||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
சகடாசுரன் வதம்|
குழந்தை கிருஷ்ணன் வளர்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு இப்பொழுது மூன்று மாதங்கள் ஆகியிருந்தன. அவன் குப்புறப் படுக்க முயன்று கொண்டிருந்தான். தவழவும் முயற்சி செய்தான். ஒரு நான் அவன் குப்புறப் படுத்துக் கொண்டு தன்னைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டதும் யசோதை அளவிலாத மகிழ்ச்சி அடைந்தாள்.
குழந்தையை முதன்முதலாக வீட்டை விட்டு வெளியே கொண்டுவரும் தினத்தை யசோதை கொண்டாட நினைத்தாள். அவள் கோகுலத்தில் உள்ள எல்லாக் கோபியர்களையும் அழைத்தாள். எல்லோரும் யமுனை நதிக் கரையை அடைந்தார்கள். அங்கு மேள தாளத்துடனும் மந்திர கோஷங்களுடனும் கிருஷ்ணனுக்கு மங்கள ஸ்நானம் செய்து வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு குழந்தை தூக்கக் கலக்கத்துடனும் அசதியாகவும் இருப்பதை யசோதை பார்த்தாள். வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. அதனால் மாடுகள் பூட்டப்படாமல் இருந்த ஒரு வண்டிக்கு அடியில் தொட்டிலை வைத்து குழந்தையைத் தொட்டிலில் கிடத்தினாள். பிறகு வந்தவர்களைக் கவனிக்கும் வேலை அவளுக்கு சரியாக இருந்ததனால் அதை கவனிக்கச் சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் சென்றதும், குழந்தை விழித்தெழுந்து அழ ஆரம்பித்தது. ஆனால் அங்கு இருந்த இரைச்சலில் குழந்தை அழுவது யசோதையின் காதில் கேட்கவில்லை. குழந்தை கோபித்துக் கொண்டு தன் சின்னஞ்சிறு கால்களால் உதைக்க ஆரம்பித்தது. என்ன ஆச்சரியம்! குழந்தை உதைக்க ஆரம்பித்ததும் அந்த வண்டி ஓர் ஆட்டம் ஆடி, பேரிரைச்சலுடன் உடைந்து கீழே விழுந்தது. சக்கரங்கள் அச்சிலிருந்து கழன்று வெளியே வந்தன. வண்டியில் இருந்த பால், தயிர் எல்லாம் கீழே கொட்டின.இதைப் பார்த்துக் கொண்டிருந்த சில சிறுவர்கள் பயந்து யசோதையிடம் ஓடிப் போய் குழந்தை செய்த காரியத்தைச் சொன்னார்கள். யசோதையும் மற்றவர்களும் பயந்து வண்டி இருந்த இடத்திற்கு ஓடி வந்தார்கள். வண்டி கீழே விழுந்து உடைந்து நொருங்கியதைக் கண்டு ஆச்சரியப் பட்டார்கள். தன் குழந்தையை ஏதோ ஆவி பிடித்துக் கொண்டு உள்ளது என்றும், அதுதான் வண்டியை உடைத்திருக்க வேண்டும் என்றும் யசோதை நினைத்தாள். ஆனால் குழந்தை உதைக்கத்தான் வண்டி நொறுங்கியது என்று எல்லாச் சிறுவர்களும் சொன்னார்கள்.
உடனே யசோதை சில ப்ரோகிதர்களை அழைத்து, ஆவியை விரட்ட மந்திரங்களை உச்ச்சரிக்கும்படி சொன்னாள். ஆனால் இவையெல்லாம் குழந்தையை ஒன்றும் பாதிக்கவில்லை. அது தன் மோகனச் சிரிப்புடன் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்தது. நடந்தது என்னவென்றால் ஓர் அரக்கன் கம்சனின் ஏவுதலின் பேரில் வண்டி உருவம் எடுத்துக் கொண்டு அங்கே இருந்தான். குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதற்காகத்தான் அவன் கோகுலம் வந்திருந்தான். ஆனால் குழந்தை வடிவத்தில் இருந்த இறைவனுக்கு எல்லா விஷயங்களும் தெரியும். அதனால் தான் ஓர் உதை உதைத்து, அவர் வண்டியையும் அந்த அசுரனையும் அழித்தார். அந்த அசுரனின் பெயர் சகடாசுரன் என்பதாகும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment