||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திருணாவர்த்தன் வதம்|
ஒரு நாள் யசோதை குழந்தையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு சீராட்டிக் கொண்டிருந்தாள். தீடிரென்று குழந்தை மிகவும் கனத்தை உணர்ந்தாள். அதன் பளுத் தாங்காமல் அவள் குழந்தையை மெதுவாகத் தரையில் உட்கார வைத்தாள். கடவுளைத் தியானம் செய்துவிட்டு யசோதை தன் வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றாள்.
அந்தச் சமயத்தில் குழந்தையைக் கொல்லுவதர்காகக் கம்சனால் ஏவப்பட்ட திருணாவர்த்தன் என்ற ஓர் அரக்கன் அங்கே வந்தான். அவன் இங்கும் அங்கும் பார்த்தான். யாரும் அருகில் இல்லை என்று தெரிந்ததும் சூறாவளி உருவம் எடுத்து, உட்கார்ந்திருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு வனத்தில் பறந்துச் சென்றான். அங்கிருந்து குழந்தையைக் கீழே போட்டுக் கொல்ல வேண்டும் என்பது அவனுடைய திட்டம்.
சூறாவளியினால் புழுதி எங்கும் கிளம்ப, மக்கள் கண் தெரியாமல் பயந்து அங்கும் இங்கும் ஓடினார்கள். குழந்தையைக் காப்பாற்ற யசோதை முற்றத்திற்கு ஓடி வந்தாள். ஆனால் அங்கே குழந்தை காணவில்லை. அவள் எங்கெங்கோ தேடினாள். ஆனால் குழந்தை அகப்படவில்லை. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கீழே விழுந்து அழ ஆரம்பித்தாள். அவளைத் தேற்றப் பல கோபிகைகள் அவள் வீட்டுக்கு விரைந்தனர்.
ஆனால் இங்கு ஆகாயத்திலோ திருணாவர்த்தன் மேலே செல்லச் செல்ல குழந்தையின் பளு அதிகரித்துக் கொண்டே போயிற்று. ஏதோ பெரிய மலையைத் தூக்கிச் செல்வது போல அரக்கன் உணர்ந்தான். பளுத்தாங்காமல் குழந்தையைக் கீழே தள்ளிவிடப் பார்த்தான். ஆனால் குழந்தையோ அவன் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டிருந்தது. அதனால் அரக்கனால் குழந்தையைக் கீழே தள்ள முடியவில்லை. குழந்தை அவன் கழுத்தை நெரித்து அவனைக் கொன்றது. உடனே அரக்கன் கீழே விழுந்தான். உடனே கோபியர்கள் அங்கே ஓடிவந்தார்கள். ஒன்றுமே நடக்காதது போல குழந்தை அந்த அரக்கனின் மீது விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். குழந்தைக்கு ஒன்றுமே நேரவில்லை என்பதைக் கண்டு யசோதை மிக்க மகிழ்ச்சியடைந்தாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment