||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 11 - ஆயிரம் நாமங்களால் பவித்திரனைப் பாடு
திருப்பல்லாண்டு - பதினொன்றாம் பாசுரம்
அல்வழக்கொன்றுமில்லா*
அணி கோட்டியர் கோன்*
அபிமான துங்கன் செல்வனைப் போல*
திருமாலே நானும் உனக்கு பழவடியேன்*
நல் வகையால் நமோ நாராயணாவென்று*
நாமம் பல பரவி*
பல் வகையாலும் பவித்திரனே*
உன்னை பல்லாண்டு கூறுவனே| (2)
இதில் அண்டக்குலம் பாசுரத்தில் சொல்லப்பட்டு, நெய்யிடை பாசுரத்தில் வந்து சேர்ந்த ஐச்வர்யார்த்திகளுடன் சேர்ந்து திருப்பல்லாண்டு பாடுகிறார்.
- அல் வழக்கு ஒன்றுமில்லா - அநீதிகள் ஒன்றும் இல்லாமல் இருக்கிற
- அணிகோட்டியர் - அழகிய திருக்கோட்டியூரில்
- கோன் - உள்ளவர்களுக்குத் தலைவரும்
- அபிமாந - ஸ்ரீ வைஷ்ணவ அபிமானத்தால்
- துங்கன் - சிறந்தவருமான
- செல்வனை போல - செல்வ நம்பியைப் போல
- திருமாலே - ச்ரியபதியே!
- நானும் - அடியேனும்
- உனக்கு - தேவரீருக்கு
- பழ அடியேன் - பழமையான தாஸனாய் விட்டேன்
- நல் வகையால் - அடியேனுக்கு நன்மையுண்டாகும் படி
- நமோ நாராயணா என்று - திருமந்திரத்தை அநுஸந்தித்து
- பல நாமம் பரவி - தேவரீருடைய அனேக திருநாமங்களைச் சொல்லியேத்தி
- பல் வகையாலும் - எல்லா விதங்களாலும்
- பவித்திரனே - பரிசுத்தனான பெருமானே
- உன்னை பல்லாண்டு கூறுவன் - தேவரீருக்கு மங்களாஸாஸநம் பண்ணுவேன்
எம்பெருமானை சரியாக தெரிந்து கொள்ளாமல் இத்தனை நாள் வரை வேறு அநீதி வழிகளில் சென்று கொண்டிருந்தவர்களை மாற்றி அமைத்து, ஆத்மா பகவானுக்கு சேஷமாய் இருப்பவன் தான், ஸ்வதந்த்ரன் அல்லன் என்பதையும் புரிய வைத்தான் எம்பெருமான். திருமகள் கேள்வனே! தோஷங்கள் சிறிதும் இல்லாதவரான, இந்த உலகுக்கே ஆபரணமான திருக்கோஷ்டியூர் திவ்யதேசத்தில் உள்ளவர்களுக்குத் தலைவரான, “எம்பெருமானுக்கே அடிமைப்பட்டவன் நான்” என்னும் அபிமானத்தாலே மிகச் சிறந்தவரான செல்வநம்பியைப் போலே, அடியேனும், நாதனான உனக்கு, நெடுங்காலமாக அடிமையாய் இருக்கிறேன். உன்னுடைய ஸ்வரூப, ரூப, குண, விபூதிகளாலே எங்களைப் புனிதமாக்குபவனே! நல்ல முறையில் அஷ்டாக்ஷர மந்த்ரத்தை அனுஸந்தித்து, உன்னுடைய பல திருநாமங்களையும் சொல்லி, உனக்குப் பல்லாண்டு பாடுவேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment