||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிருஷ்ணனின் குறும்புகள்| 1
நாளடைவில் பலராமனும் கிருஷ்ணனும் தவழ ஆரம்பித்தார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து தவழ்ந்து சென்று விளையாடுவார்கள். அவர்களுடைய தண்டை மணிகளின் ஒலி காதுக்கு இனிமையாக இருக்கும்.
இந்தக் குழந்தைகள் தெருவில் செல்லும் பெண்களைத் தங்கள் தாயார்கள் என்று நினைத்துக் கொண்டு, அவர்கள் பின்னால் தவழ்ந்து செல்வார்கள். இதைக் கண்டு அந்தப் பெண்கள், "பலராமனும் கிருஷ்ணனும் எப்படித் தவழ்கிறார்கள் பார்!" என்று சொல்லி மகிழ்வார்கள்.
இந்தச் சிறுவர்கள் மற்றச் சிறுவர்களோடு சேர்ந்துக் கொண்டு குறும்புத்தனம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களுடைய குறும்புத்தனங்கள் கோபிகளை மகிழ்விக்கத் தான் செய்தன. இன்றும் கிருஷ்ணனுடைய லீலைகள் பக்தர்களுக்கு மகிழ்ச்சியைத் தான் அளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் கிருஷ்ணன் கோபிகளின் வீடுகளில் செய்த குறும்புத்தனத்தை பற்றி அந்தக் கோபிகள் புகார் செய்ததை யசோதை அடிக்கடி கேட்க வேண்டி வந்தது.
ஒரு கோபி சொல்லுவாள்: "நேற்று விடிய காலையிலேயே கிருஷ்ணன் என் வீட்டிற்கு வந்து விட்டான். நான் பசுக்களைக் கறக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். கடைசியில் மாட்டுக் கொட்டகைக்குச் சென்றால், கிருஷ்ணன் ஏற்கனவே கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டு விட்டதனால் கன்றுக் குட்டி எல்லாப் பாலையும் குடித்து விட்டது. திரும்பி பார்த்தால் தூரத்தில் கிருஷ்ணன் குறும்புச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பிடிப்பதற்காகச் சென்றேன். அவனோ ஓடி போய் இன்னொரு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டு விட்டான்".
இன்னொரு கோபி சொல்லுவாள்: "உன் மகன் திருடுவதில் பெரிய நிபுணன் ஆகி விட்டான். என் வீட்டில் வெண்ணெயையும் பாலையும் திருடுவதற்கு அவன் எத்தனை வழிகள் வைத்திருக்கிறான், தெரியுமா? அவற்றை அவன் சாப்பிட்டது போக, மீதியை மரங்களில் காத்திருக்கும் குரங்குகளுக்கு கொடுக்கிறான். உயரத்தில் உள்ள பானைகள் எட்டவில்லை என்றால் கற்களை விட்டெறிந்து அவற்றை உடைக்கிறான். அவனும் அவனுடைய நண்பர்களும் கீழே, "ஆ' என்று வாயைத் திறந்து கொண்டு நிற்கிறார்கள். பானையிலிருந்து வரும் தயிரைக் குடிக்கிறார்கள்". இப்படி தினமும் ஒவ்வொரு கோபிகைகள் யசோதை வீட்டிற்கு வந்து புகார் செய்து விட்டு போவார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment