||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
021 தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியாரைப் போலே|
மதுரகவி இல்லையென்றால் வைஷ்ணவத்தைப் போற்றிக் கொண்டாடும் ஆச்சார்ய வைபவம் என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்கும். ஓரிரு நூற்றாண்டுகள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பொது வழக்கில் இல்லாமல் போய்விட்டது. அந்தப் பாசுரங்கள் யாரிடம் வழக்கில் இருந்து வந்தது என்பதற்கும் சான்றுகள் இல்லை. கடவுள் செயல் என்று தான் சொல்ல வேண்டும். நாதமுனிகள், இரண்டு வைஷ்ணவர்கள் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரத்தை பாடக் கேட்டு அதன் தமிழிலும் வடிவிலும் பொருளிலும் மயங்கி அதன் பின்னால் சென்று தேடப்போக அவர் சென்று சேர்ந்த இடம் திருக்குருகூர். அங்கே 12000 முறை அந்தப் பாசுரத்தை பாராயணம் செய்து யோக நெறியில் நம்மாழ்வாரிடமிருந்து நாலாயிரத்தையும் பெற்றதாக வரலாறு. அப்படிப்பட்ட மதுரகவியாழ்வார் பிறந்த மண் இந்தப் பெண்பிள்ளை பிறந்த திருக்கோளூர் மண்ணே. இந்த திருக்கோளூர் பாண்டிய தேசத்தில் திருக்குருகூருக்கு (ஆழ்வார் திருநகரி) அருகில் உள்ளது. சித்திரையில் சித்திரை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் மதுரகவியாழ்வார். இவர் காலத்தால் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர்.
இவரது ஊருக்கு மிக அருகாமையில் உள்ள திருக்குருகூரில் உள்ள நம்மாழ்வாரின் ஞானத்தின் திண்மையை மதுரகவியார், வடநாட்டில் அயோத்திக்கு செல்லும் போது தான் அறிந்துக் கொண்டார். யாத்திரை முடித்து விட்டு திரும்பும் போது ஒரு அதியற்புதமான ஜோதி வானில் எழும்பிச் செல்வதை தனது யோக நெறியில் கண்டுணர்ந்த மதுரகவி அது எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தபோது தென்பாண்டி நாட்டில் உள்ள திருக்குருகூரிலிருந்து வருவதை அறிந்து அந்த திசையை நோக்கி சென்று, அங்கே எம்பெருமான் கோவிலில் ஒரு புளிய மரத்தடியில் அசைவின்றி பதினாறு வருடங்கள் இருக்கும் நம்மாழ்வாரின் தேஜஸ் தான் அந்த ஒளி தான் என்பதை புரிந்து அவரை சந்திக்கிறார்.
சிறு கல் ஒன்றை அவர் அருகில் போட அத்தனை வருடம் கண்மூடி யோகத்தில் ஆழ்ந்திருந்த நம்மாழ்வார் முதன்முதலாக கண் விழிக்கிறார். செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார். அதற்கு நம்மாழ்வார் "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று ஆத்மாவின் தன்மையை மிக அழகாகக் கூறினார். அன்று முதல் மதுரகவி நம்மாழ்வாரை தனது ஆசானாக ஏற்றுக் கொண்டார்.
அவரிடம் சரணடைந்து அவரே எல்லாமாக எண்ணி ஆசார்ய பக்தியோடு இருந்தவர் மதுகவியாழ்வார். ஆசார்யனை தவிர மற்ற தேவதைகள் இருக்கு என்பதை நாங்கள் நம்ப மாட்டோம். ஆசார்ய அபிமானமே உத்தாரகம். தன் அடியார்களிடம் பக்தி செலுத்தினால் தான் பகவானுக்கு பிடிக்கும். ஆசார்யனை பற்றினாலே, கைங்கர்யம் புரிந்தாலே எம்பெருமான் மோக்ஷம் குடுத்து விடுவான். எம்பெருமானை விட ஆசார்ய பக்தி தான் முக்கியம் என்று சொல்பவர் மதுரகவியாழ்வார். நம்மாழ்வாரை தவிர மற்றொரு தெய்வம் அவருக்கு தெரியாது. கோயிலுக்குள் செல்லும் போது பெருமான் சந்நிதியில் இருக்கும் பெருமான் கண்ணில் படவேண்டாம் என்று கண்ணை மூடி கொண்டு போய் ஆசார்யனை சேவிப்பார். அந்த அளவுக்கு ஆசார்ய பக்தி நிறைந்தவர் மதுரகவியாழ்வார்.
வைஷ்ணவத்தில் பகவத் சம்பந்தம் கிடைக்கிறதோ இல்லையோ ஆச்சாரிய சம்பந்தம் இருந்தால் போதும் பகவத் சம்பந்தம் தானே வந்து சேர்ந்து விடும். மாறாக ஆச்சாரிய சம்பந்தம் இன்றி நேரடியாக பெருமாள் சம்பந்தம் என்பது எளிதான விஷயமில்லை. வைஷ்ணவத்தின் சூட்சுமமே இதில்தான் அடங்கியுள்ளது. மதுரகவியாழ்வார் இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் மறைவுக்கு பின்னர் அவருடைய தங்கத்தினாலான திருமேனியை ஊர் ஊராக எடுத்துச் சென்று அவர் புகழ் பாடி வந்தார்.
"வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார், திருவாய்மொழிப் பெருமாள் வந்தார், திருநகரிப் பெருமாள் வந்தார், திருவழுதிவளநாடர் வந்தார், திருக்குருகூர்நகர் நம்பி வந்தார், கார்மாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார்" என்று பாட்டுப் பாடிக் கொண்டு செல்வது இவர் வழக்கம்.
பாடல் அங்கீகரம் என்பது இன்று மட்டுமல்ல அன்றும் பெரிய விஷயம். மதுரைத் தமிழ்ச் சங்கம் இறுதி செய்வதே வழக்கில் ஏற்றுக் கொள்ளப்படும். சங்கப்பலகை ஏற்றுக் கொள்ளுதல் என்ற மரபு கடைபிடிக்கப்பட்டது. நம்மாழ்வாரின் பாடல்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று மதுரையில் இருந்த தமிழ்ச் சங்கத்திற்கு பாடல் எழுதப்பட்ட ஓலைகளை எடுத்துச் செல்கிறார். அவருடைய எட்டு வரி, நான்கு வரிப் பாடல்களை எல்லாம் விட்டு விட்டு. கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே என்று திருவாய்மொழி (10.5.1) இரண்டு வரிப் பாடலை பலகையில் வைக்க தமிழ்ச் சங்கப் பலகை அதனை ஏற்றுக் கொண்டது என்பது வரலாறு.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதன் பிறகு நம்மாழ்வாரின் பாசுரப் பெருமைகளை அறிந்த புலவர்கள் அவரைக் குறித்து ஒரே நேரத்தில் அத்தனை புலவர்களும் ஒரே பாடலை இயற்றினார்கள் என்பதாகும்.
ஈயாடுவதோ கருடற்கெதிரே இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ
நாயாடுவதோ உறுமும்புலிமுன் நரி கேசரிமுன்நடையாடுவதோ
பேயாடுவதோ ஊர்வசிக்குமுன் பெருமானடிசேர் வகுளாபரணன்
ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பெறுமோ இவ்வுலகிற்கவியே
என்பது தான் அந்தப் பாடல்.
கண்ணிநுண் சிறுத்தாம்பு எனத் தொடங்கும் பதினொரு பாடல்களிலும் எம்பெருமானைப் பற்றி பாடாமல் தனது ஆச்சாரியரான நம்மாழ்வாரை பற்றி மட்டும் பாடியிருப்பதன் மூலம் ஆச்சாரிய சம்பந்தத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அந்த அளவுக்கு ஆசார்ய பக்தியோடு நான்
இல்லையே! அந்த நிஷ்டை என்னிடம் இல்லையே! ஆசார்யனை விட வேற தெய்வம் உண்டு என்று சொன்னேனே! ஆச்சாரியனைத் தவிர வேறு கடவுளை அறிந்ததில்லை என்று தலையில் வைத்துக் கொண்டாடும் மதுரகவியாழ்வாரைப் போல நான் கொண்டாடவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
இல்லையே! அந்த நிஷ்டை என்னிடம் இல்லையே! ஆசார்யனை விட வேற தெய்வம் உண்டு என்று சொன்னேனே! ஆச்சாரியனைத் தவிர வேறு கடவுளை அறிந்ததில்லை என்று தலையில் வைத்துக் கொண்டாடும் மதுரகவியாழ்வாரைப் போல நான் கொண்டாடவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment