About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
ஏற்ற மணவாளர் இசைத்தார் அந்தாதி வெண்பா*
தோற்றக் கேடில்லாத தொன் மாலைப் போற்றத்*
திருப்பதியா நூற்று எட்டினையும் சேவிப்போர்*
கருப்பதியா வண்ணம் உண்டாக*

  • திருப்பதி ஆ(ம்) நூற்றெட்டினையும் - நூற்றெட்டு திருப்பதிகளையும்
  • சேவிப்போர் - சேவிப்பவர்கள்
  • கரு பதியா வண்ணம் உண்டாக - தமக்கு மீண்டும் தாயின் கருவில் சேராதபடி செய்ய
  • ஏற்ற மணவாளர் - சிறப்புள்ள அழகிய மணவாள தாசர் என்பவர்
  • தோற்றம் கேடு இல்லாத - பிறப்பும் இறப்பும் இல்லாத
  • தொல் மாலைப் போற்ற - பழமையான திருமாலைத் துதிக்கும்படியாக
  • அந்தாதி வெண்பா - வெண்பாவினால் ஆன இந்த நூற்றியெட்டு திருப்பதி அந்தாதியை
  • இசைத்தார் - பாடி அருளி உள்ளார்

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்

சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40; பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் - 18, மலை நாட்டுத் திருப்பதிகள் (கேரள) - 13, நடு நாட்டுத் திருப்பதிகள் - 2, தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22, வட நாட்டுத் திருப்பதிகள் - 12 பரம பதமான திருநாடு - 1 – என்ற 108 வைணவத் திருப்பதிகளை நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியின் வரிசையில் இனி அனுபவிக்கலாம்

பதின்மர் உரைத்த பதி ஒரு நூற்று எட்டும்
துதி செய்ய அந்தாதி சொன்னான் அதிக
குணவாள பட்டர் இரு கோகனத் தாள் சேர்
மணவாள தாசன் வகுத்து

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என்
சோர்வந்த சொல்லில் சுருங்குமோ ஆர்வம்
ஒருவர் அங்கு அங்கு ஒயில் உகந்து அவரை ஆள்வான்
திரு அரங்கம் கோயில் சிறப்பு

  • ஒருவர் – ஒருத்தர்
  • அங்கு அங்கு – அந்த அந்த விஷயங்களில் (பலவகையான உலகப் பற்றுக்களில்)
  • ஆர்வம் ஓயில் – ஆசை ஓழிந்தால்
  • அவரை – அவ்வாறு பற்றற்ற அன்பரை
  • உகந்து – விரும்பி
  • ஆள்வான் – அடிமை கொள்பவனாகிய எம்பெருமானது
  • திருவரங்கம் கோயில் – திருவரங்கம் பெரிய கோயில் என்னும் திருப்பதியின்
  • சிறப்பு – பெருமையானது
  • சீர் வந்த உந்தி திசைமுகனால் அல்லாது – சிறப்புப் பொருந்திய (திருமாலின்) நாபி கமலத்தில் பிறந்த நான்கு திக்கையும் நோக்கிய நான்கு முகங்களை உடைய பிரம்ம தேவனைத் தவிர,
  • என் சோர் வந்த சொல்லில் சுருங்குமோ – எனது குற்றம் பொருந்திய சொற்களில் அடங்குமோ?

பகவானின் நாபிக் கமலத்தில் உதித்த நான்முகனைத் தவிர என்னுடைய புன்மையான சொற்களால், தன்னைச் சரணமென்று சேர்ந்தவரை அன்போடு ஆட்கொள்ளும் திருவரங்கன் கோயிலின் சிறப்பைச் சொல்ல முடியுமோ?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment