராமனுக்கு முடிசூட்ட நாளும் குறிக்கப்பட்டது. இராமனுக்கு முடிசூட்டு விழா என்று முரசு முழங்கியது. நாடே விழாக் கோலம் கொண்டு மக்கள் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். எல்லோரையும் விட இச்செய்தியால் அதிகம் மகிழ்ந்தவர் கைகேயி. பெருமிதம் கொண்டார்.

ஆனால், சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சியைப் போல், மந்தரை என்றொரு கூனி வீசிய வலையில் சிக்கிய கைகேயியின் மனமும் குணமும் முற்றிலுமாக மாறியது. ராமனுக்கு நாளை முடிசூட்டப் போகும் கனவில் மகிழ்ந்திருந்த அரசன் தசரதன் இரவு கைகேயியைக் காண வந்தார். அலங்கோலமாய் அமர்ந்திருந்த கைகேயியின் நிலை கண்டு பதறினான். “என்ன ஆயிற்று?”- என்று கேட்ட மன்னனிடம், “எனக்கு தாங்கள் இரு வரம் தருவதாய் முன்பு வாக்களித்தீர். இன்று அதை நான் கேட்கின்றேன். ஒன்று, ராமனுக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும். இரண்டு, 14 வருடங்கள் ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும்.”- என்றும் தசரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்டாள் கைகேயி.
கைகேயி தன் முடிவில் உறுதியாய் நின்றாள். தசரதன் கொடுத்த வாக்கை மீற முடியாமல் தவித்தான். இரவெல்லாம் மன்றாடியும், தசரதனால் கைகேயியின் மனதை மாற்ற இயலவில்லை. வேறு வழியின்றி வரத்தை வழங்கினார். தாயிடம் ஆசீர்வாதம் வாங்க வந்த ஸ்ரீ இராமன், தன் தந்தை மற்றும் தாயின் நிலை கண்டு பதறி, நடந்ததை வினவ, கைகேயியும் நடந்தவற்றைக் கூறினாள்.
ஆழ்ந்த மௌனத்திற்கு பின், சற்றும் பதறாமல், ஸ்ரீ இராமன் “சரியம்மா! தம்பி பரதன் நாடாளட்டும். நான் கானகம் புறப்படுகிறேன்.”-என்று கூறி, தாயிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு தந்தையிடம் விடை பெறச் செல்கிறார். "ராமா! நான் கொடுத்த வரத்திற்கு கட்டுப்பட்டு விட்டேன். நீ என்னை மதியாமல் அயோத்தியைக் கைப் பற்றியிருக்கலாமே" என்கிறான் மன்னன்
"தந்தையே! நான் ராஜ்ஜியத்திற்கு ஆசைப்படவில்லை. உங்கள் வாக்கைக் காப்பாற்றுவேன். பதினான்கு ஆண்டுகள் வனவாசம் புரிந்து திரும்புவேன்' என்றார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " தந்தையின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, மறுப்பேதும் கூறாமல், வார்த்தையில், செயலில், இதயத்தில் தெளிவு காட்டி, ஸ்ரீ இராமன் காட்டிற்கு சென்றாரே, அதுபோல் ஒரு தெளிவை பெருமாளிடம் நான் கொண்டுள்ளேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment